“யாருடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்குமோ அவர்களால் சொர்க்கத்தில் நுழைய முடியாது”

தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு போலியான ஒரு அடக்கத்தை வெளிக்காட்டுவது என்பது தற்பெருமையின் தந்திரமாகவே இருக்கின்றது.

புகழுக்கு ஆசைப்படுவதே தற்பெருமையின் அடிப்படையாக உள்ளது. தற்பெருமை என்பது மிகவும் நுட்பம் வாய்ந்த ஒன்றாகும். அது நம்மையறியாமலேயே நமக்குள் குடியேறியும் விடுகின்றது.

சமுதாயத்தில் நமது கீர்த்தியை மேம்படுத்திட பலவழிகளிலும் நம்மை பெருமை பேசவைப்பதும் இந்த தற்பெருமைதான். போலித்தனமான இப்பெருமை இரட்டைத் தன்மை கொண்டதாகும். உள்ளத்தில் ஒன்றும் வெளியே மற்றொன்றும் என இரண்டு விதமாக இது நம்மை செயல்பட வைக்கிறது. உள்ளதை உள்ளபடி செய்கின்ற ஒற்றைத் தன்மைதான் இறைவனின் நேசத்திற்குரியதாகும்.

இறைவன் பொருத்தத்திற்காகவே அன்றி வேறு எந்த எதிர்பார்ப்பும் இன்றி நாம் செயல்படும் போதுதான் தற்பெருமை நம்மை விட்டும் மறைந்து விடுகின்றது.

உண்மை எங்கே இருக்கின்றதோ அதனை நாடியே உலகம் ஓடி வரும். அதற்கு போதனையே போதுமானதாகும். வலியுறுத்தலோ, வற்புறுத்தலோ அதற்கு அவசியமற்றதாகி விடுகின்றது.

எங்கே வற்புறுத்தல் இல்லையோ அங்கேதான் உண்மையும் இருக்கும். அதிக வலியுறுத்துதல் என்பது வலு இழந்தவர்களின் செயலாகவே மதிக்கப்படும். உண்மையில் பணிவுடையவர்கள் அப்பணிவுக்கு எப்போதுமே உரிமைக் கோருவதில்லை. இதுவே தற்பெருமை அற்றவர்களின் அடையாளமாகும்.

இறைவனை நேசிக்கிறேன் என்று கூறும் நம்மில் பலர் தனது குடும்பத்தையே சரியாக நேசிக்க தெரியாதவர்களாக இருக்கிறோம். உறவுகளை மதிக்க மறுக்கின்றோம். உண்மையில் இறைவனின் நேசம் என்பது அவனது படைப்புகளிடமும் நேசம் பாராட்டுவதாகவே இருக்கும்.

பொய் கூறுவது, தற்பெருமை பேசுவது, முகஸ்துதியை எதிர்பார்ப்பது போன்றவைகள் சைத்தானின் கொடிய ஆயுதங்களாக உள்ளது. அதனைக் கொண்டு அவன் நம்மை வீழ்த்திட முயற்சிக்கின்றான்.

அதனை ‘சத்தியம்’ என்ற இறைவனின் கேடயத்தைக் கொண்டுதான் சைத்தானின் கோரத் தாக்குதலிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்த தற்பெருமையை கைவிட்டால்தான் சொர்க்கத்தை ருசிக்க முடியும் என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்கள்.

‘யாருடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்குமோ அவர்களால் சொர்க்கத்தில் நுழைய முடியாது’ என்றார்கள். இன்னும் இது குறித்து இறைவனும் தனது திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:

‘இன்னும் (பெருமை கொண்டு) உன்னுடைய முகத்தை (மற்ற) மனிதர்களை விட்டும் திருப்பி விடாதே. பூமியில் கர்வம் கொண்டு நடக்காதே. நிச்சயமாக அல்லாஹ் பெருமையடித்து கர்வம் கொள்ளும் எவரையும் நேசிப்பதில்லை’. (31:18)

சகல நன்மைகளையும் அழித்துவிடும் தற்பெருமையின் பிடியில் சிக்காமல் இருப்பதே இறைவனின் நெருக்கத்தை நமக்கு பெற்றுத் தரும் என்பதை இவ்வசனம் நமக்கு நினைவூட்டுகிறது.

‘ஈமான்’ என்ற இறைநம்பிக்கை என்பது விலைமதிக்க முடியாத ஒரு மாபெரும் பொக்கிஷமாகவே இருக்கின்றது. அதனை உலக இன்பங்களைப் பெறுவதற்காக தொலைத்து விடக்கூடாது.

செல்வந்தர்களின் ஆதரவையும், பாராட்டையும் பெறுவதற்காகவே நம்மில் பலர் அவர்களை வானளாவ புகழ்ந்து பேசியும், அவர்களின் செல்வத்தைக் பெறுவதற்காக நெளிவு சுளிவாகவும் நடந்து கொள்கின்றோம். இது மார்க்க பற்றுள்ளவர்களின் அடையாளமாக கருதமுடியாது.

இறைவனுக்கே அடிபணிவோம் என்று வாயால் கூறிக்கொண்டு அதிகாரம் படைத்தவர்களின் அநீதியைக் கண்டு அஞ்சுவதும், அடிபணிவதும் நல்லோரின் நடைமுறையாக ஆகாது.

இறைவனின் பார்வையில் இருந்து யாராலும் தப்ப முடியாது என்றும் அவன் நம்முடைய கண்கள் செய்யும் சதி மோசத்தையும் இதயத்தில் நெளியும் எண்ணங்களையும் பார்க்கின்ற ஆற்றல் வாய்ந்தவன் என்றும் நமது எண்ணம் நிலைபெறுமானால் தற்பெருமை என்பது துளியும் நம்மிடம் இருக்காது.

இறைவனின் விருப்பத்தை மனநிறைவுடன் ஏற்று நடப்பதும் சுயகருத்து கூறாமல் அமைதியைக் கடைப்பிடிப்பதும் பணிவான இதயத்தோடு இறைவனிடம் மன்றாடுவதும் தற்பெருமை நம்மைவிட்டும் அகற்றிட உதவும்

எல்லா பெருமையும் புகழும் இறைவனுக்கே சொந்தம். நாமெல்லாம் இவ்வுலகிற்கு தற்காலிகமாக வந்து செல்லும் பயணிகளாகவே இருக்கின்றோம் என்ற எண்ணத்தில் வாழ்வதுதான் சிறப்புக்குரிய இரு உலக வாழ்வையும் பெற்றும் தரும்.