அமெரிக்கா அதிபர் டிரம்ப் – சவூதி இளவரசர் முஹம்மது-பின் சல்மான் பேச்சு வார்த்தை

பொருளாதார நெருக்கடியால் தள்ளாட்டம் போட்டுவரும் சவுதி அரேபியாவை சரிவில் இருந்து மீட்கும் அரசின் புதிய பொருளாதார புனரமைப்பு திட்டத்துக்கு அந்நாட்டின் மந்திரிசபை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒப்புதல் அளித்தது.

சர்வதேச சந்தையில் பெட்ரோலின் விலை தொடர்ந்து கடும்சரிவைச் சந்தித்து வருவதால் எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியுள்ள சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் சமீபகாலமாக பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகிறது.

இதற்கிடையில், சவுதி அரேபியாவில் வாழும் மக்களின் மின்சாரத்தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த தேவையை நிறைவு செய்ய கச்சா எண்ணெயை எரித்து மின்சாரம் தயாரிக்கப்படுவதால் அவ்வகையிலும் அந்நாடு பெரும் இழப்பை சந்தித்து வருகிறது.

இந்த நிலையை மாற்ற, பல்வேறு பொருளாதார சிக்கனம் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக சவுதி மன்னர் முஹம்மது பின் சல்மான் தலைமையிலான நிபுணர்கள் குழு விரிவாக ஆலோசனை நடத்தியது. இதன் விளைவாக, மந்திரிசபையின் செலவினங்களில் ஒருபகுதியை குறைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான தேசிய பட்ஜெட்டில் பல ஆண்டுகளுக்கு பின்னர் மின்சார கட்டணம் மற்றும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதும் நினைவிருக்கலாம்.

மேலும், வெளிநாட்டில் கடன் வாங்கும் நிலைக்கு சவுதி அரேபியா தள்ளப்பட்டுள்ளது. பல்வேறு சர்வதேச வங்கிகளில் இருந்து ரூ.60 ஆயிரம் கோடி கடன் கேட்டு அந்நாடு விண்ணப்பித்துள்ளது. கடனை வாங்கினால் தான் நாட்டை நடத்திச்செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சவுதி அரசுக்கு சொந்தமான ‘அரம்கோ’ எண்ணெய் நிறுவனத்தின் பங்குகளை விற்க சவுதி பட்டத்து இளவரசரும், அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரியுமான முஹம்மது பின் சல்மான் கடந்த ஆண்டில் முடிவு செய்தார்.

இந்நிலையில், சவுதி நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் தற்போது ஜப்பான், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து அந்நாட்டின் பொருளாதாரச் சரிவை சமநிலைப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சவுதி இளவரசர்கள் 25 பேர் உள்பட சுமார் ஆயிரம் உயரதிகாரிகள் கொண்ட பெரிய குழுவும் அவருடன் சென்றுள்ளது.

இதைதொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பொருளாதார நெருக்கடியில் இருந்து சவுதி அரேபியாவை விடுவிப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த சவுதி நாட்டு பட்டத்து இளவரசர் முஹம்மது-பின் சல்மான் இன்று வாஷிங்டன் நகருக்கு புறப்பட்டு சென்றார்.

அங்கு ஓரிரு நாட்கள் ஓய்வெடுக்கும் சவுதி இளவரசர் வரும் அமெரிக்க உயரதிகாரிகள், பல்வேறு துறைகளை சேர்ந்த அமெரிக்க மந்திரிகள் மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து தங்கள் நாட்டின் தொழில் முதலீடுகளை அதிகரிப்பது, அமெரிக்கா- சவுதி அரேபியா இடையிலான பல்வேறு தொடர்புகளை மேம்படுத்துவது ஆகியவை குறித்து விரிவாக ஆலோசனை நடத்துவார் என சவுதி அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக, ரியாத் நகரில் நேற்று சிட்டி குரூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மைக்கேல் கோர்பாட் இளவரசர் முஹம்மது-பின் சல்மானை சந்தித்து சவுதியில் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.