அந்தமான் கடலில் தத்தளித்து வரும் சுமார் 7,000 அகதிகளை தாற்காலிகமாக ஏற்க மலேசியாவும், இந்தோனேசியாவும் ஒப்புதல் அளித்துள்ளன.
இன்னும் ஓராண்டுக்குள் அவர்கள் சொந்த நாடுகளில் மறு குடியமர்த்தப்படுவதற்கான ஏற்பாடுகளை சர்வதேச நாடுகள் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அகதிகளை ஏற்க சம்மதித்துள்ளதாக மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் அனீஃபா அமன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அகதிகள் கடத்தப்படும் விவகாரம் தொடர்பாக இந்தோனேசிய, மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புத்த மதத்தினரை பெரும்பான்மையாகக் கொண்ட மியன்மாரில், மதவாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி ரோஹிஞ்சா முஸ்லிம்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடான வங்கதேசத்திலிருந்து ஏராளமானோரும் மலேசியா, தாய்லாந்து நாடுகளில் தஞ்சம் கோரி கடல் வழியாக சட்ட விரோத முறையில் பயணம் செய்து வருகின்றனர்.
அவர்களை கடத்திக்கொண்டு வரும் கும்பல்களுக்கு எதிராக அந்த நாடுகள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதையொட்டி, நடுக்கடலில் ஆயிரக்கணக்கான அகதிகளைத் தவிக்க விட்டு கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றனர்.
புற்றீசல் போல் அகதிகள் வருவதாகக் கூறி, அவர்களை ஏற்க மலேசிய, இந்தோனேசிய நாடுகள் மறுத்தன.
இந்த நிலையில், சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக, அவர்களை ஏற்க இரு நாடுகளும் சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.