ஐக்கிய நாடுகளின் சபையில் உள்ள அமைதிப்படை அமைப்பானது, அமைதியற்ற சூழ்நிலை நிலவும் நாடுகளில் அமைதி நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதற்காக பல்வேறு நாடுகளில் ஐ.நா. அமைதிப்படை முகாமிட்டுள்ளது. ஐ.நா பொதுச் செயலருக்கு அடுத்தபடியாக, ஐ.நா. அமைதிப்படைத் தலைவர் பதவி மற்றும் ஐ.நா. அரசியல் விவகாரத் தலைவர் பதவி முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் ஐ.நா. விவகாரங்களுக்கான இயக்குநராகப் பணியாற்றி வரும் ஜீன்-பியர் லாக்ரோயிஸ், ஐ.நா. அமைதிப் படைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக அந்தப் பொறுப்பை வகித்து வரும் ஹெர்வ் லாட்சூஸ், வரும் மார்ச் மாதத்துடன் ஓய்வு பெறவிருப்பதையடுத்து, அந்தப் பதவிக்கு ஜீன்-பியர்லாக்ரோயிஸ், ஐ.நா பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெசால் நியமிக்கப்பட்டுள்ளார்
எனினும், ஐ.நா. அரசியல் விவகாரங்களுக்கான பிரிவின் தலைவர் ஜெஃப்ரி ஃபெல்ட்மேனின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் ஐ.நா. அமைதிப் படை வீரர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அந்தப் படையின் தலைவராக ஜீன்-பியர் லாக்ரோயிஸ் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.