பஷீர் மற்றும் ஹசனலி ஆகியோர் ஹக்கீமுக்கு எதிரான இருமுனை நகர்வுகளை ஆரம்பித்திருக்கின்றனர்

இருமுனை நகர்வுகள்

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் ஒரு சாதாரண அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன ஓரிரு நாட்களுக்குள் முடிவெடுத்து, மஹிந்தவுக்கு எதிராக களமிறங்கினார். மக்கள் நலன்சாரா அரசாங்கத்திடமிருந்து மக்களை மீட்டெடுப்பதே அவரது இலக்காக இருந்தது. அதட்டிப் பேசும், ஆஜானுபாகுவான மஹிந்த ராஜபக்ஷவுக்கு முன்னால்,பார்ப்பதற்கு ஒல்லியான, சாதுவான மைத்திரி களமிறங்கியது சிலருக்கு ஆச்சரியமானதாகவும் வேறு சிலருக்கு நகைப்புக்கிடமானதாகவும் இருந்தது. ஆனால், காலம் வேறு விதி செய்தது.

இதற்கு கிட்டத்தட்ட சமமான ஒரு வேட்கையுடனேயே முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசனலி இப்போது களத்தில் இறங்கியிருக்கின்றார் என்று அவருக்கு சர்பானவர்கள் சொல்கின்றனர். மு.கா. கட்சியின் அடிப்படைக் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு புறம்பாக கட்சி பயணிப்பதாக கூறியும் அதற்கு காரணமானவர்களிடம் இருந்து கட்சியை மீட்டெடுக்கப் போவதாக கூறியுமே ஹசனலி புதிய மூலோபாய திட்டத்துடன் களமாட தயாராகி நிற்கின்றார். நிந்தவூரில் அவர் நடாத்திய கூட்டங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

ஆணாளப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மைத்திரிபால சிறிசேன களமிறங்கிய போது அவரைப் பார்த்து மக்கள் மனங்களில் ஏற்பட்ட இரட்டை கருத்துநிலையை போலவே ஹசனலி விடயத்திலும் ஏற்பட்டுள்ளது. இவர் துணிச்சல்காரர் என சிலரும் மு.கா. தலைவரின் பலம் தெரியாமல் பலப்பரீட்சை நடாத்துகின்றார் என்று வேறு சிலரும் அபிப்பிராயம் கொள்கின்றனர். ஆனால்,மஹிந்த மனதில் ஏற்பட்டதற்கு அண்ணளவாக சமனான ஒரு உணர்வு மு.கா. தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் மனதில் ஏற்படாமல் விட்டிருக்காது.

எது எவ்வாறிருந்தாலும், இது ஒற்றையடிப் பாதை. முட்களும் அச்சுறுத்தல்களும் நிறைந்ததாக இது இருக்கலாம். எனவே, இதில் பயணிப்பதற்கு முன்னர் யோசிக்கலாமே தவிர, முடிவெடுத்து விட்டு பின்வாங்க முடியாது, திரும்பிவரவும் இயலாது. எனவே, போதுமானளவுக்கு சிந்தித்து விட்டு ஒரு தீர்க்கமான முடிவுடனேயே ஹசனலி களமாட துணிந்திருப்பார் என்பதே எடுகோளாகும்.

கண்பட்ட பிறகு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமைக்கு கண்பட்டு கனகாலமாயிற்று. இந்த சீசனில் முரண்பட்டவர்கள் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசனலியும்,முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூதும் என்பதையும் அந்த முரண்பாடு எங்கிருந்து தொடங்கி, எதில் வைத்து வேறு திசைக்கு திரும்பியது என்பதையும் எல்லோரும் அறிவார்கள். ஹசனலியும் பசீரும் ஹக்கீமுடன் கொண்டிருந்த நெருக்கத்தின் அளவுக்கு கட்சி என்ற அடிப்படையில் வேறு யாரும் நெருக்கமாக இருந்திருக்கமாட்டார்கள் என்று கட்சிக்குள் பேசப்படுவதுண்டு. கட்சிக்குள் இருந்து கொண்டே போரடினேன் என்று ஹசனலி இப்போது சொல்வது உண்மையாக இருந்தாலும் கடந்த பெப்ரவரி 12ஆம் திகதி வரைக்கும் கட்சியையும் தலைவரையும் கடுமையாக நம்பியிருந்தார். ஹக்கீம் நினைத்ததை எல்லாம் செய்பவராக அவர் இருந்திருக்கின்றார்.

