எமது நியாயமான போராட்டத்தை இராணுவமும், பொலிஸாரும் இணைந்து கலைக்க முயற்சி செய்கின்றார்கள். ஆனால் நாம் ஓயப்போவதில்லை பல்வேறு வடிவங்களில் நிலம் மீட்கும் வரை எமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோப்பாபுலவு மக்கள் தெரிவிக்கின்றனர்.
கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தாம் பூர்வீகமாக வாழ்ந்த கேப்பாபுலவு கிராமத்தையும் சொந்த நிலங்களையும் வீடுகளையும் கையகப்படுத்தி அதில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், நிலத்தைவிட்டு வெளியேறவேண்டுமென கோரி முல்லைத்தீவு இராணுவத்தலைமையக வாயிலுக்கு அண்மையில் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 15ஆவது நாளாக தொடர்கின்றது.
போராட்டம் இடையூறு மிக்கதென தெரிவித்து முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொடுத்திருந்த வழக்கில், குறித்த போராட்டம் தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்கு, கேப்பாபுலவு இராணுவத்தலைமையகத்தினை சேர்ந்த இராணுவ அதிகாரிகளை, இன்று நீதவான் விசாரிக்கையில் இராணுவத்தினர் தாம் எடுத்த புகைப்படங்களை காட்டி, மக்களின் போராட்டம் தமக்கு இடையூறு விளைவிப்பதாக கூறியிருந்தனர்.
இந்நிலையில் மக்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக நீதவானுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளத்தோடு, இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் சாட்சியங்களை கொண்டு, போராட்டத்தை தடை செய்யும் உத்தரவை வழங்க கூடாதெனவும் போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் சாட்சியங்களையும் கேட்கவேண்டுமென சட்டத்தரணிகள் வாதாடிய நிலையில், வழக்கு நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், தாம் ஜனநாயக முறைப்படியே போராடி வருவதாகவும், குறித்த போராட்டத்தை இராணுவத்தினதும், பொலிஸாரினதுவும் பொய் சாட்சியங்களை கொண்டு நசுக்க முடியாது எனக்கூறி தமது போராட்டம் தீர்வு கிட்டும் வரை இடம்பெறும் என தெரிவிகின்றனர்.
அத்தோடு கேப்பாபுலவு பூர்வீக கிராமம் ,சீனியா மோட்டை, பிலக்குடியிருப்பு ,சூரிபுரம் போன்ற கிராமங்களில் இராணுவம் நிலைகொண்டுள்ளதோடு, கேப்பாபுலவு பூர்வீக கிராமம் தவிர்ந்த ஏனைய அனைத்து கிராமங்களிலும் பெருமளவான நிலங்கள் இராணுவத்தால் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேப்பாபுலவு பூர்வீக கிராமத்தில் பிரதான வீதியை மறித்து குடியிருப்பு காணிகள்,வீடுகள், பாடசாலை,வணக்கஸ்தலங்கள்,விளையாட்டு மைதானங்கள், தோட்ட நிலங்கள்,வயல் நிலங்கள் என அனைத்தையும் கையகப்படுத்தி, 480 ஏக்கருக்கும் மேற்பட்ட மக்களின் நிலங்களில், 10 இற்கும் மேற்பட்ட இராணுவத்தின் பிரதான படைப்பிரிவுகளின் முகாம்களை அமைத்துள்ளதோடு, பாரிய உணவு விடுதிகளையும், உல்லாச பொழுதுபோக்கு தளங்களையும் அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி – வீரகேசரி