சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை உருவாக்கத்துக்கு ஹக்கீம், ஹரீஸ் தடையா? :ஜெமீல் குற்றச்சாட்டு

 

Siddeque Kariyapper

அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளதாவது,..

1. சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை விடயத்தை தடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குறுக்கு வழியில் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. அதாவது சாய்ந்தமருது உள்ளூராட்சி விடயத்தை முன்னெடுக்க வேண்டாம் என அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் நேரடியாக சொல்லி தடுக்க முடியாது என்பதனால் தமிழ் தரப்பினரை பிழையாக வழிநடத்தி, அவர்கள் மூலம் உள்ளூராட்சி அமைச்சர் தொடக்கம் பிரதமர், ஜனாதிபதி வரை இதற்கெதிராக முறையிட்டு மகஜர்களை அனுப்பச் செய்து தமது சாணக்கியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

2. முன்னர் கல்முனைக்குடி மக்களை தூண்டி விட்டு, குழப்பிய இவர்கள், தற்போது அந்த மக்கள் சாய்ந்தமருத்துக்கு தனியான உள்ளூராட்சி சபை கொடுக்க வேண்டியதன் நியாயத்தை புரிந்து கொண்டு, அவர்களும் இதனை ஆதரிக்க முன்வந்துள்ள சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளை குழப்புவதற்கு எத்தனித்துள்ளனர்.

3. கடந்த 2015 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போது கல்முனை நகரில் இடம்பெற்ற தமது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சாய்ந்தமருது மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக பிரதமர் ரணிலைக் கொண்டு தேர்தல் முடிந்த கையோடு சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை உருவாக்கித்தரப்படும் என்று பிரதமரின் நாவினால் ஓர் உறுதிமொழியை மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் வழங்கியிருந்தார்.

4. ஆனால் ஒன்னறரை வருடம் கடந்தும் கூட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இது தொடர்பில் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை என்பதும் உள்ளூராட்சி அமைச்சருக்கு பிரதமர் எவ்வித பரிந்துரையும் செய்யவில்லை என்பதும் மு.கா.வின் நாடகத்தையும் நயவஞ்சகத்தனைத்தையும் அளவிட போதுமான சான்றாகும்.

4. மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீமும் பிரதியமைச்சர் ஹரீஸும் இனியாவது இதனைத் தடுக்கின்ற முயற்சிகளை கைவிட்டு, உங்களை முழுமையாக ஆதரித்து அதிகார பதவிகளில் இருத்தியமைக்காகவேனும் சாய்ந்தமருது மக்களுக்கு உபத்திரம் செய்யாமல், மனச்சாட்சியுடன் நடந்து கொள்ளுமாறு அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன்.” 

என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

குறிப்பு: கடந்த வெள்ளிக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தலைமையில் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கலாநிதி ஏ.எம்.ஜெமீல்,கட்சியின் சாய்ந்தமருது அமைப்பாளர் ஏ.எல்.எம்.அன்வர் ஆகியோர் அமைச்சர் பைஸர் முஸ்தபா, அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி, மேலதிக செயலாளர் எம்.எம்.நயீமுடீன் உட்படலானோரைச் சந்தித்த பின்னரே கலாநிதி ஜெமீல் இந்தக் கருத்தை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகக்து.