சிரியாவின் தமஸ்கஸ்ஸில் இடம்பெற்ற இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 59 பேர் பலி

சிரியாவின் தலைநகரான தமஸ்கஸ் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் ஈராக்கை சேர்ந்த 47 பக்தர்கள், 12 சிரியாவை சேர்ந்த அரசு வீரர்கள் உயிரிழந்தனர். ஒரு வெடிகுண்டு பேருந்திலும், மற்றொரு வெடிகுண்டினை தற்கொலை படையை சேர்ந்தவர் வெடிக்க செய்ததாக ஆய்வு மைய தலைவர் ரமி அப்தெல் ரகுமான் தெரிவித்துள்ளார். 
பெரும்பாலானோர் இந்த தாக்குதலில் காயமுற்றிருப்பதாகவும், அவர்களில் பலர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சிரிய நாட்டு செய்திகளின் படி இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், 120 பேர் காயமுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் வெடிகுண்டு வெடித்ததும் மக்கள் கூடியதை தொடர்ந்து இரண்டாவது வெடிகுண்டு வெடிக்க செய்யப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தமஸ்கஸ் தாக்குதலுக்கு சிரியா நாட்டு வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.