சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் களம் இறங்க டி.டி.வி.தினகரன் திட்டம்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பெயர் 15-ந் தேதி (புதன்கிழமை) அறிவிக்கப்பட இருக்கிறது. கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் களம் இறங்க திட்டமிட்டு வருகிறார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. 3 ஆக பிரிந்துவிட்டது. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், ஜெ.தீபா ஆகிய 3 பேரின் தலைமையின் கீழ் கட்சித் தொண்டர்கள் பிரிந்து சென்றுவிட்டனர்.


அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருப்பதால், அக்கட்சியை துணைப் பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரன் வழிநடத்தி வருகிறார். ஆனால், கட்சி தொண்டர்கள் அவரை ஏற்றுக்கொள்வதில் எதிரும் புதிருமான நிலையிலேயே இருக்கிறார்கள்.

எனவே, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் நற்பெயரை பெறும் முயற்சியில் டி.டி.வி.தினகரன் இறங்கியுள்ளார். தனக்கு யாரும் சால்வையோ, பூங்கொத்தோ அளிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஆங்காங்கே ஒட்டிவைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தனது மதிய உணவை கட்சி நிர்வாகிகளுடன் தான் டி.டி.வி.தினகரன் சாப்பிடுகிறார். நேற்று மதியம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் டி.டி.வி.தினகரன் கட்சி நிர்வாகிகளுடன் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் தமிழ்மகன் உசேன், அமைப்பு செயலாளர் பி.வி.ரமணா உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் யாரை நிறுத்துவது? என்று விவாதிக்கப்பட்டது.

அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும், டி.டி.வி.தினகரனையே களம் இறங்க வலியுறுத்தி வருகின்றனர். டி.டி.வி.தினகரனோ தேர்தல் களத்தில் இறங்கலாமா?, மக்களின் ஆதரவு நமக்கு எப்படி இருக்கும்? என்று யோசித்து வருகிறார். தொடர்ந்து, நிர்வாகிகள் அவரை தேர்தலில் நிற்கச் சொல்லி வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், வரும் 15-ந்தேதி அ.தி.மு.க. ஆட்சி மன்றக் குழு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில், ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட இருக்கிறது.

இதற்கிடையே, நேற்று அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வந்த அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?.

பதில்:- ஒவ்வொரு மாநிலத்திலும் கடந்த 5 ஆண்டுகள் ஆளும் கட்சியாக இருந்தவர்களுக்கு எதிராக தேர்தல் முடிவுகள் வந்திருக்கிறது. உத்தரபிரதேசத்தில் வெற்றி பெற்றிருக்கும் பா.ஜ.க.வுக்கும், பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், மற்ற மாநிலங்களில் வெற்றி பெற்றிருக்கும் புதிய அரசாங்கங்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

கேள்வி:- உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருப்பது தமிழக அரசியலை பாதிக்குமா?.

பதில்:- எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, திருச்சி குட்செட் பாரம் சுமக்கும் தொழிலாளர்கள் சங்கத்தினரும், தே.மு.தி.க.வினரும் என சுமார் 100 பேர் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர். மேலும், முற்போக்கு முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் செங்கம் ஜப்பார், அக்கட்சியை கலைத்துவிட்டு அ.தி.மு.க.வில் இணைந்தார்.