ஆக்கிரமிப்பு நடந்து 14 ஆண்டுகள் கழித்து, ஈராக்கின் உட்கட்டமைப்பு சிதைந்து கிடக்கிறது-லதீப் பாரூக்

ஈராக் 7000 ஆண்டுகளாக எத்தனையோ நாகரீகங்கள் தோன்றி வளர்ந்த தேசம். அரபு – இஸ்லாமிய வரலாற்றிலும் ஈராக்கிற்கு என்று ஒரு தனித்துவமான இடமிருக்கிறது. இஸ்லாமிய வரலாற்றின் பொற்காலங்களுள் ஒன்றாகவும், விஞ்ஞானம் தொழிநுட்பம், மருத்துவம் அனைத்தும் செழித்து வளர்ந்து, அரசோச்சிய காலமாகவும் கருதப்படுகின்ற அப்பாஸிய ஆட்சியின் பிரதான மையம் பிரதானமாக ஈராக்கில்தான் காலூன்றி இருந்தது. அவர்கள் தம் தலைநகராக பக்தாதைத்தான் கொண்டிருந்தார்கள்.

இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஈராக்கை 2003, மார்ச்சில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆக்கிரமித்தது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தாம் வெளியேற்றப்பட்ட இப்றாஹீம் நபியவர்களின் பிறந்த இடமாகிய பாபிலோனியாவிற்குத் திரும்பி வருவது அல்லது அதனை அழித்தொழிப்பது என்பது யூதர்கள் நீண்ட காலமாக கனவு கண்டு வருகின்ற ஒரு விடயம். இதற்காக அப்போதைய அமெரிக்காவின் புஷ் நிர்வாகத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஈராக் மீது வஞ்சம் தீர்க்கப்பட்டமை 2003 இல்தான் முதல் தடவையல்ல. 1990 இல் சதாம் ஹுஸைன் குவைத்தை ஆக்கிரமித்த போது, அமெரிக்க தலைமையிலான நேச நாட்டுப் படைகளின் தாக்குதல்களால் ஈராக் வார்த்தைகளில் சொல்ல முடியாத துன்பத்தை சந்தித்தது. அப்போது விதிக்கப்பட்ட ஐ.நாவின் பொருளாதாரத் தடைகள் ஈராக்கின் அடிக்கட்டுமானத்தை நிலைகுலையச் செய்தன. சுகாதாரம், கல்வி, குடிநீர் விநியோகம் என அது விட்டு வைக்காத துறைகளே இல்லை. 1990 வளைகுடா நெருக்கடியால், ஈராக்கில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மரணமடைந்தவர்கள் சுமார் ஒன்றறை மில்லியன் பேர். சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் போசனைக் குறைபாடு, தொற்று நோய்கள், நிறை குறைவு மற்றும் குறைந்து செல்லும் வாழ்க்கை எதிர்பார்ப்பு என்பவற்றால் பாதிக்கப்பட்டனர்.

ஏற்கனவே, முதல் வளைகுடா யுத்தத்தால் பெரிதும் பாதிப்புற்றிருந்த ஈராக் மீது ஜோர்ஜ். டபில்யூ. புஷ் தன் தாக்குதல்களை ஆரம்பித்தார்.

உலக அளவில் சமாதானத்தையும் நீதியையும் விரும்புகின்ற எவரும் இந்த ஆக்கிரமிப்பை அங்கீகரிக்கவில்லை. உலகளவில் அதற்கெதிரான எதிர்ப்பலை உருவானது.  போப்பாண்டவரும், அரசியல் செயற்பாட்டாளர்கள், புலமைத்துவவாதிகள், ஆண்கள், பெண்கள் எனப் பலரும் இதற்கெதிராக குரல் எழுப்பினர். சிட்னி, மெல்மன், ஜகார்தா போன்ற நகர்களில் இருந்து, லண்டன், பாரிஸ், பேர்லின், ரோம் மற்றும் அமெரிக்க முழுவதிலும் உள்ள பல்வேறு நகரங்களில் என ஈராக் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

