கண்கட்டி வித்தை (கட்டுரையாளர் ஏ.எல்.நிப்றாஸ்)

இந்திய சினிமாவும் நடிப்புத் துறையும் அந்த நாட்டிற்கு நல்ல அரசியல்வாதிகளை கொடுத்திருக்கின்றது. அதேபோல் இலங்கை அரசியலானது நல்ல நடிகர்களை கொடுத்திருக்கின்றது. முஸ்லிம்களின் அரசியலில் இந்த பண்புகளை பரவலாக நாம் கண்டு கொண்டிருக்கின்றோம். முஸ்லிம் அரசியல்வாதிகள் தமக்கு கொடுக்கப்படுகின்ற காட்சியில், கிடைக்கின்ற கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கிவிடுகின்றார்கள். ஹீரோக்களாக இருந்த சிலர் உண்மையில் வில்லன்கள் என்பது கிளைமேக்ஸ் காட்சியில்தான் தெரிகின்றது. வில்லன்களாக சித்திரிக்கப்படுபவர்கள் உண்மையில் வில்லன்கள் தானா? என்பது காட்சிகள் எல்லாம் முடிவடைந்த பிறகே தெரியவரும்.

அந்த வகையில் கதை, திரைக்கதை, வசனம், புரொடக்சன், டைரக்சன் என எல்லாப் பணிகளையும் யாரோ ஓரிருவர் மேற்கொள்ள, வெற்றிகரமாக அமைந்த ஒரு காட்சி போலவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டாய உயர்பீடக் கூட்டத்தையும் பேராளர் மாநாட்டையும் விமர்சன ரீதியாக நோக்குவோர் கணிப்பிடுகின்றனர். உண்மையிலேயே, பௌதீக ரீதியாக பார்த்தால் மு.கா.வின் இவ்விரு நிகழ்வுகளும் வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன. தலைவர் றவூப் ஹக்கீம் நினைத்தது போல காட்சிகள் எல்லாம் கனகச்சிதமாக அமைந்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

வெற்றி முழக்கம்

கட்சியின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூதின் அதிரடி அறிக்கைகளும் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன்அலியின் பிடிவாதமும் சாணக்கிய தலைவர் என வர்ணிக்கப்படும் றவூப் ஹக்கீமை அடிபணிய வைக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஹக்கீம் பயந்து போயிருக்கின்றார் எனவே இறங்கி வந்தேயாக வேண்டும் என்று நினைத்தனர். ஆனால், அது நடக்கவில்லை. மாறாக,ஹக்கீம் என்ன நடக்க வேண்டும் என்று ஒன்றரை வருடங்களுக்கு முன் நினைத்தாரோ, 2015இல் எதற்காக கண்டி பேராளர் மாநாட்டின் போது திருத்தங்களை கொண்டு வந்தாரோ, அது சிறப்பாகவே நிறைவேறிருக்கின்றது என்றால் மிகையில்லை.
கட்டாய உயர்பீடக் கூட்டத்தையும் பேராளர் மாநாட்டையும் அதிருப்தியாளர் குழுவினர் குழப்புவார்கள் என்ற எண்ணம் பொது மக்களுக்கு மட்டுமன்றி கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இருந்தது. அத்துடன் மாநாட்டுக்கு முன்னர் பசீர் மேலும் சில ரகசியங்களை கசியவிடக் கூடும் என்றும், ஹசன்அலி சட்ட ரீதியாக தனது பிடியை இறுக்கலாம் என்றும் எதிர்பார்த்தவர்களும் இருந்தனர். ஆனால் எந்தவித அசம்பாவிதமும் இன்றி இவ்விரு நிகழ்வுகளும் நடந்தேறி இருக்கின்றன.

