இவ்வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்குத் திட்டமிட்டுள்ள ஹஜ் விண்ணப்பதாரிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதிக்கு முன்பு திணைக்களத்தில் தமது பயணத்தை உறுதி செய்து கொள்ளாவிட்டால் அவர்களது பதிவுகள் ஆவணங்களிலிருந்து நீக்கப்படும் என அரச ஹஜ்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி. சியாத் கருத்து தெரிவிக்கையில்;
ஹஜ் கடமைக்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு விண்ணப்பித்த சுமார் 4 ஆயிரம் பேருக்கு திணைக்களம், ஹஜ் பயணத்தை உறுதி செய்யும்படி கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளவர்கள் ஹஜ் வங்கிக் கணக்கிற்கு மீளளிக்கப்படக் கூடிய கட்டணமாக 25 ஆயிரம் ரூபாவை வைப்பிலிட்டு அந்த வைப்பின் ரசீதுடன் தனது பயணத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதிக்கு முன்பு 25 ஆயிரம் ரூபா மீளளிக்கப்படக்கூடிய கட்டணத்தைச் செலுத்தி தமது பயணத்தை உறுதி செய்யத் தவறும் விண்ணப்பதாரிகளின் பதிவுகள் இரத்துச் செய்யப்படும்.
இறுதி நேர சிரமங்களைத் தவிர்த்துக் கொள்வதற்கும் இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளை பிரச்சினைகளின்றி முன்னெடுப்பதற்கும் ஹஜ் விண்ணப்பதாரிகள் ஹஜ் குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.