ஆடுகளைப் பொறுத்தமட்டில் மேய்ப்பர்கள் முக்கியமானவர்கள். மேய்ப்பர்களை நம்பித்தான் ஆடுகளின் எதிர்காலமும் உயிர்வாழ்வும் இருக்கின்றது. கறுப்பு ஆடுகள் வேறு மந்தைக் கூட்டங்களுடன் சேர்ந்து பிழைத்துக் கொள்ளும் ஆனால் அப்பாவி ஆடுகள் மேய்ப்பனை ஒரு தெய்வம்போல கருதும். ஆனால், மேய்ப்பர்களை ஆடுகளை சரியாக மேய்க்காத போது, அவற்றின் மனதுக்கும் உடம்புக்கும் அவசியமானதை கொடுக்காத போது, ஆடுகள் விசனம் கொள்ளும்.
தம்மை மேய்ப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் பொறுப்பேற்றுக் கொண்ட மேய்ப்பர்கள் பிழையான வழியில் அழைத்துச் சென்றாலோ, மேய்க்கும் வேலையை விட்டுவிட்டு ஒரு மரநிழலில் சுகமாக உறங்கிக் கிடந்தாலோ அல்லது தங்களது சொந்த நலனை மட்டும் கருத்திற் கொண்டு செயற்பட்டாலோ ஆடுகள் விரக்தி கொண்டு, ஒரு முடிவுக்கு வரும். அவ்வாறு ஆடுகள் முடிவெடுத்துவிட்டால் மேய்ப்பனின் ஏவலுக்கு அடங்காது, தனக்கு சரியென தோன்றும் வழியில் ஓடத் தொடங்கும். வேறு யாராவது பொருத்தமானவர்கள் இருக்கின்றார்களா அல்லது இருக்கின்றவர்களையே கொஞ்சம் தமது வழிக்கு எடுக்க வேண்டுமா என்ற வழிவகைகளை தேடத்தொடங்கும்.
இதுதான் கிட்டத்தட்ட இன்று முஸ்லிம் சமூகத்தின் அரசியல் நிலையும் என்றால் மிகையில்லை. பெரும்பான்மைக் கட்சியில் அங்கம் வகிக்கின்ற, தனித்தனியே முஸ்லிம் கட்சிகளில் அரசியல் செய்கின்ற தேசிய அளவிலான, பிராந்திய மட்டத்திலான பெரிய, சிறிய மேய்ப்பர்களான அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை நம்பியிருக்கும் மக்களின் நிலைமையும் இன்று இதுவாகத்தான் இருக்கின்றது. இதில் யாரும் விதிவிலக்கல்ல.
சோனக அரசியல்
இலங்கை முஸ்லிம்கள் தம்முடைய அரசியல் பிரத்தியேக தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் சிந்திக்கவே இல்லை. இலங்கையைப் பொறுத்தமட்டில் முதன்முதலாக இனத்துவ அடிப்படையிலான நெருக்குவாரங்களை நூறு வருடங்களுக்கு முன்னரே இலங்கைச் சோனகர்கள் சந்தித்திருக்கின்றார்கள். ஆனால், அவர்கள் தனித்துவ அடையாளத்துடனான அரசியல் இயக்கம் ஒன்றைப் பற்றி சிந்திக்கவில்லை. அல்லது அவ்வாறு சிந்தித்திருந்தாலும் அதனை செயலுருப்படுத்தவில்லை. அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியிலும் சுதந்திரக் கட்சியிலும் இணைந்து அரசியல் செய்து கொண்டிருந்தனர். அவர்களிடையே அரசியல்வாதிகளே இருந்தார்கள் தவிர தேசிய ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் அதிகம்பேர் இருக்கவில்லை.
ஆனால், அவர்களுடைய காலத்தில் முஸ்லிம்கள் ஒன்றுக்கும் வக்கற்ற சமூகமாக வாழவில்லை. அது தனித்துவ அரசியல் இல்லை என்றாலும், அப்போதிருந்த முஸ்லிம் சமூகத்திற்கு எது தேவையோ அது கிடைத்தது என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. அன்றைய காலத்தில் வடக்கு, கிழக்கு, மலையகம், தென்பகுதி உள்ளடங்கலாக முஸ்லிம்கள் வாழ்கின்ற எல்லாப் பிரதேசங்களிலும் பாகுபாடு எதுவுமின்றி அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன, தொழில்கள் வழங்கப்பட்டன. மற்றைய பணிகள் எல்லாம் நடைபெற்றன.