 

தெஹிவளையில் நடைபெறவிருந்த மாநாட்டை கொழும்புக்கு இடம்மாற்றும் நடவடிக்கை, அதில் கிழக்கு மாகாணத்தவர்களின் பிரசன்னத்தை வரையறுக்கும் உள்நோக்கம் என்பவற்றுக்கு மேலதிகமாக பசீரையும் ஹசன்அலியையும் புறமொதுக்குவதற்காக கட்சி உயர்பீடத்தினதும் பேராளர்களினதும் ஆதரவை பெற்றுக் கொள்ளும் உத்தி எல்லாம் மிக லாவகமாக வெற்றியடைந்திருக்கின்றன. ஹக்கீம் என்ன நடக்க வேண்டும் என்று நினைத்தாரோ அதுபோலவே காட்சிகள் அமையப் பெற்றிருந்தன. எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க இது நடந்தது. ஆனால் யாராலும் தடுக்கவோ எதிர்க்கவோ முடியவில்லை. அதாவது, ஒரு கண்கட்டி வித்தைபோல நடந்திருக்கின்றது.

 

ஆகவே, இந்த அடிப்படையில் நோக்குகின்றவர்கள் இந்த மாநாட்டை ஒரு வெற்றிகரமான நிகழ்வு என்று கருத நிறையவே இடமிருக்கின்றது. ஆனால் இந்த மாநாட்டின் மூலமாவது மு.கா.வுக்குள் ஏற்பட்டிருந்த பிணக்குகள் தீர்க்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த உண்மைப் போராளிகள் யாரும் இதை வெற்றிகரமான நிகழ்வு என்று சொல்லமாட்டார்கள். கட்சிக்காக பாடுபட்டவர்கள் தூக்கி வீசப்படுவதை ஜீரணிக்க முடியாத ஆரம்பகால போராளிகள் யாருமே இதை வெற்றிகரமான மாநாடு என்று ஏற்க மாட்டார்கள். முஸ்லிம் காங்கிரஸின் அதிகாரம் கிழக்கில் இருந்து சூட்சுமமாக இழக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்திருந்த யாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றே அனுமானிக்க வேண்டியுள்ளது.

 

பசீர் இடைநிறுத்தம்

 

முன்னதாக பெப்ரவரி 4ஆம் திகதி இடம்பெற்ற உயர்பீடக் கூட்டத்தின் போது தவிசாளர் பசீர் சேகுதாவூத் அப்பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். பசீர், தலைவர் ஹக்கீமுடன் மிக நெருக்கமாக இருந்தவர்;. பசீரை தன்னோடு வைத்திருந்து அவரது இராஜதந்திர ஆற்றலை பயன்படுத்துவதற்காக ஒருகாலத்தில் உயர்பீடத்தில் தலைவர் தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தினார் என்று கூறப்படுகி;ன்றது. ஒரு தடவை பசீரை செயலாளராக பிரேரிக்குமாறு ஹசன்அலியை வற்புறுத்தி, அதன்மூலம் ஒரு நாள் மட்டும் செயலாளராக ஆக்கியவர் ஹக்கீம். அதன்பிறகு நகமும் சதையும் போலிருந்தது அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு.
இருப்பினும், இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் வலுக்கத்; தொடங்கியதும், தலைவர் பற்றிய இரகசியங்கள் பல தன்னிடம் இருப்பதாகவும் அதை வெளியிடுவேன் என்றும் பசீர் பொதுத் தளத்தில் எச்சரிக்கை விடுத்தார். குழுஉக்குறிகளால் சில சம்பவங்களை பகிரங்கமாக சொல்லவும் அவர் தயங்கவில்லை. அந்தப் பின்னணியிலேயே பசீர் தவிசாளர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இது நியாயம் என சிலரும், அநியாயம் என வேறு சிலரும், பரவாயில்லை என்று இன்னும் சிலரும் கருதுகின்றனர்.

