யானை அடிக்க வருவதற்கு முன்னராக தானே அடித்துக் கொண்டு தற்கொலை செய்ய முயற்சிப்பது கோழைத்தனம்

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

கல்முனை ஸாஹிறா கல்லூரி அதிபர் பதுருதீன் நேற்று (03) முதல் திடீரென கல்முனை கல்வி வலய அலுவலகத்தில் தனது பொறுப்புகளை ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் எவருக்கும் எதனையும் கூறாது தனது தொலைபேசி இணைப்பையும் நேற்று துண்டித்திருந்தார். (மர்மமான மலேஷிய விமனம் போன்று) அவரது இந்த நிலைப்பாடு பாடசாலை மட்டத்திலும் கல்விச் சமூகத்தினரிடையேயும் கவலையையும் ஏமாற்றத்தையும் அளித்ததுடன் பல்வேறு சந்தேகங்களையும் தோற்றுவித்தது.

கடந்த சில மாதங்களாக பதுருதீன் அவர்கள் கல்முனை ஸாஹிறா கல்லூரியின் அதிபராக தொடர்ந்து பணியாற்றுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தார். இந்த நிலையில் கல்முனை ஸாஹிறா கல்லூரி பழைய மாணவர் சங்கம் மற்றும் கொழும்புக் கிளை ஆகியன மிகுந்த பிரயத்தனங்களை முன்னெடுத்து அவரது இடமாற்றத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்திருந்த நிலையில், நேற்றைய தினம் அவர் எவருக்கும் எதனையும் கூறாது கல்லூரியிலிருந்து வெளியேறியுள்ளமை சில சந்தேகங்களைத் தோற்றுவித்ததுடன் இவர் மீது ஏதும் அழுத்தங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

இதேவேளை, அவர் நேற்று மாலை வரை தனது கைத்தொலைபேசியை துண்டித்து விட்டு மருதமுனை கடற்கரையில் மௌன விரதம் இருந்ததும் ஏனோ தெரியவில்லை. குளத்துடன் கோபித்துக் கொண்டு எதனையோ கழுவாமல் இருந்தவன் கதை போன்றே இது உள்ளது.

தனக்கு என்ன நடந்ததது என்பது தொடர்பில் அவர் பாடசாலையின் பிரதி அதிபர் உட்பட முக்கியமானவர்களுக்கோ இன்றேல் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கங்களுக்கோ அதுவும் இன்றேல் ஒரு சிலருக்கேனும் தெரிவித்திருக்க முடியும். ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரியின் இந்த பொறுப்பற்ற செயற்பாடு வெறுப்பை தோற்றுவித்துள்ளது.

மேலும் நேற்றிரவு கல்முனை ஸாஹிறா கல்லூரி அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த விவகாரம் பற்றி நான் வினவிய போது அனைத்தையும் நிராகரித்த அவர், தான் நேற்று தனது உத்தியோகபூர்வ கடமை ஒன்றுக்காக கவ்முனை கல்வி வலய அலுவலகத்துக்குச் சென்றதாகவும். தான் ஸாஹிறாவை விட்டு வெளியேறவில்லை என்றும் என்னிடம் தெரிவித்து இன்று தான் பாடசாலைக்கு கடமைக்காகச் செல்வேன் என்றும் கூறினார்.

ஆனால், இன்று (04) அவர் பாடசாலைக்குச் செல்லவில்லை என தெரிய வருகிறது. அத்துடன் அவர் தனது தொலைபேசி இணைப்பை மீண்டும் இடைநிறுத்தி வைத்து விட்டு நேற்றைய நிலைப்பாட்டில் உள்ளார்.

நேற்று அவர் என்னிடம் தொலைபேசியில் உரையாடிய போது தன்மீது சிலர் அழுத்தங்களைப் பிரயோகிப்பதாகவும் அது தனக்கு மன உலைச்சலைத் தருவதாகவும் கூறினார்.

எனவே, இந்த விடயம் மிக..மிக சீரியஸான ஒன்றாகும். தனி மனிதர்களின் அபிலாஷைகள், சதிகளுக்குள் கல்முனை ஸாஹிறா சிக்கிக் கொள்வதன் ஊடாக கல்வி நடவடிக்கைகளும் நிர்வாக இயந்திர செயற்பாடுகளும் முடக்கப்பட்டு பல்வேறு விளைவுகளை எதிர்நோக்கும் அபாயம் இதனால் தோன்றலாம்.

கல்முனை ஸாஹிறா கல்லூரியின் அண்மைக்கால வரலாற்றின் அளப்பரிய வளர்ச்சிக்கு பிரதான காரணமானவர் என பலராலும் பாராட்டுப் பெற்ற இவர், இவ்வாறு திடீரென அங்கிருந்து அழைக்கப்பட்டதன் பின்ணிகள் என்ன?

அண்மையில் வெளியான கல்வி பொதுத் தராதர பரீட்சை முடிவுகளில் இந்தக் கல்லூரி மேம்மட்ட அறுவடையை பெற்று பாராட்டையும் பெருமையையும் சேர்த்திருந்த நிலையில் திடீரென இவ்வாறானதொரு நிலைமை அவருக்கு ஏற்பட்டதற்கான காரணம் என்ன?

எனவே, இந்த விடயத்தில் கல்முனை கல்விச் சமூகம், புத்தி ஜீவிகள், பள்ளிவாசல் நிர்வாகம் உட்படலான அனைத்து முக்கிய சக்திகளும் ஒன்றிணைந்து உடனடித் தீர்வைக் காண வேண்டும்.

தனிப்பட்ட நபர்களின் வெறுப்பு, விருப்பு, சண்டித்தனங்களுக்கு இடமளிக்காமல் கல்முனை ஸாஹிறா என்ற உணர்வுடன் செயற்பட வேண்டும்.

இதேவேளை கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் அதிபரான பதுருதீன் அவர்களும் இந்த விடயத்தில் ஓடிப் பிடித்து, மறைந்து விளையாட வேண்டிய தேவையில்லை. நடந்தவற்றை பகிரங்கப்படுத்தி விட்டு ஒரு தீர்மானத்துக்கு வருவதே சிறந்தது. ஏனெனில் பதுர்தீன் அவர்கள் இல்லாவிட்டால் கல்முனை ஸாஹிறா கல்லூரி மூடப்படமாட்டாது. ஆனால், தனக்கு நடந்தவற்றை அம்பலபப்டுத்தி சதிகாரர்களை மக்கள் நீதிமன்றில் நிறுதுத்தும் முதுகெலும்பாவது அவருக்கு இருக்க வேண்டும். யாருக்கும் பயந்து தொடை நடுங்க வேண்டிய தேவை இல்லை. யானை தன்னை அடிக்க வருவதற்கு முன்னராக தானே அடித்துக் கொண்டு தற்கொலை செய்ய முயற்சிப்பது கோழைத்தனம்.அவ்வாறானதொரு கோழை ஸாஹிறாவுக்கு தேவையில்லை.

மேலும் இந்த விவகாரம் தொடர்பில் உடனடியாக நான் பிரதியமைச்சர் ஹரீஸ், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் நிஸாம் ஆகியோரை தொடர்பு கொண்டு அனைத்தையும் விபரமாகக் கேட்டறிந்தேன். அவர்கள் கூறியவற்றை தேவை ஏற்படும் பட்சத்தில் வெளியிடத் தயாராகவுள்ளேன்.