இந்நிலையிலேயே, தமிழர்கள் தங்களது உரிமைகளுக்கான போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்;. தமிழ் சமூகம் தங்களது அபிலாஷைகளுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்தி நின்றது. இந்த சந்தர்ப்பத்தில் தமிழர்களின் அபிலாஷைகளை முன்னிறுத்திய போராட்டத்தில் முஸ்லிம் இளைஞர்கள் சாரைசாரையாகச் சென்று இணைந்து கொண்டனர்;. பலர் இறந்தனர். சுமார் 35 பேருக்கு பின்னர் மாவீரர் அந்தஸ்து கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.
சமகாலத்தில், பெருந்தேசிய கட்சிகளின் கொள்கைகளுடன் உடன்படாத முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து அரசியல் செய்யத் தொடங்கியிருந்தனர். மசூர் மௌலானா, எம்.எச்.எம்.அஷ்ரப் என இப்பட்டியல் நீண்டு செல்கின்றது. முன்னதாக இடம்பெற்ற கலவரங்கள் போலல்லாது 1980களின் முற்பகுதியில் ஏற்பட்ட கலவரத்தின் தாக்கம் பல வருடங்களாக நீடித்தது என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறான ஒரு பின்புலத்தோடு ஒரு கட்டத்தில் தமிழர்களின் சாத்வீகப் போராட்டம் என்பது வேறு வடிவம் எடுத்தது. ஆயுதக்குழுக்களின் துப்பாக்கிகள் முஸ்லிம்களை நோக்கி திருப்பப்பட்டன. தம்மோடு இணைந்து போராடிய இளைஞர்களின் இனமே குறிவைக்கப்பட்டமையும் பள்ளிவாசல்களுக்குள் பலி கொள்ளப்பட்டமையும் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டமையும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
திரும்பிய பாதை
இந்தப் பின்னணியில், தமிழர் அரசியலோடு ஒன்றித்து பயணிக்க முடியாத ஒரு யதார்த்தம் உருவாகி இருப்பதை அஷ்ரப் போன்றோர் உணர்ந்து கொண்டனர். தமிழர் அரசியலுக்கு சமாந்திரமான தனித்துவ அடையாள அரசியலை உருவாக்குவதற்கான முயற்சியில் அவர்கள் முன்னின்றனர். அதன்படி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவானது. அதற்கு முன்னரே வேறு சில சிறிய முஸ்லிம் கட்சிகள் வடகிழக்கிலும் அதற்கு வெளியிலும் உருவாக்கப்பட்டிருந்தது. என்றாலும், மிகத் துரிதமாக மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்சியாகவும் நீண்டகாலம் நீடித்திருக்கும் அரசியல் இயக்கமாகவும் மு.கா.வை சொல்ல முடியும்.
அதன்பிறகு மு.கா.வின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. ஒப்பீட்டளவில் மிகச் சிறந்த சேவைகளைச் செய்த ஒரு அரசியல் தலைவராகவும் கிட்டத்தட்ட ஒரு முடிசூடா மன்னன் போலவும் அஷ்ரப் இருந்தார் என்றும் சொல்லலாம். தமிழரசுக் கட்சியுடன் உறவு கொண்டாடிய காலத்தில் ‘அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழத்தைப் பெற்றுத் தரவில்லை என்றால் தம்பி அஷ்ரப் பெற்றுத் தருவான’ என்று சொன்ன அஷ்ரபே தனித்துவ அடையாள அரசியலுக்குள் பிரவேசித்த பிற்பாடும் பல முஸ்லிம் அரசியல்வாதிகள் பெருந்தேசிய கட்சிகளுடன் தொடர்ந்து சங்கமமாகி இருந்தனர். அதற்கு நியாயங்களும் இருந்தன என்பதுடன், அதனால் மக்களுக்கு பல பலன்களும் கிடைத்தன என்பதை மறுக்க முடியாது.
எவ்வாறாயினும், எழுச்சி போல மு.கா.வின் வளர்ச்சி அமைந்தமையால் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக்கட்சி சார்பு முஸ்லிம் அரசியல்வாதிகள் நிலைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டது. வடக்கு, கிழக்கில் இந்த மாற்றம் வெகுவாக உணரப்பட்டது. அஷ்ரஃபின் அல்லது மு.கா.வின் உருவாக்கம் என்பது மிக முக்கியமான ஒரு கட்டமைப்பு மாற்றத்தை செய்தது. அதாவது, தென்பகுதியில் மையங்கொண்டிருந்த முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவத்தை அல்லது தீர்மானிக்கும் சக்தியை கிழக்கு நோக்கி திருப்பிவிட்டமையே அதுவாகும். இதுதான் மு.கா.வின் சாதனையுமாகும்.
