அணையும் ஆயிரம் விளக்குகள்

file image

அவர் முகத்தில் தோல்வியின் பயம் தெளிவாகத் தெரிகிறது.ஏமாற்றி அரசியல் செய்ததன் வினையை அவர் அறுவடை செய்யும் காலம் நெருங்கிவிட்டதை அவரின் சோகமான முகம் சொல்லிவிடுகிறது.கூட்டத்தில் யாராவது சத்தம் போட்டுக் கத்திவிடுவார்களோ என்ற பயம் அவர் கண்களில் தெளிவாகத் தெரிகிறது. நீரருந்திக்கொண்டிருக்கும் மான்கூட்டம் திடீரென நிமிர்ந்து சற்றும் முற்றும் பார்ப்பது போல் அவர் கண்கள் அங்கும் இங்கும் மிரண்டு பார்க்கின்றன.குற்றமுள்ள அவர் நெஞ்சு குறுகுறுக்கிறது.தோற்கவே மாட்டோம். மரச்சின்னத்தையும் ஆதவன் பாட்டையும் வைத்து இந்த மட்டக்களப்பானை முட்டாளாக்கலாம் என்று இத்தனை வருட காலமும் அவர் நினைத்திருந்த அந்த நம்பிக்கை கடந்த இரண்டு கூட்டங்களிலும் பொய்யாக்கப்படுவதை அவர் நேரடியாகக் கண்டிருப்பார்.மக்கள் மெதுமெதுவாக விழித்துக்கொள்கிறார்கள்.எமது முயற்சிகள் பலனற்றுப்போகவில்லை.

ஒரு காலம் இருந்தது.அம்பாரை மாவட்டத்திற்கு காங்கிறசின் தலைவர் வருவது பெருநாளாகக் கொண்டாடப்பட்ட ஒரு காலம் இருந்தது.அவரின் முகத்தைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாகக் குழுமியிருந்த காலம் இருந்தது.தலைவர் தனக்கு கைகொடுத்துவிட்டார் என்பதை ஆயுட்காலச் சாதனையாக மக்கள் பேசிய ஒரு காலம் இருந்தது.அந்தத் தலைவர் மக்களையும்,அந்த மக்களின் மண்ணையும் நேசித்தார்.மக்களும் அவரை நேசித்தார்கள்.இவ்வாறுதான் காங்கிறஸ் ஒரு காலத்தில் இருந்து வந்தது.

ஆனால் இன்றோ காங்கிறஸ் கேட்பாரற்று கிடக்கிறது.ஹக்கீமை இப்பொழுது மக்கள் ஒரு அந்நியனாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.மண் வாசனை வேறு மலை வாசனை வேறு என்று மக்களுக்கு இப்போது புரிகிறது.சொந்த மண்ணை ஆக்கிரமித்திருக்கும் அந்நியர்களாகத்தான் ஹக்கீமும் அவரது அடிவருடிகளும் இன்று பார்க்கப்படுகிறார்கள். இவர் எம்மைச் சார்ந்தவரல்ல என்று எண்ணுகிறார்கள். ஹக்கீமால் எங்களைப் புரிய முடியாது என்று மக்களுக்குப் புரிகிறது.ஹக்கீம் மக்களை ஏமாற்றும் வித்தைகள் எல்லாம் மக்களுக்கு மெதுமெதுவாகப் புரிய ஆரம்பிக்கிறது.மேடைகளில் வார்த்தைக் கோலங்கள்,ஆக்ரோஷங்கள்,உணர்ச்சித் ததும்பல்கள் என்று பேசிவிட்டு நிதர்சனத்தில் அதற்கு நேர் எதிராகச் செயற்படுபவர் ஹக்கீம் என்று எல்லோருக்கும் புரிகிறது.இவை அனைத்தும் கடந்த இரண்டு கூட்டங்களில் தெளிவாகத் தெரிகிறது.

இப்போது ஆதவன் பாட்டுக்கு கைதட்டல் இல்லை.நாரே தக்பீருக்குப் பதில் இல்லை.சனக்கூட்டம் இல்லை.கற்கள் வீசுகிறார்கள் மக்கள்.கத்திக் கூப்பாடு போடுகிறார்கள். அவர் பேசும்போது முகப்புத்தக நேரலையில் நூற்றுக்கு 95 சதவீனமானவர்கள் விமர்சித்தே கொமண்ட் செய்கிறார்கள். ஹக்கீம் தோல்வின் கசப்பைச் சுவைக்க ஆரம்பித்திருக்கிறார்.

