ஒரு பச்சோந்தியின் பச்சைக் கிளி ( நிழலான நிஜங்கள் – நடந்தது என்ன? – பகுதி 8 )

ஹக்கீம் வெளியே செல்லும் போது குமாரியை வீட்டிற்குள் வைத்துப் பூட்டி திறப்பை எடுத்துக்கொண்டே சென்றார்

(ஒருவரின் குறைகளை வெளிப்படுத்தஅனுமதிக்கப்பட்ட 6 சந்தர்ப்பங்களைப் பற்றி இமாம் நவவி கூறும்போது “இறுதியாக ஒரு தலைமைத்துவத்தில் இருக்கும் ஒருவர் அந்தப் பொறுப்புக்கு பொருத்தமானவரல்ல அல்லது அவர் ஒரு பாவி என்ற காரணங்களுக்காக தனது கடமையை நிறைவேற்றவில்லை எனும் சந்தர்ப்பங்களில் ஒருவர் அவரின் குறைகளை அவரின் மீது அதிகாரம் கொண்டவர்களிடம் குறிப்பிட்டு அவரை நீக்கவோ அல்லது அவருக்குப் பதிலாக இன்னொருவரை நியமிக்கவோ முயல வேண்டும்.அல்லது அவருக்குப் பொறுப்பாக இருப்பவர்கள் அவரின் குறைகளைப் பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் அவரோடு நடந்து கொள்ள வேண்டிய முறையை தெரிந்து கொள்வதோடு அவரால் ஏமாற்றப் படாமல் தவிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் அவரை நேர்வழிப்படுத்த அல்லது பதவியில் இருந்து விலக்க முயலலாம்”-(அல் அத்கார், ஹிப்ழுல் லிஸான்,இமாம் நவவி)

நீ உண்மையைத் தெரிந்து கொள்வாய்.அது உன்னைப் பைத்தியமாக்கிவிடும் -Aldous Huxley

அமெரிக்காவின் பொஸ்டன் நகரின் உயர் மறை தேவாலயத்தின் பாதிரியார்கள் அங்கு தேவாலயத்திற்கு கற்க வரும் இளம் பாதிரிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துகொண்டு வந்ததையும்,பின்னர் அதனை தேவாலயத்திற்குப் பொறுப்பான கார்டினல் ‘பேர்டினான்ட் பிரான்ஸிஸ் லோ’ (Berninarnd Francis Law) விற்கு அவை அனைத்தும் தெரிந்திருந்தும் அதனை வெளியே சொல்லாமல் தேவாலயத்தின் மானத்தைக் காப்பதற்காக பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் பாதிரிகளை பாதுகாத்துக் கொண்டும், பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்திக் கொண்டும் இருந்தார் என்ற உண்மையை பல வருடங்களுக்கு பின்னர் 2002ல் பொஸ்டன் குலோபல் பத்திரிகை போட்டு உடைத்தது.இறுதியில் விவகாரம் வத்திகானின் பாப்பரசர் வரை சென்று இறுதியாக கார்டினல் பேர்டினான்ட் பதவியை ராஜனாமாச் செய்யும் நிலை ஏற்பட்டது.

உண்மையின் பண்பே அதுதான்.வின்ஸ்டன் சேர்ச்சிலின் வார்த்தையில் சொல்வதானால் ஒரு பொய் உலகை அரைவாசித்தூரம் வரைக்கும் சுற்றிவந்துவிடும்.திடீரென உண்மை வந்து பொய்யின் ஆடையை அவிழ்த்துவிடும். ஹக்கீம் அவர்கள் இத்தனை வருடமாக மறைத்த பொய்யின் ஆடையை உண்மை வந்து அவிழ்க்கிறது. எவ்வாறு பொஸ்டன் தேவாலயம் பாலியல் துஷ்பிரயோகத்தை மறைத்த கதையை பல வருடங்களுக்கு பின்னர் பொஸ்டன் குலோப் பத்திரிகை வெளிச்சம் போட்டு தேவாலயத்தின் உண்மை முகத்தை உரித்துக் காட்டியதோ அதே போன்று ஹக்கீம் தன் மக்களுக்கும் நாட்டிற்கும் மறைத்தவைகள் பத்து வருடங்களுக்குப் பின்னர் இங்கு வெளிக்கொணரப்படுகிறது. உண்மைகள் தூங்கலாம்.சாகாது என்பது இதனைத்தான்.
கதைக்கு வருவோம்.

