கல்குடா மதுபான தொழிற்சாலை , வலுவடையும் எதிர்ப்புக்கள் – மயக்கங்கள் தெளிந்தால், மக்களுக்கு நல்லது

‘நாய் விற்ற காசு குரைக்கவா போகின்றது?’ என்று சிலர் நம்மிடம் கேட்பதுண்டு. எந்த வழியிலேனும் பணம் சம்பாதித்தால் போதும் என்றும் அதில் நேர்மையோ, நேர்வழியோ, இறைவனைப் பற்றிய பயமோ இருக்க வேண்டியதில்லை என்றும் நினைப்பவர்கள் தங்களது உழைப்பை நியாயப்படுத்திக் கொள்வதற்காக இப்படிக் கூறுவதுண்டு.

ஆனால், ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கமோ அரசியல்வாதிகளோ இப்படிக் கருத முடியாது. எப்படியாவது முதலீடு செய்து பொருளாதாரத்தை வளர்த்தால் போதுமானது, முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்குகளும் அரசாங்கத்தின் நிதிக் கணக்குகளும் நிரம்பினால் பொருளாதாரம் வளர்ந்து விடும் என்று நினைப்பது, நிலைபேறான பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல மாட்டாது. இந்த அடிப்படையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் மதுபானத் தொழிற்சாலையையும் அதனால் ஏற்படவிருக்கும் பக்கவிளைவுகளையும் நோக்க வேண்டியிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதியில் கும்புறுமூலை பிரதேசத்தில் மதுபான உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றை நிறுவுவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளமை இப் பிராந்தியத்தில் கடுமையான எதிர்ப்புக் குரல்கள்; எழுவதற்கு காரணமாகியுள்ளது. இலங்கையில் பிணை முறிகள் விநியோக மோசடியோடு தொடர்புபட்ட ஒருவரின் நெருங்கிய உறவுக்காரருக்கு சொந்தமான ஒரு மது உற்பத்தி நிறுவனமே மட்டக்களப்பில் இந்த தொழிற்சாலையை நிறுவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

450 கோடி ரூபா செலவிலான ஒரு பாரிய மது உற்பத்தித் தொழிற்சாலை சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ளது. தமிழர்களும், முஸ்லிம்களும் இன்னும் ஓரளவுக்கு பண்பாட்டுடன் வாழ்கின்ற ஒரு பிரதேசத்தில் மது விற்பனை நிலையம் திறப்பதே பாரிய சமூகத் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றிருக்க, மதுவை உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலையை திறப்பது என்பது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதே மக்களின் நிலைப்பாடாகும். எனவே, தேனீர்க்கடை தொடக்கம் நாட்டின் உயரிய சபையான பாராளுமன்றம் வரை இவ்விடயம் இப்போது பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

முரண்நகை நடைமுறை
இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் ஒருபோதும் மதுப் பாவனையை ஊக்குவித்தது கிடையாது. மது, புகையிலை மற்றும் ஏனைய போதைப் பொருட்களின் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுமாறே தொடர்ச்சியாக மக்களை அறிவூட்டியே வந்திருக்கின்றன. அந்த வகையில், இப்போது ஆட்சியில் இருக்கின்ற நல்லாட்சி அரசாங்கமும் போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான கொள்கையை பிரகடப்படுத்தி இருக்கின்றது. மது இல்லாத ஒரு யுகம் பற்றிய கனவுகளையும் நல்லாட்சி கொண்டிருக்கின்றது.

என்னதான் அரசாங்கங்கள் போதைப் பொருள் பழக்கத்தை மக்களிடையே புழக்கத்தில் இருந்து நீக்குவதற்கு பல்வேறு பிரசாரங்களை மேற்கொண்ட போதும், அதனது விற்பனையை தடுப்பதற்கு கொள்கை வகுப்பு, சட்டவாக்கம் ஊடாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். அதாவது, இலங்கை மக்கள் சிகரட் போன்ற புகையிலை தயாரிப்புக்களை பயன்படுத்தக் கூடாது என்றும் அதனால் நோய்கள் உருவாகின்றன என்றும் அரசாங்கம் கருதுமாக இருந்தால் அரசாங்கம் புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்யலாம் தானே? குடி குடியைக் கெடுக்கும் என்றால் மதுபானசாலைகளை தடை செய்யலாம் தானே? என்று சாமான்ய பொது மக்கள் மனங்களில் ஒரு கேள்வி எழுவதுண்டு.