மறுபுறுத்தில்,தலைவர் ஹக்கீம் நினைக்காததைக் கூட செய்பவராக பசீர் சேகுதாவூத் இருந்ததாக சொல்லப்படுவதுண்டு. தலைவர் ஏதாவது நெருக்கடிக்குள் மாட்டிக் கொள்கின்ற போது தானாக ஒரு தந்திரோபாய திட்டத்தை வகுத்து அதிலிருந்து தலைவரையும் கட்சியையும் பாதுகாக்கின்ற வேலையை பசீர் செய்து வந்திருக்கின்றார். அதற்கு கைமாறாக, கட்சிக்குள் பலர் பசீரை விமர்சனத்திற்குள்ளாக்கிய வேளையிலும் தலைவர் அவரோடு மிக இறுக்கமான உறவை பேணினார் என்றே கூற வேண்டும். ஆனபோதும், பசீரினதும் ஹசனலியினதும் தலைவரோடு கொண்ட நெருக்கம் மெதுமெதுவாக விரிசலடையத் தொடங்கி இன்று கிட்டத்தட்ட ஒரு பிளவின் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறான ஒரு முரண்பாட்டு நிலையை முஸ்லிம்கள் ஒருபோதும் விரும்பவில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் ஒரு குடையின் கீழ் வர வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறிருக்கையில் ஏற்கனவே பல துண்டுகளாக உடைந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் இன்னுமொரு பிளவு ஏற்பட்டு விடக் கூடாது என்பதே மக்களின் பிரார்த்தனையாக இருக்கின்றது. எது எவ்வாறிருந்தாலும்,சில சந்தர்ப்பங்களில் காலநியதிகளின் அடிப்படையில் முரண்பாடு என்பது தவிர்க்க முடியததாகி விடுவதைக் காண்கின்றோம். அந்த வகையிலேயே, பசீர் சேகுதாவூத் மற்றும் ஹசனலி ஆகியோர் தலைவர் ஹக்கீமுக்கு எதிரான இருமுனை நகர்வுகளை ஆரம்பித்திருக்கின்றனர்.

மு.கா. தலைவர் றவூப் ஹக்கீமுக்கும் – அப்போது செயலாளராக பதவி வகித்த பசீர் சேகுதாவூத்திற்கும் இடையில் கருத்து மோதல்கள் உக்கிரமடையத் தொடங்கிய வேளையில், அவர் தலைவரை பயங்காட்டும் அறிக்கைகளை வெளியிட்டார். இரகசியங்களை வெளியிடப் போவதாக சொன்னது மட்டுமன்றி சிலவற்றை பட்டும்படாமல் நவீன ஊடகங்களுக்குச் சொல்லியும் இருந்தார். இந்நிலையிலேயே பசீர் தவிசாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் மீதான விசாரணை இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
இப்போது பசீரின் பக்கத்தில் ஒரு அமைதி நிலவுகின்றது. விசாரித்துப் பார்த்ததில்,அவரது மௌனத்திற்குப் பின்னால் மர்மங்கள் இருப்பதாகவும் பாரிய பதிலடி ஒன்றுக்கு அவர் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் அவருக்கு நெருக்கமாக தரப்புக்கள் கூறுகின்றன. ஆனால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை.