குமாரி தன் கதையைக் கூறி முடித்தார். ஏப்ரல் 13ம்திகதி ஹக்கீமின் வீட்டடியில் காத்துக்கொண்டிருந்தது,பின்னர் ரிஷாடின் குழுவினர் தன்னை அழைத்துக் கொண்டு சென்றது,தனக்கும் ஹக்கீமுக்கும் இடையிலான விவகாரத்தை அவர்கள் வீடியோ செய்தது, ஜனாதிபதியைச் சந்தித்தது, ஜனாதிபதி விவகாரத்தைக் கடிதத்தில் எழுதச் சொன்னது,பின்னர் பாராளுமன்றம் சென்றது என்று நடந்த அனைத்தையும் குமாரி சொல்லி முடித்தார்.

ஹக்கீமுக்கு திகில் பிடிக்க ஆரம்பித்தது.வீடியோ எப்படியும் அரசாங்கத்தில் கைகளில் இருக்கும்.எந்த நேரத்திலும் அவர்கள் அதை வைத்து மிரட்டலாம். எந்த நேரத்திலும் அதனை வெளியிடவும்செய்யலாம். ஹக்கீமின் நெற்றி முடியைப் பிடித்து தாங்கள் விரும்பிய பக்கம் ஆட்டுவிக்க முடியுமான ஒரு விவகாரம் அரசாங்கத்தின் கைகளில் கிடைத்துவிட்டது.எப்படியாவது அதனை முறியடிக்காவிட்டால் காங்கிறஸ் அன்றோடு அழிந்திருக்கும்.அதற்கு ஒரே ஒரு வழி குமாரிதான். 

குமாரியை வைத்து இன்னொரு வீடியோவை எடுக்க வேண்டும்.அதில் ரிஷாடும் அவருடைய கூட்டமும் ஜனாதிபதியுடன் சேர்ந்து தன்னை மிரட்டி ஹக்கீமிற்கும் தனக்குமிடையில் தொடர்பிருப்பதாக பொய் சொல்லச் சொன்னார்கள் என்று குமாரியை வைத்தே சொல்லச் சொன்னால் விவகாரம் முறியடிக்கப்பட்டுவிடும்.
இதனை செய்துவிட்டால் பல நன்மைகள் ஹக்கீமிற்கு கிட்டும். தனக்கு தலையிடியாக இருந்த ரிஷாடின் குழுவினரை துரோகிகள் என்று பட்டம் கட்டி கட்சியை விட்டு அகற்ற முடியும்,சந்திரிக்கா தன்மீது அநாவஸ்யமாகப் பழி சுமத்துகிறார் என்று வெளியே சொல்லிவிட முடியும்,எல்லாவற்றிற்கும் மேலாக குமாரி ஏற்கனவே பதிவு செய்திருக்கும் வீடியோவை அரசாங்கம் வெளியாக்கும் பட்சத்தில் புதிய வீடியோவைக் காட்டி குமாரியை அரசாங்கமும், ரிஷாடும் பலவந்தப்படுத்தப்படுத்தி செய்தார்கள் என்று அதையும் முறியடித்துவிடலாம்.ஒரு கல்லில் பல மாங்காய்கள் பறிக்கலாம்.

இல்லாத ஒரு உறவைப் பலவந்தப்படுத்தி ரிஷாடும் அரசாங்கமும் வீடியோ செய்து விட்டார்கள் என்று ஒரு புதிய வீடியோவை செய்வதற்கு குமாரியை எப்படி இணங்க வைப்பது?குமாரியின் பலவீனம் தன் மீது கொண்ட அபரிதமான காதல் என்பது ஹக்கீமுக்கு நன்றாகத் தெரியும்.

முஸ்லிம் காங்கிறஸின் தேசியத் தலைவர் தன்னால் அநீதியிழைக்கப்பட்டவளை மீண்டும் ஏமாற்ற முடிவு செய்தார்.

‘நான் சொல்வது படி செய்.இந்தப் பிரச்சினையை எனக்கு தீர்த்துக் கொடு உன்னை கட்டாயம் திருமணம் முடிக்கிறேன்’.ஹக்கீம் மீண்டும் வாக்களித்தார்.ஹக்கீமை மணப்பதுதான் தன் வாழ்க்கையின் இலட்சியம் என்றிருப்பவளுக்கு அந்த வார்த்தை போதுமானதாக இருந்தது.ஹக்கீமின் வலைக்குள் மீண்டும் வீழ்ந்து ஆமோதித்தாள் குமாரி.

இண்டகொண்டினெண்டல் ஹோடலில் குமாரி தங்கியிருந்த முன் அறையில் பஷீர் அவர்களும் ஹக்கீமின் பிளவர் வீதி நண்பரும் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்தனர்.குமாரியின் அறைக்குள் இருந்த ஏ.சீக்குள் ஒரு வீடியோ கெமரா பொருத்தப்பட்டது.ஒரு ரெகொடர் குமாரியின் கட்டிலுக்கு கீழே வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தைத்தான் பஷீர் தனது முகநூல் பதிவொன்றில் தெரிவித்தார் என நினைக்கிறேன்.