பூட்டான் உள்ளடங்கலாக சில நாடுகள் புகையிலை உற்பத்தி மற்றும் விற்பனைக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதேபோல் ஆப்கானிஸ்தான் முதல் சவூதி அரேபியா வரை பல நாடுகளில் மதுப்பாவனை சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இலங்கையில் அவ்வாறு செய்வது நடைமுறைச் சாத்தியமானதாக ஒருபோதும் இருக்கவில்லை. ‘புகைத்தல் புற்றுநோயை உண்டாக்கும்’ என்று சிகரட் பக்கட்டுக்களில் அறிவுரை வழங்குவதற்கும், மதுப் பாவனையை ஒழிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்வதற்குமே, அரசாங்கங்களால் நடைமுறையில் இயலுமாகி இருக்கின்றது.

இதற்கான காரணங்கள் நாம் அறிந்தவையே. அரசாங்கம் புகையிலை மற்றும் மது உற்பத்தி, விற்பனைக் கம்பனிகளிடம் இருந்து பெருந்தொகை இறைவரியை பெற்றுக் கொள்கின்றது. நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் வருவாயை உறுதிப்படுத்துவதில் இவ்வாறான நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் வரி முக்கிய பங்களிப்பு வழங்குகின்றது. இது தவிர, உல்லாசப் பயணத்துறை விருத்தி போன்ற துணைக் காரணங்களும் உள்ளன. அதுமட்டுமன்றி, இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களால் மது ஒப்பீட்டளவில் அங்கீகரிக்கப்படாத ஒரு பானமாக இருந்தாலும், ஏனைய சிங்கள, தமிழ் சமூகங்களிடையே அதனது பயன்பாடு என்பது அந்தளவுக்கு மோசமானதாக நோக்கப்படுவதில்லை. இலங்கையில் மதுப் பாவனை வியாபித்தமைக்கு இதுபோன்ற பலவற்றை காரணங்களாக குறிப்பிட முடியும். ஆனால், காரணங்கள் ஒருபோதும் நியாயங்கள் ஆவதில்லை என்பதுதான் கவனிப்பிற்குரியது.

பாரிய தொழிற்சாலை
நாட்டில் பரவலாக மதுப் பாவனையும் மதுக்கடைகளும் இயங்கிக் கொண்டிருக்கின்ற போதிலும் இவ்வாறான பிரமாண்டமானதொரு மதுபான தொழிற்சாலை கிழக்கு மாகாணத்தில் இருக்கவில்லை. இப்போது எந்தக் காரணத்திற்காகவும் மட்டக்களப்பில் ஒரு மதுபான தொழிற்சாலை அமைக்கப்படுமாக இருந்தால், அது குறுங்காலத்திலும் நீண்டகால அடிப்படையிலும் தமிழ், முஸ்லிம் மக்களிடையேயான மதுப் பழக்கத்தில் மேல்நோக்கிய நகர்வை ஏற்படுத்தும். இது இம் மக்களின் மத,கலாசார விழுமியங்களை கீழ்நோக்கி விழச் செய்யும் சாத்தியமுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் என்பது தமிழர்களையும் முஸ்லிம்களையும் பெரும்பான்மையாகக் கொண்ட நிலப்பரப்பாகும். அதற்கு அருகிலுள்ள திருமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சிறுபான்மையின மக்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இந்நிலையில், நாட்டின் ஏனைய பாகங்களைப் போல் இப் பிராந்தியத்தில் உள்ள தமிழ் மக்களிடையேயும் மதுப் பாவனை புழக்கத்தில் இருக்கின்றது. இஸ்லாத்தில் மதுப் பாவனை தடை செய்யப்பட்டிருந்தாலும் முஸ்லிம்களிடையே மதுப் பாவனை அறவே இல்லை என்று அடித்துக்கூற முடியாத அளவுக்கு நிலைமைகள் உள்ளன. இளைய சமுதாயம் கெட்டுப் போய்க் கொண்டிருக்கின்றன. யாருக்கு கோபம் வந்தாலும் இதுதான் நிதர்சனம்.

