தேர்தலை நானே தள்ளிப் போட்டு வருகின்றேனென்று பலரும் என்னை விமர்சனம் செய்கின்றனர் : மஹிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்கு நான் தயாராகவே இருந்து வருகின்றேன். ஆனால் உள்ளூராட்சி அமைச்சர் தேர்தலை எவ்வகையில் தேர்தல் நடாத்துவதென்பது குறித்து வர்த்தமானி அறிவிப்பினை வெளியிட வேண்டும். அதன்பிறகே என்னால் தேர்தலை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியுமென தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தேர்தலை நானே தள்ளிப் போட்டு வருகின்றேனென்று பலரும் என்னை விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றனர். நேரடியாகவும் பலர் என்னிடம் தேர்தல் குறித்து வினவுகின்றனர். 

தேர்தலை நடாத்துவதற்கு நான் ஆயுத்தமாகவே இருந்து வருகின்றேன். ஆனால் அதற்கான வர்த்தமானி அறிவிப்பினை உள்ளூராட்சி மன்ற அமைச்சு வெளியிட வேண்டும். அதன் பிறகுதான் என்னால் தேர்தலை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியும். 

குறிப்பிட்ட காலத்தில் தேர்தலை நடாத்துவதே முறையாகும். தேர்தலை ஒத்திப்போட்டு வருவது தவறாகும். 

டொனமூர் காலத்தின் போது சர்வஜன வாக்களிப்பு முறையை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆண்கள் 21 வயதிலும் பெண்கள் 30 வயதிலுமே வாக்களிக்க வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. அதையடுத்து ஏற்பட்ட போராட்டத்தின் பயனாக 18 வயதுகளுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை கிடைக்கப்பெற்றது.

ஏற்கனவே இவ் வாக்களிக்கும் முறைமை படித்தவர்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் மாத்திரம் காணப்பட்டது. பின்னர் படிப்படியாக இத்தகைய பாரபட்ச முறைமைகள் மாற்றப்பட்டு காலப்போக்கில் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டன.

வாக்குரிமையின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் நாட்டில் விழிப்புணர்வு பாதயாத்திரைகளையும் நான் மேற்கொண்டேன். மக்களை தெளிவுப்படுத்தும் வகையில்  பதுளையில் ஐந்து நிகழ்வுகளிலும் நான் கலந்துகொண்டு அதற்கான வேலைத் திட்டங்களை மேற்கொண்டேன்.

நடைமுறையிலிருக்கும் தேர்தல் முறைமைகளில் பெண்களும் இளைஞர் சமூகத்தினரும் விசேட தேவையுடையவர்களும் பாதிப்படைந்துள்ளனர். இதனாலேயே இளைஞர் சமூகத்தினர் தேர்தல்களை புறக்கணிக்கும் நிலையினையும் அவதானிக்க முடிகின்றது. 

நாட்டின் வாக்காளர்களைப் பொறுத்தவரையில் 100க்கு 52 வீதமானவர்கள் பெண்களாவர். ஆனால் அவர்கள் அரசியல் ரீதியில் மிகவும் பின்னடைவிலேயே இருந்து வருகின்றனர். 

எனினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் 100க்கு 25 வீத பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவங்களை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கதோர் விடயமாகும் என்றார்.