இதேவேளை வடக்கு, கிழக்கில் மு.கா.வுக்குள் இருந்து ஏற்கனவே பிரிந்த சென்ற அரசியல்வாதிகள் மற்றும் ஏனைய தரப்பினரை ஒன்றாக இணைக்கும் முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றை நிறுவுவதற்கான வேலைகளிலும் பசீர் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும் பல அரசியல்வாதிகள் கொள்கையளவில் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. இவ்வாறான நேரத்திலேயே மு.கா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசனலியும் இப்போது களத்தில் குதித்திருக்கின்றார்.
கடந்த பேராளர் மாநாட்டுக்குப் பிறகு மார்க்க யாத்திரை ஒன்றுக்கு சென்று திரும்பியிருந்த ஹசனலிமறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃபின் அடக்கஸ்தலத்திற்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்ட பிற்பாடு அவர் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் மக்களுக்கும் அழைப்பு விடுக்கும் ஒரு ஒலிப்பதிவை அனுப்பியிருந்தார்.

ஹசனலியின் குரல்

‘1985ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்சியை அரசியல் இயக்கமாக கொண்டு செல்லவேண்டிய நிலை உருவானபோது தலைவர் அஷ்ரஃப் ஒரு உருக்கமான ஒரு வேண்டுகோளை விடுத்தார். ஆறில் ஐந்து பெரும்பான்மையை கொண்ட ஒரு பலமான அரசாங்கத்தையும் 16 ஆயுதக்குழுக்களையும் எதிர்த்து இக்கட்சியின் செயற்பாடுகளை நாம் முன்னெடுக்கும் போது பல்வேறு தியாகங்களை நாம் செய்ய வேண்டி ஏற்படலாம் அவற்றில் மிக உயர்ந்த தியாகமாக நமது உயிர்களும் பறிக்கப்படலாம். அந்த தியாகத்தை செய்ய நீங்கள் தயார் என்றால் மாத்திரமே இந்த போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்று கூறினார். அதனை உறுதிப்படுத்தும் நோக்கோடு ஒரு மரண சாசனத்தில் கையொப்பமிடுமாறு வேண்டினார். அதில் அவரே முதலில் கையொப்பிட்டார். நான் உட்படமேலும் சிலரும் கையொப்பமிட்டோம்’ என்று ஹசனலி அதில் கூறியுள்ளார்.

‘அப்போது எங்கே போவதற்காக இந்த கட்சியை ஆரம்பித்தோமோ அதற்கு தொடர்பில்லாமல் கட்சி இப்போது பயணித்துக் கொண்டிருக்கின்றது. வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கு நிலத்தொடர்பற்ற அரசியல் அதிகாரத்தை மறைந்த தலைவர் வலியுறுத்தினார். அந்த கொள்கையினால் ஈர்க்கப்பட்டு நானும் நீங்களும் அவர் பின்னால் பயணித்தோம். ஆனால் அவர் மரணித்த பிறகு அந்த இலக்கை நோக்கி இந்த 17 வருடங்களும் ஒரு அங்குலமாவது முன்னேறவில்லை என்பதே மிகவும் மனவருத்தமானது. குறிப்பாக கடைசியாக நடைபெற்ற பேராளர் மாநாட்டு தீர்மானத்தில் கூட முக்கியமான கரையோர மாவட்ட கோரிக்கை கைவிடப்பட்டிருக்கின்றது. எனவே, எஞ்சிய வாழ்நாட்களை ஒரு புதிய வடிவில் போராடுவதற்கான ஒரு தீர்மானத்தை நான் எடுத்திருக்கின்றேன். இதற்கு உங்களது ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன’; என்று ஹசனலி அந்த ஒலிப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனது சொந்த ஊரான நிந்தவூருக்குச் சென்று மக்களைச் சந்தித்துள்ளார். நிந்தவூர் ஜூம்ஆ பள்ளிவாசலில் கடந்த புதன்கிழமை இரவு மக்களைச் சந்தித்த ஹசனலி கட்சிக்கும் மக்களும் இந்த சமூகத்திற்கும் நடந்திருக்கின்ற அநியாயங்களை முன்னிலைப்படுத்தி இருக்கின்றார். கட்சியை அஷ்ரஃ;பின் கொள்கைகளுடனான மக்கள் சார்ந்த அரசியல் இயக்கமாக மறுசீரமைக்கும் தனது உத்தேசத்தை அவர் வெளியிட்ட போது, அதற்கு மக்கள் தமது ஒப்புதலை வழங்கியதாக கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே தனது நிலைப்பாடு தொடர்பாக அறிவிக்கும் ‘மரத்தின் வேர்களுக்கு விளம்பல்’ எனும் முதலாவது பொதுக் கூட்டத்தையும் கடந்த வெள்ளிக்கிழமை நடாத்தியிருக்கின்றார்.