இந்தப் பின்னணியில், கும்புறுமூலையில் ஒரு மதுபான தொழிற்சாலை உருவானால், முதலீட்டாளர்களுக்கு இலாபம் கி;டைக்கலாம், அரசாங்கத்திற்கு வரி வருமானம் கிடைக்கலாம். வெளிநாட்டுப் பயணிகள் கவரப்படலாம், உள்ள10ர் குடிப் பிரியர்களுக்கு வகைவகையான மதுபானங்கள் கிடைக்கலாம். ஆனால் அதனால் ஏற்படப் போகின்ற பக்க விளைவு படுபாதகமானதாக இருக்கும். குறிப்பாக, கிழக்கிலங்கை முஸ்லிம்கள் இதனால் அதிகம் தங்களது விழுமியங்களை இழந்து போவார்கள் என்று சொல்லலாம்.

வட்டி என்பது இஸ்லாத்தின் பார்வையில் ஹறாம் எனும் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். ஆனால், வட்டியை மையமாகக் கொண்ட வங்கிககள், நிதி நிறுவனங்கள் வேறு வேறு உருவங்களில் முஸ்லிம் பிரதேசங்களில் நுழைந்தபோது மக்களால் அதனை புறக்கணிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட எல்லோரும் வட்டியோடு தொடர்புபட வேண்டியதாயிற்று. அதுபோலவே, கிழக்கில் மது உற்பத்தி தொழிற்சாலை அமையப்பெற்றால், ‘அது ஒரு தொழில்தானே இதில் என்ன ஹராம் இருக்கின்றது’ என்று சொல்லிக் கொண்டு, முஸ்லிம்களே மூலப் பொருட்களை வழங்கும் நிலைமையும், விற்பனை முகவராக செயற்படும் நிலமையும் நேரடியாக அங்கு தொழில் பெறும் நிலைமையும் ஏற்படமாட்டாது என்று எவரும் கூற முடியாது.

கலாசார பாதிப்புக்கள்
கிழக்கில் ஒரு மது உற்பத்தி தொழிற்சாலையை திறப்பது அரசாங்கத்தையும் கொள்கை வகுப்பாளர்களையும் பொறுத்தமட்டில் ஒரு பெரிய முதலீடாக தெரியலாம். ஆனால் இதனால் இங்கு வாழும் மக்களின் சமூக, கலாசார, பழக்க வழக்கத்தில் ஏற்படும் சாத்தியமுள்ள மாற்றங்கள் குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும். அதைவிட கிழக்கு மாகாண சபையும் முதலமைச்சரை தன்வசம் வைத்திருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளும் இது விடயத்தில் விரைந்து செயற்பட வேண்டியிருக்கின்றது. இஸ்லாமிய, இந்து, கிறிஸ்தவ மதத் தலைவர்களுக்கும் பாரிய பொறுப்பிருக்கின்றது.

அந்த வகையில், தமிழ் அரசியல்வாதிகள் கொஞ்சம் விழிப்பாக இருப்பதாக தெரிகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் யோகஸ்வரன் பாராளுமன்றத்தில் இவ்விடயம் குறித்து பேசியுள்ளார். ‘நாட்டில் நல்லாட்சி உள்ளது என்று கூறப்பட்டாலும் மட்டக்களப்பில் ஒரு மதுத் தொழிற்சாலை புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இதன் பின்னணியில் ஐ.தே.க. ஆதரவாளர்கள் இருக்கின்றனர். மோசடிக் குற்றச்சாட்டுக்களில் பெயரிடப்பட்டுள்ளவர்கள் இவ்வாறான முதலீடுகளை மேற்கொள்ள எவ்வாறு அனுமதி அளிக்கப்படுகின்றது. இதுதொடர்பாக எடுக்கப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானங்களை கருத்திற் கொள்ளப்படாமல் நிர்மாணப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே அரசாங்கம் இது விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவர் சபையில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் இவ்விடயத்தை சுட்டிக்காட்டி பாராளுமன்றத்தில் உரையாற்றியிருக்கின்றார். ‘நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு 18 வாரங்களுக்குள் கல்குடாவில் ஒரு மதுபான உற்பத்திச் சாலையை அமைப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதனை நிர்மாணிக்கும் கம்பனிக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வரிச்சலுகை வழங்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே வடக்கு, கிழக்கில் மதுபான நிலையங்கள் அதிகரித்திருக்கின்றன. இன்று மதுபான உற்பத்தி தொழிற்சாலையே நிறுவப்படுகின்றது. இவ்வாறான மதுபான தொழிற்சாலை அமைப்பதற்கு பதிலாக, ஏற்கனவே வலுவிழந்து போன தொழிற்சாலைகள் மீளத் திறக்க முடியும்’ என அவர் கூறியிருக்கின்றார்.