 

எவ்வாறாயினும், பசீர் மிகவும் நுட்பமாக காய்நகர்த்தக் கூடியவர் என்பதை தலைவர் அறிவார். எனவே அவரை கட்சிக்குள் வைத்திருக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே தவிர தூரமாக்கி இருக்கக் கூடாது. அருகில் இருப்பவரின் செயற்பாடுகளை அவதானிப்பதை காட்டிலும் தூர எறிந்துவிட்டு அவர் அங்கு என்ன செய்து கொண்டிருக்கின்றாரோ என உளவுபார்ப்பது சாத்தியமானதா எனத் தெரியவில்லை. எனவே, பசீர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு, அவரது குற்றச்சாட்டுக்களை ஆராய கட்சிக்குள் ஒரு குழுவை நியமிப்பதன் மூலம், சிறிது காலத்திற்காவது அவரை கட்சியின் வட்டத்திற்குள் வைத்திருக்க றவூப் ஹக்கீம் நடவடிக்கை எடுத்திருப்பாராயின் அதில் கொஞ்சம் சாணக்கிய வெற்றி இருந்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை.

 

ஹசன்அலி பதவிபறிப்பு

அது போதாதென்று, தலைவருக்கு எதிராக பகிரங்கமாக செயற்படாமல் அவரது வாக்குறுதிகளை மலைபோல் நம்பியிருந்த எம்.ரி.ஹசன்அலியும் வீழ்த்தப்பட்டிருக்கின்றார். இருவரும் சமரசத்திற்கு வந்தபோது நாம் பிரசுரித்த கட்டுரையில், ‘வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த பலர் வஞ்சிக்கப்பட்டதாக கதைகள் ஏராளம் உள்ளன’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இன்று அதுதான் நடந்திருக்கின்றது. மு.கா. தலைவர் ஹக்கீம் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பேராளர் மாநாட்டில் செயலாளரின் அதிகாரத்தை சூட்சுமமான முறையில் குறைத்திருந்ததாகவும், அது பற்றி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பிழையான ஆவணத்தை அனுப்பியிருந்ததாகவுமே மறுதரப்பால் குற்றம் சாட்டப்பட்டது. அதையே ஹசன்அலியும் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்தார். அதை சமாளிக்கவே அவரோடு தலைவர் சமரசப் பேச்சு நடத்தி உடன்பாடு கண்டார்.

 

ஆனால், அந்த மாநாட்டில் பிழையாக எடுக்கப்பட்டது எனக் கூறப்பட்ட தீர்மானத்தை ஒரு வருடம் கழித்து இம்முறை மாநாட்டின் மூலம் சட்ட ரீதியாக மாற்றியிருக்கின்றார்கள் என்ற சொல்ல வேண்டும். பதவிகளையும் பட்டங்களையும் இழந்து விடுவோம் என்று பயப்படுகின்ற உயர்பீட உறுப்பினர்களும் இதற்கு ஒப்புதல் வழங்கியிருக்கின்றார்கள். ஒருநாள் நிகழ்வுக்கு மட்டும் அழைக்கப்படுகின்ற பேராளர்கள் இந்த அரங்கக் காட்சியின் பார்வையாளர்களாக இருந்திருக்கின்றார்கள். இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
ஹசன்அலியும் தலைவர் ஹக்கீமுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள். தலைவர் விரும்பியதில் பலவற்றை செய்வதற்கு ஹசன்அலி துணை நின்றவர். இத்தனை முரண்பாட்டுக்குப் பின்னரும் தலைவர் பற்றி அவர் மோசமாக விமர்சித்தது கிடையாது. அது மட்டுமன்றி, அவருக்கு பதவி இல்லாது செய்யப்பட்ட 11ஆம் திகதி உயர்பீடக் கூட்டத்திலும் தலைவராக றவூப் ஹக்கீமின் பெயரை பிரேரித்தவர் ஹசன்அலிதான். ஆனால், தலைவர் ஹசன்அலியை செயலாளர் நாயகம் பதவியில் இருந்து தூக்கியிருக்கின்றார். அதன்படி, தானே தவறு கண்ட ஒருவரை மீண்டும் தலைவராக முன்மொழிந்ததன் விளைவை ஹசன்அலி ஒரு மணித்தியாலத்திற்குள்ளேயே உணர்ந்து கொண்டார் எனலாம்.

