துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை.
இன்றைய அரசியல் அரங்கில் ஹசனலி விவகாரமே சூடு பிடித்து காணப்படுகிறது.கடந்த பேராளர் மாநாட்டின் போது மு.காவின் செயலாளர் அரசியல் பதவி வகிக்க முடியாதவாறு மாற்றம் செய்யப்பட்டிருந்தது.இந் நிலையில் பலரது வாய்களில் “இது போன்று மர்ஹூம் அஷ்ரபிற்கு செய்ய தெரியாதா? இதனை அமைச்சர் ஹக்கீம் இப்போது ஏன் செய்கிறார்?” போன்ற வினாக்களை அவதானிக்க முடிகிறது.
மர்ஹூம் அஷ்ரப் தனது தலைமைத்துவ காலத்தில் யாராலும் அசைக்க முடியாதளவு மிகவும் உறுதியாக இருந்தார்.செயலாளர் பதவி அதிகாரமிக்கதாக இருந்தாலும் அவரின் தலைமைத்துவ உறுதியின் காரணமாக அதனைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியமில்லை.அது போன்று அஷ்ரபின் காலத்தில் மஷூர அடிப்படையிலான தீர்மானங்களே அதிகம் எடுக்கப்பட்டது.எனவே,செயலாளர் கட்சித் தீர்மானங்களுக்கு உடன்பட்டே ஆக வேண்டும்.இங்கு பிரச்சினைகள் எழ வாய்ப்பில்லை.
இது வரை காலமும் அமைச்சர் ஹக்கீமும் இவைகள் பற்றி சிந்திக்கவில்லை.அண்மைக் காலமாகவே இது பற்றிய நகர்வுகளை செய்து வருகிறார்.இவர் உறுதியான தலைவராகவும்,மஷூரா அடிப்படையில் தீர்மானங்களையும் எடுத்தால் இப் பதவிக்கு அஞ்ச வேண்டிய அவசியமில்லை.மஷூரா அடிப்படையில் அனைவரும் கலந்துரையாடி எடுக்கும் முடிவுடன் நியமிக்கப்படும் அதிகாரமிக்க செயலாளர் முரண்பட முடியுமா? அமைச்சர் ஹக்கீமின் தனிப்பட்ட முடிவுகளை ஏற்றுக்கொண்டு ஒரு செயலாளர் செயற்பட வேண்டுமென யாரும் எதிர்பார்க்க முடியாது.அப்படி செயற்பட வேண்டுமாக இருந்தால் தலைமைத்துவம் மிகவும் உறுதியானதாக இருக்க வேண்டும்.தற்போதையை அமைச்சர் ஹக்கீமின் தலைமைத்துவம் உறுதியானதாக இல்லை.அதனாலேயே தன் தலைமைத்துவத்தை பாதுக்காக்க இப்படியான பாதுகாப்பு அரண்களை அமைத்து வருகிறது.
இன்றும் மு.கா மஷூரா அடிப்படையில் செயற்பட உத்தேசிக்குமாக இருந்தால் அதிகாரமிக்க செயலாளருக்கு தலைமைத்துவம் அஞ்ச வேண்டிய அவசியமில்லை.மஷூரா அடிப்படையிலான தீர்மானத்தின் அடிப்படையில் கட்சியை கொண்டு செல்லும் போது அது வேறு திசையில் பயணிக்க தொடங்கும்.இதன் பிறகு மஷூறா அடிப்படையிலான தீர்மானங்களுக்கு கட்சியை கொண்டு செல்ல முடியாது.அப்படி கொண்டு சென்றால் கட்சியின் தலைமைத்துவம் பல சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ளும்.இதனை விளக்கமாக கூறி வம்பை வளர்க்காமல் விதைத்த வினை அறுவடை செய்யும் காலம் நெருங்கிவிட்டதால் பலமிக்க மு.கா என்ற கட்சியை தான் தனது கைக்குள் வைத்திருப்பதே தலைமைத்துவம் தன்னை பாதுகாத்து கொள்ள மிகவும் சிறந்த வழியாகும்.
இப்போதைய செயலாளரின் ஒரு உத்தியோக பூர்வ அறிக்கையையாவது யாராவது கண்டுள்ளீர்களா? அறிக்கை விட அனுமதி வேண்டும் என்ற நிலை ஒரு கட்சியின் அனைத்து விடயங்களிலும் தெளிவிருக்க வேண்டிய செயலாளருக்கு இருப்பது சிறந்ததல்ல.அமைச்சர் ஹக்கீம் தனது பலமிக்க எதிரிகளை கூட்டிக் கொண்டே வருகிறார்.இப்படித் தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை அனைத்து எதிரிகளும் சேர்ந்து துரத்தி அடித்தனர்.இந் நிலை அமைச்சர் ஹக்கீமிற்கும் மிக விரைவில் வரலாம்.இந் நேரத்தில் அனைவரையும் அரவணைத்து செல்லும் போக்கே அமைச்சர் ஹக்கீமிற்கு பொருத்தமானது.குறைந்தது மிக விரைவில் வரவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வரையாவது இப் போக்கை தொடர வேண்டும்.