யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதி மீதான தாக்குதலானது உணர்ச்சிவசத்தினால் நடைபெற்ற ஒன்றேயாகும். இது ஆயுதப் போராட்டத்திற்கோ அல்லது புலிகளின் மீள் உருவாக்கத்திற்கோ வித்திடும் என்று கூறுவதை தென்னிலங்கை மக்கள் நம்பமாட்டார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.நீதிமன்ற கட்டடத்தொகுதியின் மீதான தாக்குதலானது உணர்பூர்வமாக ஏற்பட்ட ஒன்றே. இதனை புலிகளின் மீள் உருவாக்கம் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. சட்டம் ஒழுங்கை பொலிஸார் பாதுகாப்பார்கள். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடந்த 30 வருட காலமாக மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். தற்போது அமைதியான சுதந்திரமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை குழப்பாது இருக்க வேண்டும்.
பொலிஸார் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பார்கள். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காது பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் புங்குடுதீவு மாணவியின் படு கொலையானது மிகவும் கண்டிக்கத்தக்கது. குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனு தாபங்களை தெரிவிப்பதோடு யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி முழு இலங்கையிலும் இவ்வாறான சம்பவம் இனிமேலும் நடைபெறக்கூடாது.
ஜனாதிபதியை சந்தித்து புங்குடுதீவு மாண வியான வித்தியாவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு கடும்தண்டனை வழங்குவது தொடர்பாக பரிந் துரைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.