 

கூட்டமும் மாநாடும்

மு.கா.வின் 27ஆவது பேராளர் மாநாட்டுக்கு முன்னராக கட்டாய உயர்பீடக் கூட்டம், அக்கட்சி பதிவு செய்யப்பட்டு 29 வருடங்கள் நிறைவடைகின்ற நாளான கடந்த 11.02.2017ஆம் திகதி இடம்பெற்றது. இங்கு, ‘கட்சியின் செயலாளராக எனக்கு விருப்பமானவர் வர வேண்டும்’ என்று தெரிவித்த கட்சித் தலைவர் ஹக்கீம், அதற்கான அதிகாரத்தை தனக்கு வழங்கும்படியும் அவரை நீக்குவதற்கான அதிகாரத்தை உயர்பீடத்திற்கு வழங்குவதாகவும் சொன்னார். அந்த வகையில் மன்சூர் ஏ.காதர் செயலாளராக பிரேரிக்கப்பட்டார். அதாவது ஹக்கீமின் விருப்பத்திற்குரியவராக ஹசன்அலியும் இருக்கவில்லை, ஏனைய மூத்த உறுப்பினர்களும் இருக்கவில்லை. இவ் விடயத்தில், அதிகாரம் ஓரிடத்தில் குவிக்கப்பட்டதன் ஊடாக, மசூரா என்ற கூட்டு ஆலோசனை நியதியும் வலுவிழந்துவிட்டது.

 

புதிய செயலாளரின் செயற்பாடுகள், அதிகாரங்கள் தொடர்பில் இங்கு சில வரையறைகள் முன்வைக்கப்பட்டன. இதனை அவதானித்த ஹசன்அலி, ‘நீங்கள் என்னை அடிப்படையாக வைத்தே இந்த கட்டுப்பாடுகளை விதிக்கின்றீர்கள் என்பது புலனாகின்றது. எனக்கு இந்தப் பதவி வேண்டாம். ஆனால் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முன்பிருந்தது போல் முழு அதிகாரமுள்ள பதவியை வழங்குங்கள்’ என்ற தொனியில் தலைவரையும் உயர்பீடத்தையும் கோரி நின்றார். ஆனால் அது நடக்கவில்லை. மாறாக, தேசியப்பட்டியல் எம்.பி. பதவியுடன் தவிசாளர் பதவியையும் பொறுப்பேற்குமாறு ஹசன்அலியை வலியுறுத்தினர்.

 

தவிசாளர் பதவியில் இருந்து பசீர்சேகுதாவூத் இடைநிறுத்தப்பட்டிருக்கின்ற நிலையில், அவர் மீதான விசாரணைகள் இன்னும் ஆரம்பிக்கப்படாதிருக்கின்ற சூழலில், அதே பதவியை ஹசன்அலிக்கு வழங்குவது பசீரையும் ஹசன்அலியையும் மோதவிட்டு, தனித்தனி துருவங்களாக்கும் முயற்சியாகும். அத்துடன் அதிகாரமுள்ள செயலாளர் நாயகம் பதவியுடன் ஒப்பிடுகையில் தவிசாளர் என்பது அதிகாரம் குறைந்த பதவியும் ஆகும். தலைவராக தான் இருந்து கொண்டு, செயலாளரையும் தானே நியமித்துக் கொண்டு, தவிசாளர் பதவியை வழங்குவதன் உள்நோக்கத்தை புரிந்து கொண்ட ஹசன்அலி அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.
உடனே எழுந்து கண்கலங்கியவராக சில வார்த்தைகள் பேசிய முன்னாள் செயலாளர் நாயகம், தலைவர் ஹக்கீமின் தலையில் முத்தமிட்டுவிட்டு, விடைபெற்று, கூட்ட மண்டபத்தில் இருந்து வெளியேறிவிட்டார். சற்றும் தாமதிக்காமல் ஹசன்அலியை பின்தொடர்ந்தார் ஹக்கீம். அவரோடு மேலும் பலரும் சென்றனர். கல்கிசையில் உள்ள தனது வீட்டிற்கு ஹசன்அலி சென்று இறங்கி இரண்டு நிமிடங்களுக்குள் ஹக்கீம் குழுவினர் அங்கு வந்து சேர்ந்திருந்தனர்.