சதாம் அமெரிக்காவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டு, வேண்டும் என்றே ஆக்கிரமிப்பு படைகளை உள்ளே வர அனுமதித்தார் என்ற வதந்தியும் உண்டு. அமெரிக்க ஆக்கிரமிப்பால் ஈராக் கண்ட முன்னெப்போதும் இல்லாத காட்டுமிராண்டித் தனத்தை, தாத்தாரியர் எனப்படும் மொங்கோலியப் படையெடுப்பின் போது கூட ஈராக் கண்டிருக்காது. சதாமின் அரசியல் மேல் மட்டம் மற்றும் இராணுவ மேல் மட்டம் என்பவற்றுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், எதுவித எதிர்ப்பும் அற்ற விதத்தில் பக்தாத் உள்ளே நுழைவதற்கு ஆக்கிரமிப்புப் படைகளுக்கு முடிந்தது.

பக்தாத் உள்ளே நுழைவதற்கான நுழைவுப் புள்ளிகளில் பெரிதும் கன்னி வெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. ஆனால், ஒரு நிலக்கன்னி கூட வெடிக்கவில்லை.

சதாமின் அமைச்சர்கள் மிக மோசமாகச் சோரம் போன நிலையில் அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார்கள். பெரிதும் பேசப்பட்ட ஈராக்கியப் பாதுகாப்புப் படைக்கு என்ன நடந்தது என்றே இதுவரை தெரியவில்லை. அவை மறைந்தே போய் விட்டன.

சில நாட்களுக்குள் தண்ணீர் மற்றும் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. பஸ்ராவில் மாத்திரம், குடிநீர், மின்சாரம், மருந்துகள், உணவு, மற்றும் தங்குமிடம் அற்ற நிலையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொகையினர் இருந்தார்கள். எந்த வகையில் பார்த்தாலும், இதனை இனச் சுத்திகரிப்பு என்று சொல்வதே மிகவும் பொருத்தமானதாகும்.

தொடர்ந்து அமெரிக்க விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. மின் நிலையங்களையும், நீர் விநியோக முறைமையையும் இலக்கு வைத்து தாகுதல் நடாத்திய போது, ஐந்து மில்லியனுக்கும் அதிகமானவர்கள் நீர், மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டனர். ஏற்கனவே, பக்தாத் உணவுப் பற்றாக் குறையால் அவதிப்பட ஆரம்பித்திருந்தது.

தினம் தினம் ஈராக்கிய ஆகாயப் பரப்பு குண்டு மழையால் நனைந்தது. பூமி அதிர்ந்தது. நகரங்கள் எல்லாம் மனிதக் கசாப்புக் கடைகளாகவும், மனிதக் கொலைக் களங்களாகவும் மாற்றம் கண்டிருந்தன.

முழு உலகமும், செய்வதறியாது, நடந்து கொண்டிருக்கும் கொலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அப்பாவிப் பொது மக்களைக் கொன்று குவிப்பது போதாது என்று, சரணடைந்த ஈராக்கிய இராணுவ வீரர்களையும் அமெரிக்க இராணுவம் கொன்று குவித்தது.

அமெரிக்க இராணுவம் பயன்படுத்திய விசாரணை முறைகளோ மிக மிக குரூரமானவை. உடைகளைக் கழற்றி நிர்வாணமாக நிற்க வைத்தல், அதிகளவிலான சூடு, அதிகளவு குளிர், அதிகளவு சப்தம், அதிகளவு வெளிச்சம், தூங்க விடாமல் தடுத்தல், அடித்தல், பாலியல் ரீதியான சித்திரவதைகள், மின்சாரம் பாயச்சல், வற்புறுத்தி பாலியல் உறவில் ஈடுபடச் செய்தல், நீரில் அமிழ வைத்தல், மூச்சுத் திணரச் செய்தல்…. இப்படி எத்தனையோ….! தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பலர் இறந்து போயினர். அவை பல்வேறு கேள்விகளை எழுப்பக் கூடிய, சந்தேகத்திற்கு இடமான நிகழ்வுகளாக இருந்தன.

