ஸ்ரீலங்கா விமான நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் நிறுவனத்தின் பாதுகாப்பு பிரதானியை உடனடியாக பதவியில் இருந்து நீக்குமாறு பாரிய ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழு அரச நிறுவனங்கள் தொடர்பான அமைச்சின் செயலாளருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் நடந்த ஊழல் மோசடிகள் சம்பந்தமான விடயங்களை ஆணைக்குழுவிடம் வெளியிட்ட அதிகாரிகளுக்கே இந்த அதிகாரி கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் பாதுகாப்பு பிரதானியாக பணியில் இணைந்து மூன்று முறை பணி நீடிப்பை பெற்றுக்கொண்டதாக கூறப்படும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பியதிகமகே சந்திரவங்ச என்பவரையே பதவியில் இருந்து நீக்குமாறு ஆணைக்குழு உத்ததரவிட்டுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளர்களாக பணியாற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, (தலைவர்) மேல் நீதிமன்ற நீதிபதிகள் விக்கும் களுவாராச்சி, கிஹான் குலதுங்க, பியசேன ரணசிங்க, முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் பீ.ஏ. பத்மதிலக்க ஆகியோரே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் சம்பந்தமான ஆணைக்குழுவிற்கு கிடைத்த 4 முறைப்பாடுகள் குறித்து ஆணைக்குழு விசாரணைகளை நடத்தியது.