தமிழகம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் OPS யை வீழ்த்தி வெற்றி பெற்றார் EPS

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டார். இதற்காக இன்று சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. காலை 11 மணிக்கு அவை கூடியதும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்து வாக்கெடுப்பு நடத்தும்படி கேட்டுக்கொண்டார்.

ஆனால், ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் வாக்கெடுப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கையை நிராகரித்த தனபால், வாக்கெடுப்பை எவ்வாறு நடத்துவது என்பது சபாநாயகரின் உரிமை என்றும், அந்த உரிமையில் யாரும் தலையிட முடியாது என்றும் கூறியதால் எம்.எல்.ஏ.க்களின் கோபம் மேலும் அதிகரித்தது. 

சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டனர். சபாநாயகர் இருக்கை மற்றும் அவரது மைக் சேதப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக முதலில் மதியம் ஒரு மணி வரையிலும், பின்னர் 3 மணி வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன், அமளியில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் வெளியேற்றும்படி சபைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து, 3 மணிக்கு அவை கூடியதும் வாக்கெடுப்பு தொடங்குவதாக சபாநாயகர் அறிவித்தார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இதனால் எதிர்க்கட்சியினர் இல்லாமல் வாக்கெடுப்பு தொடங்கியது. 

வாக்கெடுப்பில் 122 உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்தனர். 11 பேர் எதிர்த்து வாக்களித்தனர். எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்ததால், நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தலையிலான அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆளுநரிடம் அவர் அளித்திருந்த எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தில் 124 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதன்பின்னர் நட்ராஜ் எம்.எல்.ஏ. தனது ஆதரவை ஓ.பி.எஸ். அணிக்கு அளிப்பதாக கூறினார். ஒரு எம்.எல்.ஏ. கூவத்தூர் முகாமில் இருந்து வெளியேறினார். இதனால், எடப்பாடி பழனிச்சாமி அணியின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 122 என்ற நிலையில் இருந்தது. இவர்கள் அனைவரும் இன்றைய வாக்கெடுப்பில், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.