பேராளர் மாநாட்டில் காரியம் சாதிக்க முடிந்ததைப்போல், எதிர்வரும் தேர்தல்களில் இலகுவில் வெற்றி பெற முடியாது :அஸ்ஸுஹூர்

2012 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் மு.கா மகிந்த அணியுடன் களமிறங்க வேண்டும் என்று ஹகீம் அவர்கள் விரும்பியிருந்தார். கரையோர மாவட்ட கோரிக்கை உட்பட நான்கு பக்க கோரிக்கைகளை ஹகீம் அவர்களிடம் கையளித்த ஹஸனலி அவர்கள், மகிந்த அரசிடம் இவற்றை நிறைவேற்றித் தருமாறு கேட்கச் சொன்னார். 
ஹகீம் அவர்கள் அதை மகிந்த தரப்பிடம் கொடுத்த போது, அவர்கள் அதை கணக்கும் எடுக்கவில்லை. ஹஸனலி அவர்கள் இது பற்றி கேட்ட போது, அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்  என்று ஒரு பக்க கோரிக்கையை கொடுத்துள்ளார். அதில் கரையோர மாவட்டமோ வேறு எந்த முக்கியமான விடயங்களோ இருக்கவில்லை.
அதை ஏற்க மறுப்புத் தெரிவித்து, மு.கா தனியாக களமிறங்க வேண்டும் என்று ஹஸனலி அவர்கள் முரண்டு பிடித்து, மூன்று நாட்கள் தொடர்பு கொள்ள முடியாதவாறு விலகியிருந்தார். பின்னர் மு.கா தனித்துக் களமிறங்கியது. இதனால்தான் இன்று ஒரு முஸ்லிம் முதலமைச்சரை பெற முடிந்தது.
இந்த நேரத்தில் தேர்தல் அலுவலகத்தில் கையொப்பம் இட செயலாளரால் மட்டுமே முடியும் என்பதால், அந்த பதவியின் பரிமாணம் புரிந்த ஹகீம் அவர்கள், அந்த பதவி தனது கட்டுப்பாட்டில் இருப்பது, தான் விரும்பியவாறு தேர்தல் காலங்களில் பேரம் பேசி முடிவுகளை எடுப்பதற்கு வசதியாக இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டார்.
தனது ஒருதலைப்பட்சமான முடிவுகளுக்கு ஹஸனலி அவர்கள் ஒத்துழைப்புத்தர மறுக்கவும் கூடும் என்பதை கண்கூடாக கண்ட பின், அந்தப் பதவியின் அதிகாரங்களை தன்வசப்படுத்த 2012 இலிருந்தே காய் நகர்த்த ஆரம்பித்திருந்தார். இதற்கு மகிந்த அரசிடம் ஹகீம் அவர்கள் உதவி கோரியதாகவும் ஒரு செய்தி உண்டு.
தற்போது உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், செயலாளரின் ஒப்பமிடும் அதிகாரம் தனது கட்டுப்பாட்டில் இருக்குமாறு யாப்பை மாற்றி சாதித்துக் கொண்டு விட்டார். இந்த தேர்தல்கள் முடிவடைந்தவுடன் மீண்டும் ஹஸனலி அவர்களுக்கே செயலாளர் பதவியை வழங்கவும் கூடும். அதனால்தான் செயலாளர் பதவி தற்காலிகமாக மாற்றப்பட்டதாக கூறியிருக்கிறார்.
எதிர்வரப்போகும் தேர்தலில் ஹகீம் அவர்களின் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம், பேரம் பேசுதல்கள் மூலம் பெரும் அடைவுகளை அவருக்குப் பெற்றுக் கொடுக்கும் என்பது ஊகிக்கக் கூடியதே.
ஆனால் ஹகீம் அவர்களின் கிழக்குப் புறக்கணிப்பு, கிழக்கின் எழுச்சியால், மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டப்பட்டிருக்கும் நிலையில், தனது அடிவருடிகளைக் கொண்டு பேராளர் மாநாட்டில் காரியம் சாதிக்க முடிந்ததைப்போல், எதிர்வரும் தேர்தல்களை அவ்வளவு இலகுவில் வெற்றி கொள்ள முடியாது என்பது உண்மையே.
சேகு இஸ்ஸடீன் அஸ்ஸுஹூர்
செயலாளர்
கிழக்கின் எழுச்சி