நிதியமைச்சரிடமிருந்து 300 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி மனு அனுப்பியுள்ளதாக பந்துல தெரிவிப்பு

கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடமிருந்து 300 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி, தனது சட்டத்தரணியூடாக கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

கூட்டு எதிரணியினரின் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மத்திய வங்கி பிணைமுறி சம்பந்தமாக பொய்யான கருத்துக்களை பரப்ப வேண்டாமென ஜனாதிபதி ஆணைக்குழு தன்னை பணிக்கவில்லை எனவும், மாறாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் பதிலளிப்பதற்கு சந்தர்ப்பம்வழங்குமாறு ஆணைக்குழுவுக்கு கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வழங்கிய கோரிக்கை தொடர்பாக விசாரிக்கப்பட்டதாக தெரிவித்தார். 

மத்திய வங்கி பிணைமுறி தொடர்பில் தான் எந்தவொரு பொய்குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கவில்லை எனவும், தான் அறிந்த விடயங்களையே மக்களுக்கு சொல்வதாகவும், இருப்பினும் தான் போய் கூறியதாக சில தரப்பு தவறான கருத்துக்களை பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

மேலும் ஆணைக்குழு தன்னிடம் விசாரணை நடத்திய பின்னர், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்களை கடுமையாக சாடியிருந்தார். ஆகவே அது தொடர்பில் 300 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி தனது சட்டத்தரணி ஊடாக கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.