தமிழ் அரசியல்வாதிகளே பாரளுமன்றம் வரை சென்று இவ்விடயத்தைப் பேசியிருக்கின்றனர். அதுபோதாது என்று, ‘கிழக்கு மாகாண முதலமைச்சர் இனவாதம் பேசுவதை தவிர்த்து, இவ்வாறான மதுத் தொழிற்சாலைகள் உருவாவதை சட்ட ரீதியாக தடுப்பதற்கு தமது அதிகாரத்தை பிரயோகிக்க வேண்டும்’ என்று அதுரெலிய ரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், இஸ்லாத்தை பின்பற்றுகின்ற தரப்பினரான கிழக்கு மாகாண முதலமைச்சரோ, மாகாணத்திலும் மத்தியிலும் அதிகாரத்தில் இருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியோ, மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் கட்சிகளோ ஏனைய முஸ்லிம் பிராந்திய அரசியல்வாதிகளோ அல்லது உலமா சபையினரோ இதுவிடயமாக காத்திரமான நடவடிக்கை எடுத்ததாக இந்த கட்டுரை எழுதி முடிக்கப்படும் வரைக்கும் எந்த ஆச்சரியமான தகவலும் கிடைக்கவில்லை.

முஸ்லிம் அரசியல்வாதிகள்
கல்குடாவில் அமைக்கப்படும் மதுபான தொழிற்சாலை பற்றி தமிழ், சிங்கள அரசியல்வாதிகள் பேசத் தொடங்கிய பிறகும் பிரதான முஸ்லிம் கட்சித் தலைவர்களும் மட்டக்களப்பு உள்ளடங்கலாக கிழக்கில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காத்துக் கொண்டிருப்பது ஏன் என்ற கேள்வி எழுகின்றது. ஒரு நல்ல விடயத்தைப் பேசுவதற்கு நல்லநாள் பார்க்கின்றார்களா? அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் சூட்சுமங்கள் இருக்கின்றனவா என்று சிந்திக்க வேண்டியும் உள்ளது.

இது விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் போல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் ஜம்மியத்துல் உலமா சபைக்கும் பாரிய பொறுப்பிருக்கின்றது. குறிப்பாக, குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் யாப்பை கொண்டதென மார்தட்டிக் கொள்ளும் மு.கா. இதில் தனது அக்கறையை வெளிப்படுத்த வேண்டும். கிழக்கில் உள்ள மக்களின் ஆரோக்கியத்தையும் எதிர்கால சந்ததியினரின் ஒழுக்க விழுமியங்களையும் பேணுவதற்காக இவ்விடயத்தில் மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

கிழக்கு மாகாண சபையில் மு.கா. அதிகாரத்தில் இருப்பது மட்டுமன்றி அக்கட்சியைச் சேர்ந்தவரே முதலமைச்சராகவும் இருக்கின்றார். கிழக்கு முதலமைச்சர் நஸீர் அகமட், குர்ஆனை மனனமிட்ட ஹபீஸ் என்பதற்கு மேலதிகமாக இம்மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களின் கலாசாரத்தையும் ஒழுக்கத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டிய தலையாய கடப்பாட்டையும் கொண்டுள்ளார். எனவே, தமது அதிகாரத்தை இதுபோன்ற நல்ல காரியங்களுக்காக பயன்படுத்த வேண்டும்.

மு.கா. மட்டுமல்லாது மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் கட்சிகளும் ஏனைய பிராந்திய அரசியல்வாதிகளும் இந்த மதுத் தொழிற்சாலையால் மக்களின் நல்வாழ்வுக்கு ஏற்படக் கூடிய பாதிப்பு குறித்து அரச உயர்மட்டத்திற்கு எடுத்துக் கூறி, இதனை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றே, குடியின் அவலங்கள் அறிந்த மக்கள் மன்றாடுகின்றனர். அதைவிடுத்து. ‘யார் எக்கேடு கெட்டுப்போனால் என்ன, நமது நமது பங்கு கிடைத்தால் சரி’ என்ற எண்ணத்தில் செயற்படுவதோ, மதுபான தொழிற்சாலை நிர்மாணிப்பாளர்களின் பேரம்பேசல்களுக்கும் வெகுமதிகளுக்கும் மயங்கிப் போவதோ வெளிப்படையான சமூகத் துரோகமாகும்.
மயக்கங்கள் தெளிந்தால், மக்களுக்கு நல்லது!

ஏ.எல்.நிப்றாஸ்(வீரகேசரி 26.03.2107)