சாது மிரள்தல்

ஹசனலி சாதுவான ஒருவராக கட்சிக்குள்ளும் வெளியிலும் பார்க்கப்பட்டவர். தலைவரை அளவுக்கு அதிகமாக நம்பியவர். தேசியப்பட்டியல் குளறுபடி, செயலாளர் நாயகத்தின் பதவி குறைப்பு என பல கைங்கரியங்கள் இடம்பெற்ற பிறகும் இம்முறை நடைபெற்ற கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் றவூப் ஹக்கீமை மீண்டும் தலைவராக பிரேரித்தவரே ஹசனலிதான்;.பேராளர் மாநாடு நடைபெறும் தினம் வரைக்கும், கட்சியை சட்டச் சிக்கலுக்குள் மாட்டிவிடுவதற்கு இரண்டுமூன்று வாய்ப்புக்கள் கிடைத்தும் அதை அவர் பயன்படுத்தவில்லை. அது அவரது பலவீனம் என்று சொல்லி விமர்சிப்பவர்களும் இருக்கின்றார்கள்.

எனவே இப்பேர்ப்பட்ட ஹசனலி தனக்கெதிரான அரசியலில் களமிறங்குவார் என்று மு.கா. தலைவர் நினைத்திருக்கவே மாட்டார். அவர் மட்டுமல்ல மு.கா. முக்கியஸ்தர்களும் அவதானிகளும் கூட அவ்வாறே கருதினர். ஹக்கீம் மீண்டும் வந்து ஏதாவது எம்.பி.கதை சொல்லி கெஞ்சினால்… பதவிக்கு ஆசைப்பட்டோ அல்லது மனமிரங்கியோ ஹசனலி ஹக்கீமேடு சேர்ந்து விடுவாரோ என்று பலரும் எண்ணினர்.அதற்கு அவரது சுபாவம் ஒரு காரணம். மற்றது, சில மாதங்களுக்கு முன்னர் எம்.பி. பதவி தேவையில்லை என்று அறிவித்திருந்த ஹசனலி பிறகுஒரு தடவை எம்.பி.யை செயலாளர் அதிகாரம் கிடைக்கும் வரை பிணையாக பெற்றுக் கொள்ள இணக்கம் தெரிவித்திருந்தமை ஆகும்.

மு.கா. கிழக்கு மக்களின் சொத்தாகும். எனவே அதன் மையப்புள்ளியும் அதிகார மையமும் கிழக்கில் இருக்க வேண்டும் என்பதே மக்களினது கட்சியின் ஆரம்பகால போராளிகளதும் நிலைப்பாடாகும். கிழக்கிற்கு வெளியில் இருப்பவர் தலைவராக இருந்தாலும் கிழக்கிற்குரிய அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும். மாறாக, இன்று சிலர் கதை புனைவது போல கிழக்கு முஸ்லிம்கள் பிரதேசவாதம் பேசவில்லை. தமிழர்களுக்கு வடக்கு எப்படி அடிப்படை தளமோ அது போலவே முஸ்லிம்களுக்கும் கிழக்காகும். எனவே, இங்கு அரசியல் பலமும் அதிகாரமும் தலைமைத்துவமும் உறுதியாக இருப்பது அவசியம் என்ற கோணத்திலேயே கிழக்கின் முற்போக்கு அரசியல் சிந்தனையாளர்கள் உள்ளனர் என்பதை வெளியில் இருப்போர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