மாறிய நிலைமை
ஆனால், அஷ்ரஃபின் மரணத்திற்குப் பிறகு நிலைமைகளில் சாண்ஏற முழம் சறுக்கியதை அனுபவ ரீதியாக உணரக் கூடியதாக இருந்தது. அதற்குப் பிறகு மு.கா.வின் தலைவராக நியமிக்கப்பட்ட றவூப் ஹக்கீமுடன் முரண்பட்டுக் கொண்டு பலர் கட்சியை விட்டு வெளியேறியமையால், கட்சி உடைவைச் சந்தித்தது. இது பல தடவை நடந்தது. இதன் கடைசி அத்தியாயமாக பசீர் சேகுதாவூத் மற்றும் எம்.ரி. ஹசன்அலி ஆகியோரின் அணியினர் இப்போது முரண்பட்டிருக்கின்றனர்.
ஸ்தாபக தலைவர் மரணிக்கும் போது, மு.கா.வுக்கு 25 உயர்பீட உறுப்பினர்களும் 12 பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தனர். இப்போது அதனது உயர்பீட உறுப்பினர்களின் எண்ணிக்கை 90ஆக அதிகரித்த போதும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7ஆக குறைவடைந்திருக்கின்றது. இதற்கு பல காரணங்களை குறிப்பிடலாம்.
தேசிய காங்கிரஸின் உருவாக்கம், மக்கள் காங்கிரஸின் உருவாக்கமும் வளர்ச்சியும் இதில் முக்கியமானவையாகும். ஆயினும், மு.கா. கட்சியானது பிரதான முஸ்லிம் கட்சியாகவும் அதனது தலைவர் பிரதான முஸ்லிம் தலைவராகவும் இருந்து கொண்டு அரசியல் களச்சூழலில் ஏற்பட்ட இந்த மாற்றங்களைக் கருத்திற் கொண்டு, அஷ்ரப் காலத்தில் செய்தது போல சேவையைச் செய்து, மக்கள் நலனை முன்னிறுத்திச் செயற்பட்டிருந்தால், மு.கா. இதைவிடப் பலம் பொருந்திய கட்சியாக இருந்திருக்கும். அதனூடாக முஸ்லிம்களின் அரசியலும் தனி அடையாளத்தோடு மிளிர்ந்திருக்கும்.
அஷ்ரஃப் என்பவர் இலங்கையில் உள்ள எல்லா முஸ்லிம்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தலைவராக இருக்கவில்லை என்றே கூற வேண்டும். ஏனென்றால் கிழக்கைச் சேர்ந்த ஒருவர் பெரிய ஆளாக வருவதை விரும்பாத தென்பகுதி முஸ்லிம் அரசியல்வாதிகள் அஷ்ரபை அங்கீகரிக்கவும் இல்லை என்பது விடயமறிந்தோருக்கு தெரியும். ஆனாலும், அவர் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களாலும் அதற்கு வெளியில் வாழும் முஸ்லிம்களாலும் தமிழ் மக்களில் ஒரு பகுதியினராலும் முன்னைய அரசியல்வாதிகளை விட அதிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவராக திகழ்ந்தார் என்பதை மறந்து விடக் கூடாது. ஏனெனில் அவர் நல்ல மேய்ப்பராக இருந்தார்.
அவர் மரணித்த பிறகான இத்தனை வருடங்களில் முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் அடையாளம் எப்படி சீர்குலைந்து போயிருக்கின்றது என்பதற்கு வாசகர்களாகிய மக்களே சாட்சிகள். பெருந்தேசிய கட்சிகளோடு கூட்டுக் குடித்தனம் நடத்த முடியாது, தமிழ் தேசியம் சொல்வதெற்கெல்லாம் தலையாட்ட முடியாது என்று உணர்ந்த பிறகே, மு.கா. உருவாக்கப்பட்டது. ஆனால், இன்று
என்ன நடக்கின்றது?