ஹக்கீமின் தவறுக்கு பங்காளிகள் காங்கிறசின் போராளிகள்தான்.ஹக்கீமும் காங்கிறசும் மோசமாகப் போனதற்கான காரணத்தை அவர்கள்தான் ஏற்கவேண்டும். எத்தனை விபச்சாரம் செய்தாலும், எத்தனை இணைவைப்புச் செய்தாலும், எவ்வளவு ஊழல் செய்தாலும்,ஒரு ஆதவன் பாட்டைப் போட்டு, நஹ்மதுஹு வனுசல்லியலா ரசூலிஹில் கரீம் என்று ஆரம்பித்து இது உங்களின் கட்சி,நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்று உணர்ச்சி கொப்பளிக்க பேசும்போது அனைத்தையும் மறந்து மகுடிக்காடும் பாம்புகளைப் போல மட்டக்களப்பான்கள் (கிழக்கு முஸ்லீம்களுக்களை விழிக்கும் கொச்சை வார்த்தை) மடையர்களாகி எமக்கு வாக்குகளை அள்ளிப்போடுவார்கள் என்ற எண்ணத்தை அவரில் விதைத்தது நாம்தான்.

இதனால்தான் எமது பிரதேசத்தில் காங்கிறஸ் அபிவிருத்தி செய்யவுமில்லை,உரிமைகளைப் பெற்றுத்தரவுமில்லை.ஆனால் அவர்களுக்கு வாக்குகள் மட்டும் விழுந்து கொண்டே இருந்தது.அபிவிருத்தி செய்யாவிட்டால்,உரிமைகளைப் பெற்றுக்கொடுக்காவிட்டால் இம்மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்ற பயம்தானே ஜனநாயக அரசியல்வாதிகளை மக்கள் பக்கம் திரும்பவைப்பது. அந்தப் பயத்தை உருவாக்காமல் நீங்கள் என்ன செய்தாலும் நாங்கள் வாக்குப்போடுவோம் என்ற மனநிலையை அவர்களுக்கு உருவாக்கியது காங்கிறசின் போராளிகள்தானே.நாம் தவறாக நடந்து கொண்டால் மக்கள் எம்மைத் தூக்கி வீசிவிடுவார்கள் என்ற எண்ணத்தை ஹக்கீமிடம் நாம் விதைத்திருந்தால் இந்த நிலைக்கு காங்கிறஸ் போயிருக்காது.

மக்களின் அபிமானங்களைப் பயன்படுத்தி அதிகாரத்திற்கு வந்ததன் பின் மக்களை ஏமாற்றி அரசியல் செய்பவர்கள் நிலைத்து நின்றதாக சரித்திரமே இல்லை.அதே மக்களால் அவர்கள் ஓட ஓட விரட்டப்பட்டதாகத்தான் வரலாறு சொல்கிறது.ஒரு இடைவெளி கொடுத்துவிட்டு இறுக்கிப்பிடிப்பதுதான் அல்லாஹ்வின் சுன்னாவும் கூட.
இன்னொரு தேர்தல் வந்தால் ஹக்கீம் காங்கிறஸ் தோற்றுப் போய்விடும்.அது அவருக்கு நன்றாகத்தெரியும். இனி எம்மை வைத்து முட்டாளாக்க முடியாது என்பதை அண்மைக்காலங்களில் ஹக்கீம் புரிந்திருப்பார்.

ரணில் ஐக்கிய தேசியக் கட்சியில் தலைவராக இருக்கும் வரைக்கும் அந்த வாகனத்தில் நான் ஏற்மாட்டேன் என்று அஷ்ரப் அவர்கள் கூறியது போல ஹக்கீம் காங்கிறசின் தலைவராக இருக்கும் வரைக்கும் அந்த மரத்தால் எமக்கு எந்தப் பயன்பாடும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இது எமது மண்ணை ஹக்கீம் என்னும் ஆக்கிரமிப்பாளனிடம் இருந்து விடுவித்துக் கொள்ளும் ஒரு சுதந்திரப்போராட்டமாக இருக்கவேண்டும். கேவலமாக அழிந்து போவதா கௌரவமாக அழிந்து போவதா என்பதை ஹக்கீம்தான் தீர்மானிக்க வேண்டும்.அவராக விலகிப்போனால் முஸ்லீம்களின் தலைவராக ஒரு காலத்தில் இருந்தார் என்ற கௌரவத்தோடு சேர்த்த செல்வங்களை செலவு செய்து கொண்டு தனது இறுதிக்காலத்தை ஒரு கறுவாத்தோட்டத்திலோ அல்லது ஒரு கராம்புத்தோட்டத்திலோ கழிக்கலாம்.

இல்லை.நான் இறுதிவரை தலைவராகத்தான் இருப்பேன் என்று அவர் அடம்பிடித்தால் எந்த மக்கள் அவரை தலை மீது சுமந்தார்களோ அந்த மக்களால் அவர் தலை கவிழ விரட்டப்படுவார்.கூனிக்குறுகி,குடும்பத்தினரின் முகங்களை ஏறிட்டுப்பார்க்க முடியாமல,வீதியில் போக முடியாமல்,தெரிந்த தெரியாதவர்கள் எல்லாம் காறி உமிழ்ந்து அவமானத்தால் ஒழிந்து வாழ்ந்து அழிந்து போகும் நிலை அவருக்கு வரும்.நிச்சயமாக வரும்.

RAAZI MUHAMMADH JAABIR