பட்டதாரிகளை பயிலுனர்களாக எதிலாவது இணைத்து வேலை வாய்ப்பு வழங்குமாறு பிரதமரிடம் கோரினேன்: அமீர் அலி

அஸாஹிம் 

வேலையற்ற பட்டதாரிகள் மிக நீண்ட நாட்களாக போராட்டத்தில் குதித்துள்ளதால் அவர்களுடைய உடல் நிலைமை மோசமடைந்து வருவதற்கு முன்னர் வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் ஒரு நிகழ்ச்சி நிரலை செய்ய வேண்டும். இல்லையயென்றால் அவர்களை பட்டதாரி பயிலுனர்களாக எதிலாவது இணைத்து அந்த பணியை செய்யுமாறு பிரதமர் மற்றும் நிதி அமைச்சரிடம் இறுக்க முன்வைத்தேன் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!

எங்களிடத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் போட்டியாளர்களாகவும், வேட்பாளர்களாகவும், போராளிகளாகவும் இருப்பதைக் கண்டு நான் மிகவும் சந்தோசம் அடைகின்றேன்.

ஏன் என்று சொன்னால் கல்குடாவின் அரசியல் களம் மாத்திரம் அல்ல கிழக்கு மாகாணத்தின் அரசியல் களத்தை மிகவிரைவிலே புறட்டிப் போடுகின்ற ஒரு சதுரங்க விளையாட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று அவர்களுக்கு தெரியாது.

அண்மையில் ஒரு பதிவேட்டில் பார்த்தேன் இப்பிரதேசத்தில் படித்தவர்களை விட சாட்டோ மன்சூருக்கு விருப்பம் தெரிவிக்கும் அளவிற்கு இந்தப் பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிடைய அரசியல் கள நிலவரம் சென்றிருக்கின்றது என்று சொன்னால். இதைவிடவும் அவர்கள் கோமணம் கட்ட வேண்டுமா என்று இந்த இடத்தில் கேட்பது சாலப் பொறுத்தம் என்று நினைக்கின்றேன்.

அரசியலிலே எதற்காக வர வேண்டும் என்கின்ற கொள்கை இல்லாமல் கடந்த காலத்தில் இந்தப் பிரதேசத்தில் இருந்த கல்வியாளர்கள் தப்புக்களை செய்து கொண்டார்கள் என்று எனக்கு தெரியும்.

கல்குடாப் பிரதேசம் மற்றும் மாவட்டம் முழுவதும் அபிவிருத்திகள் எப்படிப் போனாலும் பரவாயில்லை அமீர் அலி தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற நிலவரத்திலே இருந்து தோற்றுப் போனவர்கள் தான் இன்னுமொரு தேர்தல் களத்திலே குதிக்கப் பார்க்கின்றார்கள். அவர்களுக்கு ரவூக் ஹக்கீம் சீட்டு வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

அப்பொதுதான் அவர்களுடைய நிறைய விடயங்களை தேர்தல் காலங்களில் சந்திக்க முடியும். இப்பிரதேசத்தை கல்வி ரீதியாக எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும், வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற விடயத்தில் ஒத்துழைப்பு செய்கின்றவர்களாக நீங்கள் மாறுவீர்களானால் இரு கரம் கூப்பி வரவேற்கின்றோம்.

இதே முதலமைச்சரை கொண்டு வரவேண்டும் என்று ஓடித் திரிந்தவர்கள், பூஜா தூக்கி திரிந்தவர்கள், பந்தம் பிடித்து திரிந்தவர்கள், பகல் வெற்றி கொழுத்தியவர்கள் எல்லோரும் ஏன் இப்பாடசாலையை உயர்த்தும் பணியை செய்யவில்லை என்பது வேதனையாக உள்ளது.

வாக்களிப்பதற்கு வெளி ஊரும், அபிவிருத்திக்கு உள்ளுரும் என்ற தொனிப்பொருளிலே இந்த அரசியலை அவர்கள் எதிர்காலத்தில் செய்யக் கூடாது. அவர்கள் வாக்குகளை பெற்றுக் கொடுத்துள்ளனர் அந்த அதிகாரம் கட்சிக்கு கிடைத்துள்ளது. அக்கட்சி இப்பிரதேசத்தில் பணியை சிறப்பாக செய்திருக்க வேண்டும். விசேடமாக கிழக்கு மாகாணத்திலுள்ள நிலவரத்தை கூறுகின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே பட்டதாரிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இவ்விடயமாக பிரதமரின் கவனத்துக்கு எழுத்து மூலமாக வழங்கியதுடன், பட்டதாரிகளின் பிரச்சனையை அவசரமாக முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்றும் பிரதமருடனும், நிதி அமைச்சருடனும் கலந்துரையாடினேன்.

வேலையற்ற பட்டதாரிகள் மிக நீண்ட நாட்களாக போராட்டத்தில் குதித்துள்ளதால் அவர்களுடைய உடல் நிலைமை மோசமடைந்து வருவதற்கு முன்னர் வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் ஒரு நிகழ்ச்சி நிரலை செய்ய வேண்டும். இல்லையயென்றால் அவர்களை பட்டதாரி பயிலுனர்களாக எதிலாவது இணைத்து அந்த பணியை செய்யுமாறு கோரிக்கையை இறுக்கமாக முன்வைத்தேன்.

இதற்காக முடிவை மிக விரைவாக எடுப்பார் என்று நினைக்கின்றேன். நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூற கடமைப்பட்டவனாக இருக்கின்றேன் என்றார்.