முஸ்லிம் பெண்கல்வி வரலாற்றில் ஒரு சாதனையான அல்லது சோதனையான ஒரு சந்தர்ப்பம் இன்னும் சில நாட்களில் நடந்துவிடப்போகின்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் தேர்தலில் பல சவால்களுக்கு மத்தியில் ஒரேயொரு பெண்ணாக தனித்து நின்று போட்டியிட்டு இலங்கை வரலாற்றில் முதன்முதலில் இரு ஆண்களுடன் மூவரில் ஒருவராக கலாநிதி. சபீனா தெரிவு செய்யப்பட்டுள்ளார், அகில இலங்கையிலும் பெண்களின் கல்வியில் ஒரு தேக்கநிலை காணப்படுகின்ற நிலையில் தனது குடும்பப் பொறுப்புக்களுக்கு அப்பால் மூன்றாவது பட்டமாக கலாநிதிப்பட்டம் வரை பயின்று, பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் முதல் துறைப் பொறுப்பாளர், பீடாதிபதி என உயர்ந்து ஒரு சிறந்த நிர்வாகியாகவும் விரிவுரையாளராகவும் சுமார் 20 வருடங்களாக கடமையாற்றி வருபவர் என்பதுடன் பொதுச் சொத்து, நிதி என்பவற்றில் பேனுதலானவரும்கூட.
இப்பொழுது முழு இலங்கையிலும் இருக்கும் பெண்கள், மாணவிகள் ஆகியோருக்கு முன்னுதாரணமாக விளங்கும் முதலாவது பெண் உபவேந்தர் எனும் சந்தர்ப்பம் ஒரு பெண்ணுக்கு கிடைப்பதில் ஆண்களுக்கு சமனான போட்டியை பீடாதிபதி. கலாநிதி சபீனா எதிர்நோக்கியுள்ளார். இந்நிலையில் முடிவை அரசியல்தான் தீர்மானிக்கும் என்றால் அதனை நனவாக்கும் ஓர் தார்மீகப் பொறுப்பு முழு அரசியல் வாதிகளுக்கும், சிவில் அமைப்புகளுக்கும், சமூக கழகங்களுக்கும் இருக்கின்றது, தவறும்பட்சத்தில் ஒரு வரலாற்று தவறை செய்தவர்களாகிவிடுவோம், இனி இப்படியொரு சந்தர்ப்பம் எப்போது வரும் என்று தெரியாத கைக்கெட்டியதை கோட்டை விட்ட நிலைதான் மீதமாகும்.
கலாநிதி சபீனா இப்பிரதேசத்திலேயே பிறந்து வளர்ந்ததுடன், தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலேயே 20வருட கால அனுபவத்தைக் கொண்டவர், இவர் இப்பிரதேசத்தின் பல்லின சமூகங்களின் கலாசாரம், விருப்பு வெறுப்பு என்பவற்றை நன்கு அறிந்தவர், பிரதேச நிலபுலங்களோடு நன்கு பரிச்சயமானவர், உப வேந்தர் பதவி ஒரு நிர்வாக பதவியாகும், இப்பதவிக்கு கல்வித் தகைமைகளுக்குச் சமனாக பல்கலைக்கழக நிர்வாக அனுபமும் தேவை, இந்த நியதிப்படி பார்த்தாலும் ஏனைய இருவரிலும் கலாநிதி சபீனாவே முன்னிலைப்படுகிறார், இத்தகைய சந்தர்ப்பத்தில் அவர் அரசியல் அழுத்தங்களால் புறந்தள்ளப்படுவாராயின் அது ஒரு பால்நிலை கருதிய அநீதியாகவே பார்க்கப்படும், இன்றுவரையிலும் ஆய்விலும் நிர்வாகத்திலும் தன்னார்வ முயற்சியாளராக முன்னேறிவரும் இந்த பெண் ஆளுமையின் மீது விழும் ஒரு மரண அடியாகவே அது இருக்கும், பெண் கல்வி வரலாறு நெடுகிலும் இச்சந்தர்ப்பத்தை நினைத்து நினைத்து வருந்தும்.
முஸ்லிம் பெண்கள் அதிகம் கல்விபயிலும் ஒரு பல்கலைக் கழகத்தில் ஒரு முஸ்லிம் பெண் உபவேந்தர் கிடைப்பதற்கான வாய்ப்பு கைக்கெட்டிய நிலையில் அது நழுவிப்போகுமா என்பதே பெண் சமூகத்தினதும் பெண் கல்வியியலாளர்களினதும் கவலையாகும்.