-சுஐப் எம் காசிம்
வில்பத்தை முஸ்லிம்கள் நாசமாக்குகிறார்கள் என்ற கசசலுக்கு மத்தியிலேயே இதன் உண்மை நிலையையும் நமது மக்களின் வாழக்கை கஷ்டங்களையும் வெளிக் கொணரும் மனித நேயம் கொண்ட சிங்கள புத்தி ஜீவிகளினதும் மத குருமார்களினதும் பணி பாராட்டத்தக்க தென கைத தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
” மரங்களில் கருணை காட்டுவோம் எனும் தொனிப் பொருளில் இன்று( 27) காலை மறிச்சிக்கட்டியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பயன் தரும் மரங்கள் நடம் திட்டத்தின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்
இந் நிகழ்வில் அமைச்சர் மேலும் கூறியதாவது:-
மக்களுக்கு வருமானம் பெறும் வழிவகைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலும், இயற்கை வளங்களை பாதுகாக்கும் எண்ணத்திலுமே பயன் பெறும் மரங்களை நடும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது முசலி பிரதேசத்தில் உள்ள பாலைக் குழி, மறிச்சிக்கட்டி , கரடிக் குழி போன்ற இடங்களிலும் மக்கள் விரட்டப் பட்டிருந்தனர்.
அவர்கள் யுத்த முடிவின் பின்னர் தமது இருப்பிடங்களுக்கு திரும்பிய போது அவர்கள் வாழ்ந்த இடங்கள் காடாக காட்சியளித்தன.
இவர்கள் அங்கு வாழ முடியாத நிலையில் பின்னர் 2012 ஆம் ஆண்டு தமது பிரதேசங்களை துப்புரவு செய்வதற்காக சென்றனர். இங்கு வாழலாம் என்ற நம்பிக்கையிலேயே வந்தனர்.
எனினும் தங்களது சொந்த நிலங்களை அவர்கள் துப்புரவாக்கிய போது அந்த காணிகள் வன பரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமாக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு கிடைத்தது.
மறிச்சிக்கட்டி, கரடிக் குழி என்ற பெயரிலும் , வேப்பன் வில, என்ற பெயரிலும் அவை வர்த்தமானியில் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தான் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் விசேட செயலணியின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டு வரப்பட்டிருந்தது.
ஜனாதிபதி தலைமையில் குழு வொன்றும் உருவாக்கப்பட்டு மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர், அரச அதிபர், இராணுவ அதிகாரிகள், வன பரிபாலன திணைக்கள செயலாளர், வன ஜீவராசி திணைக்கள செயலாளர் உள்ளடக்கப் பட்டு சுமார் 20 இற்கும் அதிகமான கூட்டங்கள் கொழும்பில் நடாத்தப்பட்டன.
இந்த பிரதேசத்தில் இந்த அதிகாரிகள் பல முறை சென்று மக்களை நேரில் சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்த பின்னர் இந்த மக்களை இப்பகுதியில் குடியேற்றுவதற்கு முடிவு செய்தனர்.
புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை மன்னாரிலிருந்து ஆரம்பிப்போம் என அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
மறிச்சிக்கட்டியில் இருந்து தான் ஆரம்பித்தனர்.
அவர்களின் யோசனைப் படி வன பரிபாலன திணைக்களத்திற்கு கொழும்பிலிருந்து ஜீபிஎஸ் வழியாக சொந்தமாக்கப்பட்ட முஸ்லிம்களின் பூர்வீக காணிகளில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அரை ஏக்கர் விடுவிக்கப்பட்டு அவர்களுக்கு வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.
காணிக் கச்சேரி வைக்கப்பட்டு, அதிகாரிகள் பிரசன்னமாகி, அவர்களுக்கு குடியிருப்பதற்கு அரை ஏக்கர் காணியும், தொழில் செய்வதற்கு ஒரு ஏக்கர் காணியும் வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டது.
மாவட்ட அபிவிருத்தி சபையில் தலைவர் என்ற வகையில் அத்தனை கூட்டங்களிலும் அத்தனை நடவடிக்கைகளிலும் பங்கு பற்றியிருக்கின்றேன்.
வன பரிபாலன திணைக்களத்திற்கு இம் மக்களின் காணிகள் சொந்தமாக்கப்பட்ட விடயம் அவர்களின் பிரதி நிதியான எனக்கோ, பிரதேச செயலாளருக்கோ, காணி சொந்தக் காரர்களுக்கோ, தெரியாதொன்றாகும்,
ஆறடி நீளத்திற்கு மேல் மரங்கள் வளர்ந்திருந்தால் 2007 ஆம் ஆண்டின் சுற்றறிகையின் படி வன பரிபாலன திணைக்களத்தின் அனுமதியின்றி காணிகளை வெட்ட முடியாது என்று அறிவுறுத்தல் இருக்கிறது.
இந்த நிலையில் அனுமதி பெற்று காடுகள் துப்பரவாக்கப்பட்டு இந்த மக்களுக்கு அரை ஏக்கர் காணி வழங்க முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறான நிலையிலேயே இம் மக்கள் வில்பத்து காடுகளை அழிகின்றனர் என்று அப்பட்டமான பொய்களை பரப்பும் படலம் ஆரம்ப மாகியது.
ஆரம்ப காலத்திலேயே தென்னிலங்கை இனவாத அமைப்புகளும், மதவாத அமைப்புகளும் இனவாத சூழலியலார்களும் இந்த பிரசாரத்தை முன்னெடுத்தனர்.
எனினும் மனித நேயம் கொண்ட சூழளியாலர்களும் வட மாகாண பௌத்த மத குருமார்களும் வட மாகாண சிங்கள அரசியல்வாதிகளும், அறிந்து உண்மையை வெளிப்படுத்தினர்.
இந்த மக்களுக்கு வாழ்வதற்கு எந்த வசதியும் இல்லாது காலத்தை கழிக்கின்றனர். இவர்களுக்கெதிராக கூக்குரல் இடுவோர் இற்றை வரைக்கும் எந்த உதவியும் செய்தாக இல்லை.
இந்த பிரதேசத்தில் முஸ்லிம்கள் மட்டுமன்றி, சிங்கள மக்களும் வாழ்கின்றனர். முள்ளிக் குளத்தை இராணுவம் ஆக்கிரமிப்பு செய்ததால் அதிலிருந்த கிறிஸ்துவ மக்கள் வெளியேறி காயாக் குழி என்ற இடத்தில் வாழ்கின்றனர் .