குமாரி ரிஷாடையும்,நஜீப் ஏ மஜீதையும் ஹோட்டலுக்கு அழைத்தார்.அந்த அழைப்பு ஹக்கீம் தங்களுக்கு விரிக்கும் வலை என்று தெரியாமல் அவர்கள் இருவரும் இன்டகொன்டினென்டலில் குமாரியின் அறை 625க்குச் சென்று கதவைத் தட்டினர். அவர்களுக்கிடையில் அன்று நடந்த அனைத்து உரையாடல்களும் ஒளித்துவைக்கப்படிருந்த ரெகோடரிலும்,கெமெராவிலும் பதிவாகின.அந்த சம்பாஷணை பின்னர் பத்திரிகையில் வந்தது. 

அதில் மிகவும் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் ஹக்கீமுக்கும் குமாரிக்கும் இடையில் இருந்த உறவை உறுதிப்படுத்த ரிஷாட்,நஜீப் மற்றும் குமாரிக்கிடையில் அன்று நடந்த அந்த சம்பாஷனையே போதுமானது. அந்த முழு சம்பாஷனையையும் ஹக்கீம் பத்திரிகைக்குக் கொடுத்திருந்தார். பத்திரிகையும் அதனை வெட்டாமல் வெளியிட்டுவிட்டது. எல்லோருடைய கவனமும் குமாரி ஜனாதிபதியைச் சந்தித்ததையும், ரிஷாட் குமாரியுடன் பேசுவதையும் நிரூபிப்பதில் கவனம் செலுத்தியதால் அந்த சம்பாஷனையில் ஹக்கீமுக்கும் குமாரிக்கும் இடையில் இருந்த தொடர்பு கூறப்படுவது கவனிக்கப்படாமல் போய்விட்டது.அதனை நான் மீண்டும் மீண்டும் வாசித்த போது அவை ஹக்கீமுக்கும் குமாரிக்கும் இடையே இருந்த உறவைத் தெளிவாகச் சாட்சி சொல்லின.அந்தப் அந்த ஓடியோ பதிவைக் கேட்பவருக்கு ஹக்கீமுக்கும் குமாரிக்கும் இடையிலான தொடர்பு உண்மையானது என்பது இலகுவாகப் புரியும். அந்த உரையாடலில் ஆங்காங்கே ஹக்கீமுக்கும் குமாரிக்கும் இடையேயான தொடர்பை உறுதிப்படுத்தும் சம்பாஷனைகளை ஒன்றுபடுத்தி நான் இங்கு தமிழில் மொழி பெயர்த்து இணைத்திருக்கிறேன்.

அந்த உரையாடல் சற்று நீளமானது.அது அன்றைய சண்டேலீடர் பத்திரிகையில் இரண்டு வாரங்களாக வெளிவந்தது.முழு உரையாடலையும் பின்வரும் இணைப்புகளில் ஆங்கிலத்தில் வாசித்துக்கொள்ளலாம். 
(http://www.thesundayleader.lk/arch…/20040530/spotlight-1.htm)

(http://www.thesundayleader.lk/archive/20040523/spotlight.htm)

இணைக்கப்பட்ட உரையாடலில் ஹக்கீம் குமாரியின் விவகாரத்தை ரிஷாட் ஜம்மியதுல் உலமாவிற்கு சொல்லவிருப்பது,காங்கிறசின் மஷூரா சபை உறுப்பினர் கலீல் மௌலவி தெரிந்திருப்பது,குமாரி இன்னொரு நபரோடு பேசுவதால் ஹக்கீம் குமாரியின் மீது கோபப்படுவது,இருவருக்கும் இடையிலான விவகாரம் குமாரியின் குழந்தைகளுக்கு அந்நேரம் தெரியாமல் இருந்தது,குழந்தைகளின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு குமாரி ஹக்கீமுக்கு எதிராக வழக்குத் தொடர விரும்பாதது,ஹக்கீமின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூற வந்த குமாரியை ரிஷாடின் குழுவினர் குழப்பி தங்கள் லாபங்களுக்காகப் பயன்படுத்த நினைத்தது,ஹக்கீமை அழிப்பதற்காக தனது விவகாரத்தைப் பயன்படுத்தாமல் வேறு வழிகளைத் தேடுமாறு குமாரி கூறுவது அனைத்தும் குமாரிக்கும் ஹக்கீமுக்கும் இடையிலான உறவை உறுதிப்படுத்துகின்றன. 