சூடான ஆடுகளம்

ஒரு முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்கி அதன்மூலம் மு.கா.வின் தலைமையை எதிர்த்தாட பசீர் சேகுதாவூத் தயாராகிக் கொண்டிருக்கின்ற நிலையில் இப்போது ஹசனலியும் இப்போது களத்தில் குதித்திருக்கின்றார். அதாவது மு.கா. தலைமையும் அவரோடு உடன்படுபவர்களும் இன்று இருமுனை நகர்வுகளை எதிர்கொண்டுள்ளனர். முஸ்லிம் கூட்டமைப்புடன் ஹசனலி இப்போது சேர மாட்டார் என்றும், இரு தரப்பும் இரு வௌ;வேறு உத்திகளுடன் செயற்படும் என்றும் தெரியவருகின்றது. குறிப்பாக, ஹசனலி தலைவர் ஹக்கீமின் தனிப்பட்ட விடயங்களை அல்லாமல் கட்சி அரசியல் சார்;ந்த விமர்சன அரசியலையே செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தம்முடைய சொத்தான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின், செயலாளரும் தவிசாளரும் தூக்கி வீசப்பட்டுள்ள நிலையில் அதிகாரம் குறைந்த செயலாளரை நியமித்து, அதிகாரம் எல்லாம் எங்கோ ஒரு புள்ளியில் குவிக்கப்பட்டிருப்பதை கிழக்கில் உள்ள புத்தியுள்ள மு.கா. ஆதரவாளர்கள் ஆழமாக சிந்திக்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸி;ல் கிழக்கு மாகாணத்தவர்களுக்கு இருந்த அதிகாரமும், செல்வாக்கும் பல நியாயங்களின் பேரில் குறைவடைந்து போவதைப் போல அவர்கள் உணர்கின்றார்கள் என்பதை நன்றாக புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. சுருங்கக் கூறின், மு.கா. தலைவருக்கு எதிரான விமர்சனங்களும் மு.கா. கட்சி செய்யத் தவறிய கடமைகள் பற்றிய குறைகளும் மக்கள் மனதில் நிறைந்திருக்கின்ற ஒரு சூழலிலேயே ஹசனலியும் பசீரும் களமிறங்கியிருக்கின்றார்கள்.

தனிவழியில் களமிறங்கியுள்ள ஹசனலியோடு அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல முக்கியஸ்தர்கள் கைகோர்த்திருப்பதாக சொல்லப்படுகின்றது. குறிப்பாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உள்ளடங்கலாக பல பிரதேசங்களின் கட்சித் தூண்கள் ஹசனலி பக்கம் சாய்ந்திருப்பதாக அறியமுடிகின்றது. அது மட்டுமன்றி,இந்த முன்னெடுப்புக்கு மக்கள் ஆதரவு பெருகத் தொடங்கினால் மேலும் பலரும் இந்தப் பக்கம் வருவார்கள் என்று ஊகங்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

புரிய வேண்டியது

மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் இவ்விடத்தில் மிகவும் உன்னிப்பாக சிந்திக்க வேண்டும். உசுப்பேற்றி விடுகின்றவர்களின் கதைகளைக் கேட்காமல் அடிமட்ட களநிலைமைகளை அவரே நேரடியாக உணர்ந்து செயற்பட வேண்டும். தம்முடன் இருப்பவர்களில் பலர் நிரந்தரமானவர்கள் இல்லை என்பதையும், ஆதரவு கூடுகின்ற பக்கம் தன்னை கைவிட்டுவிட்டு சென்று விடுவார்கள் என்பதையும் அவர் நினைவிற் கொள்ள வேண்டியிருக்கின்றது.