மேலும் இரண்டு முஸ்லிம் கட்சிகள் உருவாகியுள்ளன. இவ்வாறு கட்சியைத் தொடங்கியவர்களும் ஏற்கனவே மு.கா.வின் அதிகாரமிக்க பதவிகளில் இருப்பவர்களும் தனித்துவ அரசியலில் முஸ்லிம் மக்களை சரியாக வழிநடாத்திச் செல்கின்றார்களா என்பது விடை தெரியாத ஒரு கேள்வியல்ல. ஐ.தே.க.வுடனும் சுதந்திரக் கட்சியுடனும் இணைந்து கொண்டு அமைச்சு, அரைஅமைச்சு, தேசியப்பட்டியல் எம்.பி. பதவிகளை பெறுவதே இவர்களுடைய உச்சக்கட்ட எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அதாவது, முன்னர் ஐ.தே.க.விலும் சு.க.விலும் அங்கம் வகித்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இன்றிருக்கின்ற முஸ்லிம் தலைவர்கள், பிரதான அரசியல்வாதிகளுக்கும் இடையே பெரிதாக என்ன வித்தியாசம் இருக்கின்றது?
அந்த அடிப்படையில், பிரதேச ரீதியான மேய்ப்பர்களும் தேசிய ரீதியான மேய்ப்பர்களும் உரிய வழியில் ஆடுகளை மேய்க்கின்ற பணியைச் செய்யாமல், வேறு விடயங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது அவ்வப்போது ஆதாரபூர்வாக வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலைமை, பிரதேச சபை உறுப்பினர் தொடக்கம் அமைச்சர் தொட்டு தலைவர்கள்; வரை எல்லோர் விடயத்திலும் பரவலாக அவதானிக்கப்படுகின்றது.
அமைச்சுப் பதவி, எம்.பி. பதவி இல்லாவிட்டால் சேவை செய்ய முடியாது என்று சிலர் நினைக்கின்றனர். சிலருக்கு அப்பதவிகள் இருந்தும் சேவை செய்யாமல் வேறு எதிலோ மூழ்கித் திழைத்திருக்கின்றனர். மக்களுக்கு விடிவு கிடைக்கும் திசைநோக்கி மக்களை வழிநடாத்த வேண்டிய அரசியல்வாதிகள், மக்களை தன்பாட்டில் விட்டுவிட்டு அற்ப விடயங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். சரியான வழியில் ஆடுகளை மேய்க்க வேண்டிய மேய்ப்பர்கள், ஆடுகளை தன்பாட்டில் மேய விட்டுவிட்டு, ஒரு நிழலில் ஆயாசமாக ஓய்வெடுத்துவிட்டு, எப்போதாவது நேரம் கிடைக்கும் போது ஆடுகளை நோக்கி ஒரு சத்தம் போட்டால் போதுமென்பது போல இவர்களும் நினைக்கின்றார்களோ தெரியாது.
மக்களின் உள்ளுணர்வு
எது எப்படியென்றாலும், தம்மை சரியான வழியில் அரசியல், சமூக, கலாசார ரீதியாக மேய்க்கின்ற மேய்ப்பர்கள் இப்போது களத்தில் இல்லை என்பதும், ஆடுமேய்ப்பதை ஒரு தொழிலாகத்தான் பலரும் கருதுகின்றார்கள் என்பதையும் முஸ்லிம் மக்களுக்கு காலம் உணர்த்திக் கொண்டிருக்கின்றது. வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அதிலும் குறிப்பாக கிழக்கு முஸ்லிம்கள் அண்மைக்காலமாக இதை உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள். கிழக்கில் புதிதாக மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் முன்னெடுப்புக்களை ஓரளவுக்கு இதனது வெளிப்பாடாகவும் கொள்ள முடியும்.
வடக்கு, கிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களும் இதை உணராமல் இல்லை. ஆனால், அவர்கள் வேறு சமூகங்களோடு இரண்டறக் கலந்து வாழ்பவர்கள். அவர்களுடைய பிரச்சினைகளின், அபிலாஷைகளின் வடிவம் சற்று வேறுபடுகின்றது. அவர்கள் தனித்துவ அடையாளத்தை அன்றி பெருந்தேசிய அரசியலையே சார்ந்திருக்கின்றனர். பல்லின சமூகச் சூழலில் அதுவே அவர்களுக்கு பாதுகாப்பானதும் கூட.
ஆயினும், நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் தங்களுக்கு பிரதானமான ஒரு முஸ்லிம் தலைவர், பிரதானமான ஒரு மேய்ப்பர் இருக்க வேண்டும் என்று மெல்ல மெல்ல உணரத் தலைப்பட்டிருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். அதற்குக் காரணங்களும் உள்ளன.
