தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் சபாநாயகர் தனபால் அதை நிராகரித்துவிட்டார். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது.
இதனால் சபையை 3 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர். அப்போது திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதனால் அவர்கள் வலுக்கட்டாயமாக அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். மு.க. ஸ்டாலின் உள்பட தி.மு.க.வில் பலர் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்டாலின், ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து, தாங்கள் தாக்கப்பட்டது குறித்து முறையிட்டார். பின்னர் ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு நேராக மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகில் வந்தார்.
அங்கு காந்தி சிலை முன்பு திடீரென எம்.எல்.ஏ.க்களுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த செய்தி சென்னை முழுவதும் தீயாக பரவியது. தி.மு.க. தொண்டர்கள் மெரினாவில் அதிக அளவில் குவியத் தொடங்கினார்கள். இதனால் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது என போலீசார் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை கைது செய்தனர். பின்னர் மு.க. ஸ்டாலினையும் கைது செய்தனர்.