 

பகிரங்மாக (உயர்பீடத்தில்) தாக்கிவிட்டு இரகசியமாக மருந்து தடவுவதற்கு தலைவர் வந்திருந்தார். இரண்டு காரணங்களுக்காக அவர் இவ்வாறு இறங்கி வந்திருக்க வேண்டும். ஓன்று, ‘நான் ஹசன்அலியிடம் தவிசாளர் பதவியை பொறுப்பேற்குமாறு வீடு தேடிச் சென்று கேட்டுக் கொண்டேன்தானே’ என்று சொல்வதற்கு. மற்றது, மறுநாள் 12ஆம் திகதி பேராளர் மாநாட்டை தலைமை தாங்கி நடாத்த ஒரு தவிசளார் தேவையாக இருந்தார். ஆனால் அளவுக்கதிமாக பட்டறிந்துவிட்ட ஹசன்அலி தவிசாளர் பதவியை பொறுப்பேற்கவோ மாநாட்டில் கலந்து கொள்ளவோ கடைசிவரை மறுத்துவிட்டார். விளைவு,செயலாளர் நாயகமும் இன்றி, தவிசாளரும் இன்றி பேராளர் மாநாடு நடந்து முடிந்தது.

 

குர்ஆனும் ஹதீஸூம்

இது அநியாயம் என்று கூறுவோர் அதிகம் பேர் இருக்கின்றார்கள். அதேவேளை, ஹக்கீமின் தவறுகளை பொறுத்துக் கொண்டிருந்ததற்கு பசீருக்கும் ஹசன்அலிக்கும் இறைவன் கொடுத்த தண்டனை இது என்று சொல்வோரும் உள்ளனர். எது எப்படியிருந்த போதும், பசீரை பதவியில் இருந்து இடைநிறுத்தியதைப் போல ஹசன்அலியின் பதவிபறிப்பை நியாயப்படுத்த முடியாது. ஏனெனில் அவர் பலதடவை வாக்குறுதி அளிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டிருக்கின்றார். ‘உங்களுக்கு தலைவர் இப்பதவியை தரமாட்டார்’ என்று தொடர்ச்சியாக அவருக்கு நெருக்கமானவர்கள் எச்சரிக்கை செய்து வந்தனர். ஆனால்,எம்.பி. தருவதாகவும் யாப்பை திருத்தி பேராளர் மாநாட்டில் அதிகாரமுள்ள செயலாளர் தருவதாகவும்; சொல்லி மாதக்கணக்காக நம்ப வைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டிருக்கின்றார்; ஹசன்அலி.

 

மு.கா.வின் அடிப்படை குர்ஆனும் ஹதீஸூம் என்று சொல்லப்படுகின்றது. இரண்டு ரக்அத் சுன்னத்து தொழுதுவிட்டு வந்து கட்டியணைத்து ‘இனி உங்களையும் என்னையும் மரணந்தான் பிரிக்க வேண்டுமென’ சொல்லி தலைவர் வாக்குறுதி அளித்ததாக ஹசன்அலி கூறுகின்றார். இது உண்மையென்றால் குர்ஆனையும் ஹதீஸையும் மையமாகக் கொண்ட கட்சியின் தலைவர் இப்படியாக வழங்கிய வாக்குறுதியை மீற முடியுமா என்ற கேள்வி எழுகின்றது? அதையும் தாண்டி, அரசாங்கம், தேர்தல் ஆணைக்குழு, கட்சியின் ஆதரவாளர்கள், பேராளர்கள், போராளிகள், உயர்பீட உறுப்பினர்கள், சகோதர சமூகங்கள் எல்லோரும் அறிந்திருக்கத்தக்கதாக வழங்கப்பட்ட ஒரு வாக்குறுதியை நிறைவேற்றாமல் விடுவது, மேற்சொன்ன எல்லோரையும் முட்டாளாக்கும் முயற்சிக்கு சமமானது என்பதையும் மறந்து விடக் கூடாது.