மிக முக்கியமாக, யார் தமக்கெதிராக களமிறங்கினாலும் மக்கள் மனங்களில் முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் இருக்கின்றது. அதனது சில செயற்பாடுகளும் அதன் தலைமைத்துவத்தின் ஒருசில போக்குகளே விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன என்பதை அறிந்து, தமது செயற்பாடுகளை மறுவாசிப்பு செய்ய வேண்டும். அதைவிடுத்து விமர்சகர்களை வசைபாடுவதாலும் எதிர்தரப்பை குறைத்து மதிப்பிடுவதாலும் ஆகப் போவது ஒன்றுமில்லை.

அதேவேளை,மு.கா.வின் தலைவர் ஹக்கீம் இதைவிடப் பெரிய பிரளயங்களை எல்லாம் இதற்கு முன்னரும் சந்தித்திருக்கின்றார். அப்போதெல்லாம் அவரை தோற்கடிக்கவோ மாற்றவோ முடியவில்லை என்பதை ஹசனலியும் பசீரும் விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. மறுபுறத்தில், அவ்வாறு தோற்கடிக்காவிட்டாலும்,மு.கா.வின் வாக்குவங்கிகளில் இருந்து கணிசமான வாக்குகளை பிரித்தெடுத்து தனியே அரசியல் செய்வது பெரிய காரியமல்ல என்பதை றிசாட் பதியுதீனையும், அதாவுல்லாவையும் பார்த்து மு.கா. தலைவர் விளங்கிக் கொண்டு முன்னெச்சரிக்கையும் செயற்பட வேண்டும்.

இன்று மு.கா. தலைவரை எதிர்க்கும் விதத்திலமைந்த அரசியலுக்கு சாதகமான சூழல் இருக்கின்றது என்பது உண்மை என்றால், ஹசனலிக்கும் பசீருக்கும் நல்லதொரு களமாக இது அமையும். சரியான தெளிவுடன் முன்னெடுக்கப்பட்டால் மக்கள் ஆதரவும் அதிகரிக்கலாம். ஒருவேளை இன்னும் மூன்றுமாதங்களுக்குள் நடைபெறவுள்ள தேர்தல் ஒரு பலப்பரீட்சைக்கான பரிசோதனைக் களமாக அமையலாம். ஆனால் இவ்விடத்தில் ஒரு விடயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் போராட்டம் என்பது ஒரு தனிநபரை வசைபாடுவதாக, அவரது செயற்பாடுகளை காலம் முழுக்க விமர்சித்துக் கொண்டிருப்பதாக இருக்க முடியாது. பசீரும் ஹசனலியும் முஸ்லிம் கூட்டமைப்பும் – மு.கா.வையும் அதன் தலைவரையும் வெறுமனே குற்றம்சாட்டிக் கொண்டிருந்தால் கூட்டத்தில் கைதட்டல் பெறலாமே தவிர சமூகத்தின் அபிலாஷைகளை பெற முடியாது.எனவே,வடக்கில் கிழக்கில் உள்ள முஸ்லிம்களுக்கு எது தேவையோ அதனைப் பெறுவதற்கான அரசியல் முன்னெடுப்பாக இந்த இருமுனை நகர்வுகளும் அமைய வேண்டும். அவ்வாறு செய்யும் போது, அது சரியென மக்கள் ஏற்றுக் கொண்டால் அதன்பக்கம் மு.கா. தலைவரும் அவரோடு இருப்பவர்களும் வந்தாக வேண்டும். இல்லாவிட்டால் காலஓட்டத்தில் அரசியல் நீரோட்டத்தில் அவர்கள் அடித்துச் செல்லப்பட்டு விடுவாhர்கள். இது மறுதலையாக இடம்பெற்றால் மு.கா. வின் இன்றைய தலைமை மேலும் பலம் பெறுவதே யதார்த்தமாக இருக்கும்.

எனவே, இவ்விடத்தில் முஸ்லிம் மக்கள் அரசியல்வாதிகள் எல்லோருடைய செயற்பாடுகளையும் சீர்தூக்கிப்பார்த்து நியாயத்தின் பக்க நிற்க வேண்டும்.
மக்களுக்கு நல்லது நடந்தால் போதுமானது.

• ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 07.03.2017)