ஒரு காலத்தில் ஏ.சி. என்பது வசதியானவர்களின் ஆடம்பர பொருளாக இருந்தது. இன்று பெரும்பாலான அலுவலகங்கள் ஏ.சி. வசதியுடன் தான் செயல்படுகின்றன. பெரிய ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள் என்று எல்லாமே ஏ.சி.யாக அவதாரம் எடுத்திருக்கிறது.
ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட அறைகளில் அமர்ந்து வேலை செய்வதால் உடலியல் சார்ந்த பல பிரச்சினைகளும், நோய்களும் ஏற்படுவதாக சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
ஏ.சி.யில் இருந்து வரும் காற்றானது இயற்கையானது கிடையாது. இயற்கையான காற்றில் இருந்து ஈரப்பதத்தை எடுத்து, அதை பயன்படுத்திக் குளிர் காற்றாக கொடுக்கிறது. மேலும் அறையில் உள்ள வெப்பமான காற்றை வெளியேற்றுகிறது. இதற்கு ‘குளோரோ ப்ளூரோ கார்பன்’ மூலப் பொருளாகப் பயன்படுகிறது. இது வெளியேற்றும் வெப்பக் காற்று தான் புவி வெப்பமடைதலை அதிகமாக்கி, ஓசோன் ஓட்டையை அதிகப்படுத்துகிறது.
ஏற்கனவே அலர்ஜி பிரச்சினை உள்ளவர்களுக்கு ஏ.சி. காற்று பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். சென்சிட்டிவான உணர்வு அதிகமாக உள்ளவர்களுக்கு உடலில் சொறி, அரிப்பு, மூக்கில் சளி ஒழுகுதல், காதில் அரிப்பு, கண் எரிச்சல் போன்றவை ஏற்படக்கூடும். அலர்ஜி உள்ளவர்கள் ஏ.சி.யில் இருந்து விலகி இருப்பதே நல்லது.
குறைந்தது 3 மாதங்களுக்கு ஒரு முறை ஏ.சி.யில் உள்ள தூசி மற்றும் அழுக்குகளை முறையாக சுத்தப்படுத்த வேண்டும். இல்லையெனில், அவற்றில் ‘லிஜினல்லா நிமோபிலியா’ என்ற பாக்டீரியா வளரும். இது ஏ.சி.யில் மட்டும் வளரக்கூடிய பாக்டீரியா. சுவாசப் பாதையில் இந்த வகை பாக்டீரியா பரவினால் கடுமையான நிமோனியாவை உருவாக்கும்.
சில வீடுகளில் விண்டோ ஏ.சி.யின் பின்பக்கம் புறாக்கள் வசிக்க ஆரம்பிக்கும். புறாக்களின் கழிவுகள் அதில் சேர்ந்து விடும். இதில் பூஞ்சைகள் வளரும். ‘கிரிப்டோகாக்கஸ்’ எனப்படும் இந்த பூஞ்சையானது மனித மூளையைத் தாக்கக் கூடியது. இந்தப் பூஞ்சை சுவாசப் பாதையையும், மூளையையும் தாக்கி ‘க்ரிப்டோகாக்கல் மெனிஞ் சைட்டிஸ்’ எனும் ஆபத்தான நோயை உருவாக்கக் கூடியது.
எந்த நேரமும் ஏ.சி.யில் அமர்ந்திருப்பவர்களுக்கு, சூரிய ஒளி போதுமான அளவு கிடைக்காது. இதனால் வைட்டமின் டி குறைபாடு உருவாகும். இந்த வைட்டமின், கருவுறுதலில் ஆரம்பித்து இதயம், நுரையீரல் சீராக இயங்குவது வரை தேவைப்படும் ஒன்றாகும். இது கிடைக்காமல் போனால் எலும்புகள் பலவீனமடையும். மூட்டுவலி, முதுகுவலி போன்றவை எளிதாக வரும். சூரிய ஒளியில், மனித உடலுக்கு அவசிய தேவையான வைட்டமின் டி கிடைக்கிறது. எனவே உடலில் சூரியனின் ஒளிபடுமாறு நிற்பது அவசியம்.
ஏ.சி.க்கு நேராக முகத்தை வைத்து உட்காரக் கூடாது. அப்படி உட்கார்ந்தால் சைனஸ் எனப்படும், மூக்கடைப்பு, தலைவலி, காது அடைத்தாற்போல இருப்பது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். சிலருக்கு ஏ.சி.யின் குளிர்ந்த காற்றானது சுவாசப் பாதையை ரணமாக்கி விடும். அதிக உணர்ச்சிவசப்படுபவர்கள் ஏ.சி.யை முடிந்த அளவு தவிர்த்து விட வேண்டும்.