பெண் கைதிகள் அநாகரிகமான முறையில் கட்டாயப்படுத்தப்பட்டுப் புகைப்படம் பிடிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம். நிறையப் பேர் பாலியல் வன்புனர்வுக்கு உட்பட்டனர். ஆனால், அவ்விதம் வன்புனர்வுக்கு உட்பட்டவர்களில் அநேகம் பேர் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பகிரங்கமாகக் கதைக்க முன்வரவில்லை. காரணம் மிக வெளிப்படையானது. பாரம்பரியக் கலாசாரத்தைக் கொண்ட ஈராக்கிய கலாசாரத்தில் இந்த விடயங்களை இவ்விதம் வெளிப்படையாகக் கதைப்பது தம் வாழ்வில் பெரும் பாதிப்புக்களை உண்டு பண்ணும் என இவர்கள் அஞ்சுகிறார்கள்.

அபூ கிராய்ப் சிறைச்சாலை துஷ்பிரயோகங்கள் 

2006, மார்ச் – ஈராக்கில் இடம்பெற்ற துஷ்பிரயோகங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. அபூ குராய்ப் சிறைச்சாலையில் இடம்பெற்ற துஷ்பிரயோகங்கள் பற்றிய தகவல்கள் உலகை திடுக்கிடச் செய்தன. ஆனால், இது கடல் நடுவே இருக்கும் பனி மலையின் மேல் பகுதி போன்றதுதான். பெருமளவிலான அதன் அடிப் பகுதி அடியில் அமிழ்ந்து கிடக்கிறது. வெளிச்சத்திற்கு வராமல் பன்மடங்கு சம்பவங்கள் இன்றும் மறைந்து கிடக்கின்றன.

மரபுச் சின்னங்கள் அழிக்கப்படல்

அமெரிக்க ஆக்கிரமிப்பு ஈராக்கை கலாசார ரீதியாக வன்புனர்வுக்கு உட்படுத்தியது என்று சொல்வதுதான் மிகச் சரியானது. அதன் தேசிய நூதன சாலையும், சுவடிக்கூடமும் கொள்ளையடிக்கப்பட்டன. விலை மதிக்க முடியாத அதன் பல்லாயிரம் ஆண்டு சரித்திரத்திற்கு உரிமை கோரும் வரலாற்று சின்னங்களும், ஆவணங்களும் திருடப்பட்டன. உண்மையில், இது மனித குலத்திற்கெதிராக இழைக்கப்பட்ட கலாசார ரீதியான குற்றச் செயல்.

ஈராக் சட்ட முறைமையும் முழுமையாக இரவோடு இரவாக அழிக்கப்பட்டது. இத்திணைக்களங்களில் இருந்து கிடைத்த பிறப்புச் சான்றிதழ்கள், காணி, உறுதிகள், குற்றவாளிகள் பற்றிய பதிவுகள், திருமண அத்தாட்சிப் பத்திரங்கள், வியாபார ஒப்பந்தங்கள். பாடசாலைப் பதிவுகள், வாகனப் பதிவுகள், சாரதி அனுமதி பத்திரங்கள் என்பன தம் இஷ்டப்படி அமெரிக்கத் துருப்பினரால் பயன்படுத்திக்கொள்ளப்பட்டன.

புத்தி ஜீவிகள் படுகொலை

ஈராக் புத்திஜீவிகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிரதான இலக்காக மாறினர். ஈராக்கின் முன்னணி புத்தி ஜீவிகள், தொழில்வல்லுனர்கள், ஏனைய துறை சார்ந்தவர்கள் என திட்டமிட்ட அடிப்படையில் நிறையப் பேர் படுகொலை செய்யப்பட்டனர். இஸ்ரேலிய புலனாய்வு அமைப்பான மொஸாட் நானூரிற்கும் அதிகாமான உயர் நிலைப் புத்தி ஜீவிகளின் பெயர்ப்பட்டியலுடன் ஈராக்கிற்குள் நுழைந்தது என்றும், அவர்களை வீடுகள், கார்கள், அலுவலங்கள், வீதிகள் மற்றும் பிற இடங்களில் எனப் பல்வேறு இடங்களில் வைத்து கொன்று குவித்தது என்று சில அறிக்கைகள் சொல்கின்றன.