சம்பாஷணை அனைத்தும் பதிவு செய்யப்பட்டதன் பின் குமாரி இனி ஹோட்டலில் இருப்பது பாதுகாப்பு அல்ல என்று லகி பிளாசாவிலுள்ள வீட்டிற்கு ஹக்கீம் குமாரியை அழைத்துச் சென்றார். அங்கு இனி எல்லாவற்றையும் மறந்து விட்டு புதிதாக ஆரம்பிப்போம் என்றார்.ஆனால் லக்கி பிளாசா வீட்டை விட்டு ஹக்கீம் வெளியே செல்லும் போது குமாரியை வீட்டிற்குள் வைத்துப் பூட்டி திறப்பை எடுத்துக்கொண்டே சென்றார்.பின்னர் அந்த வீட்டில் இருந்து குமாரி ரேனுகா ஹோட்டலுக்கு மாறினார்.
அன்றைய காலப்பகுதியில் சண்டே லீடர் பத்திரிகைக்கும் ஜனாதிபதி சந்திரிக்காவிற்கும் இடையில் ஒரு பெரிய பனிப்போர் நடந்துகொண்டிருந்தது. இந்த நிகழ்வு சந்திரிக்காவை அவமானப்படுத்துவதற்கு லீடர் பத்திரிகைக்கு நல்ல தீனியாக இருக்கும் என்பதால் அதன் பத்திரிகை ஆசிரியராக இருந்த லசந்த விக்ரமதுங்கவை ஹக்கீம் அணுகினார் பதிவுசெய்யப்பட்ட ஒலி,ஒளி நாடாக்களை ஒப்படைத்தார்.

நல்லதொரு தீனி கிடைத்த மகிழ்ச்சியில் லசந்த ‘நான் சந்திரிக்காவிற்கு ஒரு நல்ல பாடம் புகட்டுகிறேன்’ என்று கூறிவிட்டு தலைவர்,தளபதி,லசந்த மற்றும் எம்.டி,வீ நிறுவனத்தில் படப்பிடிப்பாளர்கள் குமாரியிடம் ஒரு பேட்டி எடுப்பதற்கு ஆயத்தமாயினர்.அந்தப் பேட்டியில் என்ன சொல்லவேண்டும் என்று ஒவ்வொன்றும் குமாரிக்கு லசந்த மற்றும் ஹக்கீமால் சொல்லிக்கொடுக்கப்பட்டது. ஜனாதிபதியாலும்,ரிஷாடினாலும் இட்டுக்கட்டப்பட்ட கதைதான் இந்த விவகாரம் என்ற தோரணையில் அந்தப் பேட்டி அமைந்திருந்தது.அந்தப் பேட்டிக்கு முன்னரும் குமாரியை மணப்பவதாக ஹக்கீம் குமாரிக்கு வாக்களித்தார்.

ரிஷாட்,நஜீப், குமாரி ஆகியோரின் ஒலி,ஒளிப் பதிவுகளைப் பெற்றுக் கொண்ட லசந்த விக்ரமதுங்க குமாரி வாக்களிப்புக்கு ஹக்கீமிடம் கடிதம் கொடுக்கும் விவகாரம் வரைக்கும் நடந்த சம்பவங்களையும்,குமாரியை சந்திரிக்கா சந்தித்து அவற்றையெல்லாம் செய்யச் சொன்னார் என்பதையும் அதற்கு ரிஷாடின் குழுவினர்கள் உடந்தையாக இருந்தனர் என்பதையும் பெரிதாகக காட்டி,ஹக்கீமுக்கும் குமாரிக்கும் இடையே இருந்த உண்மையான உறவைத்தான் சந்திரிக்காவும்,ரிஷாடும் பாவித்தார்கள் என்பதை மறைத்து ஒரு கட்டுரையை 2004 மே மாதம் 16ம் திகதி சண்டே லீடர் பத்திரிகையில் வெளியானது.

அந்தக் கட்டுரையை ‘சுரனிமாலா’ என்ற ஒருவர் எழுதியிருந்தார்.அந்தக் கட்டுரையில் குமாரியை சுரனிமாலா ‘Mrs.X என்று குறிப்பிட்டிருந்தார்.கட்டுரை வெளிவந்ததும் அரசாங்கம் திடுக்கிட்டது.அந்தக் கட்டுரையை இங்கே காணலாம்.

(http://www.thesundayleader.lk/archive/20040516/politics.htm)

அந்தக் கட்டுரையை எழுதிய சுரனிமாலா யார்?
தொடரும்….

RAAZI MUHAMMEDH JAABIR

(இக்கட்டுரையின் முந்திய ஏழு  பாகங்களையும் எமது lankafrontnews இணையத்தளத்தில் கட்டுரைப்பிரிவில் வாசகர்கள் வாசிக்கலாம் )