வில்பத்து தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் ஒரு நாள் பொறுத்திருக்குமாறு எம்மிடம் வேண்டியுள்ளனர்: ஆசாத்

 

  • சுஐப் எம் காசிம்

வில்பத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நாளை ஜனாதிபதி உயர்மட்டக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி கொழும்பு ரமதா ஹோட்டலில் இன்று (30) இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

”முசலி மக்களுக்கு இடம்பெற்றுள்ள அநியாயங்களை ஜனாதிபதியிடம் நான் விரிவாக எடுத்துரைத்தேன். அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் இந்த வர்த்தமானிப் பிரகடனம் தொடர்பில் ஜனாதிபதியுடன் மிகவும் காட்டமாக எடுத்துரைத்துள்ளார். 

வட மாகாண மக்களின் பிரதிநிதி என்ற வகையிலும் முஸ்லிம் சமூகத்தின் தலைவர் என்ற வகையிலும் அவரது பொறுப்புக்களை முஸ்லிம் சமூகம் வலுவாக உணர்ந்துள்ளதால் அவரை அரசை விட்டு வெளியேறுமாறு நிர்ப்பந்தித்து வருகின்றது. இந்த விடயங்களையும் நான் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறினேன்.

நல்லாட்சியை உருவாக்குவதற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எத்துணை தூரம் பங்களிப்பு செய்தாரென்று ஜனாதிபதிக்கும் தெரியும். அந்த விடயத்தில் அமைச்சர் ரிஷாட்டுடன் இணைந்து நானும் உழைத்திருக்கின்றேன்.

மற்றையவர்களைப் போல தபால் வாக்குகள் முடிந்த பின்னர் மைத்திரிக்கு உதவுவதற்கு அவர் வந்தவரல்லர். தான் சார்ந்த சமூகத்திற்கு அநீதிகள் இழைக்கப்படும் போது அவர் பொறுத்திருக்கவும் மாட்டார் என்பதையும் நான் தெட்டத் தெளிவாக ஜனாதிபதியிடம் உணர்த்தியிருக்கின்றேன். 

ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விடயத்தில் ஒரு நாள் பொறுத்திருக்குமாறு எம்மிடம் வேண்டியுள்ளனர். நாளை நடைபெறும் உயர்மட்டக் கலந்துரையாடலில் இதற்கான தீர்வை ஜனாதிபதி தருவார் என்று நம்புகின்றோம். 

நாளைய உயர்மட்டக் கூட்டத்தில் வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ஊடகங்களுக்கு தெளிவு படுத்துவோம் என்றும் அஸாத் சாலி தெரிவித்தார்.