மாணிக்கமடுவில் பிரதேச முஸ்லிம்களின் காணி அபிவிருத்தி வேலையின் தடைக்கு எதிராக தீர்மானம்

எம்.ஜே.எம்.சஜீத்

இறக்காமம் மாணிக்கமடுவில் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளுக்குள் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ள வேண்டாமென விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக தீர்மானம்
தீகவாபி பௌத்த விகாரைக்கு செல்லும் யாத்திரிகர்கள் மாணிக்கமடு கிராமத்தில் சற்று தரித்து நிற்பதற்காகவே சிறிய பௌத்த விகாரை அமைக்கப் போகின்றோம் எனக் கூறிவிட்டு இப்பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பூர்வீக காணிகளுக்குள் எவ்விதமான கட்டிடங்களோ, வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளையோ மேற்கொள்ளக்கூடாது என கிழக்கு மாகாண காணி ஆணையாளரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் அவசரப் பிரேரணை சமர்ப்பித்த போது இறக்காமப் பிரதேச செயலாளரினாலும் அம்பாறை மாவட்ட அரச அதிபரினாலும் தீர்க்கப்பட வேண்டிய இந்த விடயத்தினை கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்க முடியாது என தவிசாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கிழக்கு மாகாண காணி அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து கண்டனம் தெரிவித்து தீர்மானம் எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் இறக்காமத்தில் மாத்திரம் இன்றி கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு சொந்தமான பூர்வீக காணிகளை இழக்கும் நிலைமை ஏற்படும்.
 
எனவே இது தொடர்பாக இக் கூட்டத்தில் தீர்க்கமான முடிவை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை இறக்காம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பான முன்மொழிவினை சமர்ப்பித்த போது மேற்கண்டவாறு தெரிவித்தார். 
இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ. மன்சூர், பொறியியலாளர் எஸ்.ஐ.மன்சூர் ஆகியோரின் தலைமையில் (14) இறக்காமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது மேற்குறித்த விடயம் தொடர்பாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு இறக்காமம் – மாணிக்கமடு கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்யப்பட்டு வந்த விவசாயிகளின் காணிகளுக்குள் மறு அறிவித்தல் வரும் வரை கட்டிடங்களோ, வேறு அபிவிருத்தி பணிகளோ மேற்கொள்ளக் கூடாது என கிழக்கு மாகாண காணி ஆணையாளரினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் குறித்து பின்வருமாறு இறக்காமப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
கிழக்கு மாகாண காணி ஆணையாளரினால் இறக்காம பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மாணிக்கமடு பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பூர்வீக காணிகளுக்குள் கட்டிடங்கள் அமைப்பதற்கோ, வேறு எதுவிதமான அபிவிருத்திப் பணிகளையோ மறு அறிவித்தல் வரும் வரை மேற்கொள்ளக் கூடாது என்ற அறிவித்தலை இறக்காமப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு வண்மையாகக் கண்டிக்கிறது.
இதேவேளை அம்பாறை மாவட்ட அரச அதிபர் துசித பீ வணிகசிங்கவுக்கும் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது மாணிக்கமடு கிராமத்தில் உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பூர்வீக காணிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையினை நிறுத்தி அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் மக்களின் காணிகளை பாதுகாக்கக் கூடிய வகையில் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் உதுமாலெப்பை அரச அதிபரிடம் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக இறக்காமம் – தமனப் பிரதேச செயலகங்களின் எல்லைகள் தீர்மானிக்கப்படாமல் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்படுவதனால் இறக்காமப் பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள நாவலடி வட்டையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களில் விவசாயம் மேற்கொள்வது தடுக்கப்பட்டுள்ளது. எனவே, அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு இறக்காம பிரதே செயலக எல்லைகளை அடையாளப்படுத்தி முஸ்லிம்கள் தங்களுக்குச் சொந்தமான காணிகளில் விவசாயம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசாதாரன நிலைமையினை நீக்க வேண்டும் எனவும் உதுமாலெப்பை அரச அதிபரிடம் கேட்டுக் கொண்டார்.