 

உண்மையில், ஹசன்அலிக்கு குறித்த பதவியை வழங்கி அவரை கட்சிக்குள் வைத்திருந்திருக்க வேண்டும். மறைந்த தலைவர் அஷ்ரஃபின் கொள்கையுடன் இன்றும் கட்சியில் இருப்பவராக மக்களால் பார்க்கப்படுபவர் ஹசன்அலி மட்டும்தான். எனவே ஹசன்அலி இல்லாத முஸ்லிம் காங்கிரஸை தம்மால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாதிருப்பதாக நாம் சந்திக்கும் சாதாரண மக்கள் கூறுகின்றார்கள். இந்த நிலைமையை தவிர்ப்பதற்காக, அன்றேல் பசீரை தனிமைப் படுத்துவதற்காகவேனும் அதிகாரமுள்ள செயலாளர் நாயகமாக அவரை நியமித்திருக்க வேண்டும். ஆனால் அதுவும் நடந்தபாடில்லை.

 

பறிபோகும் அதிகாரம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் அர்ப்பணிப்புக்களால் உருவான கட்சியாகும். தமது கட்சிக்கு அம்மக்கள் கிழக்கைச் சேர்ந்த ஒருவரையே தலைவராக நியமித்திருக்கலாம்;. ஆனால் பெரும் மனம்கொண்டு அதை அவர்கள் றவூப் ஹக்கீமுக்கு வழங்கியிருக்கின்றார்கள். அம்பாறை மாவட்டத்தில் அதிகாரமுள்ள செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தவிசாளரும் இருக்கின்றார்கள்தானே என்ற ஆறுதல் அவர்கனுக்கு இருந்தது. இரட்டைத் தலைமைத்துவத்தைக் கூட அவர்கள் கோரவில்லை. ஆனால் அந்த ஆறுதல் இன்று இல்லாமல் போயிருக்கின்றது. இதனால் நிலைமைகள் மாற்றமடையப் போகின்றன.

 

இதேவேளை, இப்போது செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் மன்சூர் ஏ.காதருக்கு சுயமாக செயற்படுவதற்கான முழு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்றும் கிட்டத்தட்ட தலைவரின் செயலாளர் போன்ற பதவியும் அதிகாரமுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒரு அணியினர் கூறி வருகின்றனர். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், மு.கா.வின் பதவிவழி அதிகாரமும் அக்கட்சி மீதான செல்வாக்கும் கிழக்கில் இருந்து மெல்ல மெல்ல நழுவிப் போகின்றதா என்ற கேள்வி எழுகின்றது. தங்களுக்கு இருக்கின்ற பதவியும் அதனூடாக கிடைக்கின்ற வரப்பிரசாதங்களும் இல்லாது போய்விடும் என்பதற்காக, எல்லாவற்றுக்கும் தலையாட்டுகின்;ற கட்சி உறுப்பினர்கள் இதுகுறித்து கொஞ்சமாவது சிந்திக்க வேண்டியுள்ளது.

 

இதற்கு முன்னர் அதாவுல்லாவுக்கும், றிசாட்டுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் நடந்த போது தலைவரின் பக்கம் நின்ற ஹசன்அலிக்கும் பசீருக்கும் இன்று அதேநிலை ஏற்பட்டிருக்கின்றது. காரணங்களும் சூழ்நிலைகளும் வேறுபட்டதாக காணப்பட்ட போதும், மு.கா.வில் கிழக்கைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்களின் ஆதிக்கம் குறைந்து வருவதும் இருக்கின்ற கொஞ்சப் பேர் நெஞ்சுரம் அற்றவர்களாக இருப்பதும் கவனிப்பிற்குரியது. அன்று மேற்சொன்னவர்களுக்கு நடந்தது, இன்று ஹசன்அலிக்கும் பசீருக்கும் நடந்தது.
நாளை இதுவே மற்றவர்களுக்கும் நடக்கலாம்.

• ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 19.02.2017)