கொழும்பு குப்பைகளை கரதியான பிரதேசத்தில் கொட்டுவதை தடைசெய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை கரதியான பிரதேசத்தில் கொட்டுவதை தடைசெய்யுமாறு கோரி பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் கரதியான பிரதேச மக்களால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

போராட்டத்திற்கு கரதியான பகுதியிலுள்ள ஏராளமான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் “கொழும்பு குப்பை எங்களுக்கு வேண்டாம், எமது பிரதேசத்தை மீதொட்டமுல்லயாக மாற்ற வேண்டாம்” என்ற பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை, போராட்ட இடத்திற்கு வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கருத்து தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் குப்பைகளுக்கான தீர்வுத்திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தோம். ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின் புதிய அரசாங்கம் அந்த திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வில்லை என குற்றம் சுமத்தியிருந்தார்.

இதன் விளைவாகவே தற்போது பல உயிர்கள் பறிபோயுள்ளன. பாரிய அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவது பொறுத்தமான விடயமே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த அனர்த்தம் குறித்து விவாதிப்பதற்கு பாராளுமன்றத்தில் நாட்களை ஒதுக்கி தருமாறும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கோரிக்கையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.