உண்மையில், புஷ் – ப்ளேயர் கூட்டணி ஈராக்கில் செய்த நாசம், மொங்கோலிய சர்வதிகாரி ஜங்கிஸ்கான் செய்ததை விட படுமோசமானது. ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தலைமைத்துவ நிறுவனம் பின்வரும் தகவலை வழங்கியது.

“எண்பத்து நான்கு சதவீதமான ஈராக்கின் உயர் கல்வி நிறுவனங்கள் எறிக்கப்பட்டுள்ளன. அல்லது கொள்ளையிடப்பட்டுள்ளன. அல்லது அழிக்கப்பட்டுள்ளன”. அத்தோடு நிற்கவில்லை. மையவாடிகள், பாதுகாக்கப்பட்ட மண்ணறைகளும் கூட இடித்து நொருக்கப்பட்டன.

அரபு ஆட்சியாளர்கள் வழமை போல் ஆழ்ந்த மௌனம் சாதித்தார்கள். மலேசிய முன்னாள் பிரதமர் மஹாதிர் முஹம்மத், நெல்சன் மண்டேலா, டெஸ்மன்ட் டூடு போன்ற தலைவர்கள் சிலர் மாத்திரம்தான் மிக வெளிப்படியான தொனியில் ஈராக் ஆக்கிரமிப்பையும், அங்கு இடம்பெற்று வரும் கொடுமைகளையும் கண்டித்தார்கள்.

அரபு சர்வதிகாரிகளைப் பொருத்த வரை, பண ரீதியான கொடுப்பனவுகள் மற்றும் அரசியல் ரீதியான பாதுகாப்பு போன்ற வழிமுறைகள் மூலம் இலஞ்சம் வழங்கப்பட்டு, அவர்களின் நாவுகள் விலங்கிடப்பட்டன. ஒன்றறை ஆண்டுகள் அமைதி காத்த பிறகு, அப்போதைய ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனான், ஈராக் ஆக்கிரமிப்பு சட்ட ரீதியற்றது என அறிவித்தார்.

ஈராக் ஆக்கிரமிப்பைத் தடுக்கவோ, அங்கு இடம்பெற்று வந்த கொடுமைகளை நிறுத்தவோ கையாலாகாத நிலையில் இருந்த கொபி அனான் பதவி விலக வேண்டும் என மஹாதிர் முஹம்மத் அப்போது கோரிக்கை விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நிர்வாகத்தில் ஈராக் ஆக்கிரமிப்பின் பின்னணியில் இருந்து செயற்பட்ட, டொனால்ட் ரம்ஸ்பல்ட், டிக் சென்னி, கொலின் பவல், கொண்டலீஸா ரைஸ் போன்றவர்கள் நெதர்லாந்து ஹேக் நகரிலிருக்கும்  சர்வதேச யுத்த அபராத நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஐரோப்பாவிலும், உலகின் பிற பகுதிகளிலும் இருக்கின்ற புத்திஜீவிகள் முன்வைத்தார்கள்.

ஆக்கிரமிப்பு நடந்து 14 ஆண்டுகள் கழித்து, ஈராக்கின் உட்கட்டமைப்பு சிதைந்து கிடக்கிறது.இனத்துவ ரீதியான வன்முறைக் குழுக்கள் மோதிக் கொள்ளும் களமாக ஈராக் மாறியிருக்கிறது. ஏற்கனவே, பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்த மக்கள் கடும் பீதியுடன் வாழ்கிறார்கள்.

ஈராக் மக்களுக்கு எதிரான இந்த குற்றங்களில் எண்ணெய் வளம் செறிந்த அரபு நாடுகள் முக்கிய பங்காளர்களாகவே செயற்பட்டிருக்கின்றன.

அப்போதைய அமெரிக்க பாதுகாப்பு செய்லாளர் டொனார்ல்ட் ரம்ஸ்பீல்ட் அரபு நாடுகள் ஈராக் ஆக்கிரமிப்பு விடயத்தில் உதவியமைக்குத் தனிப்பட்ட முறையில் தன் நன்றியைத் தெரிவிப்பதற்காக வளைகுடா நாடுகளுக்கு விஜயமும் செய்திருந்தார்.