இலங்கை அரசியலில் இது ஒரு நிலைமாறுகாலம் ஆகும். இலங்கையில் இதுவரை காலமும் புரையோடிப் போயிருந்த இனப்பிரச்சினைக்கான தீர்வை அரசாங்கம் முன்வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. நாட்டில் நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமென்ற அடிப்படையில் சர்வதேசமும் இதற்கு கடுமையான அழுத்தங்களை கொடுத்து வருகின்றது. ஆனால், தேசிய அரசாங்கத்திற்குள் ஏற்பட்டிருக்கின்ற சில பாதகமான நிலைமைகளின் காரணமாக தீர்வு வழங்கும் செயற்பாடு தாமதமாகிக் கொண்டிருக்கின்றதே தவிர, ஏதோ ஒரு அடிப்படையில் தீர்வுப் பொதி நாளை இல்லாவிடினும் நாளை மறுதினமாவது முன்வைக்கப்படும் வாய்ப்பிருக்கின்றது.
தெளிவற்ற நிலைப்பாடு
தீர்வுப் பொதி என்று வருகின்ற போது முஸ்லிம்களுக்கு எவ்வாறான உப தீர்வு வழங்கப்பட வேண்டும்? வடக்கு, கிழக்கை இணைப்பதா இல்லையா? இணைத்தால் என்ன தீர்வு? இணைக்காவிட்டால் என்ன தீர்வு? தனி மாகாணம் அவசியமா? சமஷ்டி சிறந்ததா? என்ற தெளிவான நிலைப்பாடுகள் எதுவும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருப்பதாக தெரியவில்லை. அதேபோன்று, வடக்கு, கிழக்கிலும் அதற்கு வெளியிலும் உள்ள மக்களின் சிவில் பிரச்சினைகள், அபிலாஷைகளை வென்றெடுக்க இந்த மேய்ப்பர்கள் முன்னிற்கவில்லை. குறைந்தபட்சம், அதற்கான வழியில் கூட வழிநடாத்திச் செல்வதாக தோன்றவில்லை.
இதேவேளை, இனவாதத்தாலும் பயங்கரவாதத்தாலும் நடந்த அநியாயங்களை சொல்லி வாக்குகளைப் பெற்ற முஸ்லிம் அரசியல்வாதிகளை நாமறிவோம். ஆனால் இன்று அவர்கள் இந்த அரசாங்கத்தின் உள்ளேயும் வெளியேயும் இருக்கின்ற போதும், அதற்கான நியாயத் தீர்ப்பை பெற்றுக் கொடுக்கவில்லை என்பதும் அவதானத்திற்குரியது.
முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்களின் விருப்பமின்றி தமது தற்றுணிபில் எடுக்கின்ற தீர்மானங்களை மக்களின் நிலைப்பாடாக காட்ட முற்படுவது வழக்கமானது. மக்களின் விருப்பு வெறுப்பு அறியாமல், தங்களுடைய கட்சியின் பிரதேச ஆதரவாளர்களும், இணைப்பதிகாரிகளும், கொந்தராத்துக் காரர்களும் சொல்தை மக்களின் தீர்மானமாக அவர்கள் நினைக்கின்றனர். இவ்வாறு தமது சுய கணிப்புக்களை மக்கள் மீது திணிப்பது, ஆடுகளை புல் இல்லாத ஆனால் தமக்கு சாதகமான நிலங்களில் மேய விடுவது போலானதாகும்.
எனவேதான், இலங்கை முஸ்லிம்களை சரியான வழியில் இட்டுச் செல்வதற்கு, இந்த மக்களுக்கு ஒரு அநியாயம் நடந்தால் பதவி பட்டங்களை பார்க்காமல் குரல் எழுப்புவதற்கு, எடுத்த கொள்கையில் விடாப்பிடியாக இருப்பதற்கு, விட்ட தவறுகளை ஏற்றுக் கொள்வதற்கு, தவறு செய்வோரை தண்டிப்பதற்கு, ஒவ்வொரு முஸ்லிம் பொதுமகன் குறித்தும் சிந்தித்து செயலாற்றுவதற்கு ஒரு சிறந்த தலைவர், மேய்ப்பர் இப்போது தேவையாக இருக்கின்றது.
மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள வெளித்தெரியாத இந்த உணர்வை முஸ்லிம் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வெற்றிடத்தை, யார் நிரப்புவது என்பதை முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் உடனடியாக தம்மை சுய விசாரணை செய்து முடிவெடுத்துக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால், ஆடுகளுக்குப் பின்னால் மேய்ப்பர்கள் ஓடித்திரிய வேண்டிய காலம் வரும்.
– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 19.03.2017)