ஜெனீவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையியின் கூட்டத்தொடரில் புதிய தீர்மானமொன்றை இலங்கை முன்வைக்கும்போது, கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கான கால அட்டவணையை இலங்கையிடம் ஐ.நா. கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வின் நிரந்தர தூதரகத்தில் கையளிக்கப்பட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இலங்கை தொடர்பான கடிதத்தின் அடிப்படையிலேயே குறித்த கால அட்டவணை கோரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த தீர்மானத்தில் காணப்படும் 25 உறுதிமொழிகளில் சிலவற்றை செயற்படுத்த இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்றுள்ள சர்வதே மனித உரிமைகள் கண்காணிப்பகம், நிலைமாறுகால நீதிப் பொறிமுறையின் அடிப்படையிலான செயற்பாடுகளில் எதுவித முன்னேற்றமும் இல்லையென சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலத்திற்கு உரிய ஆலோசனை பெறப்படவில்லை என்றும் இதுவரை குறித்த அலுவலகம் அமைக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு, சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம், உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க பொறிமுறை, பாதிப்புகளுக்கான இழப்பீடு வழங்குதல் ஆகியவற்றில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளது.
இவை குறித்த சட்டமூலங்களை உருவாக்கி வருவதாக அரசாங்கம் கூறிவந்தாலும், இதுவரை காத்திரமான செயற்பாடுகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லையென சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.