பாரிய நகரம் மற்றும் மேற்குப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலை இடம்மாற்றிக் கொள்வதற்கு 20 பேர்ச் காணியே வழங்க முடியும் என பள்ளிவாசல் நிர்வாக சபையின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசல் நிர்வாகம் புதிய இடத்தில் பள்ளிவாசலை நிர்மணித்துக் கொள்வதற்கு 80 பேர்ச் காணியை ஒதுக்குமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தது.
எனினும் பள்ளிவாசல் 20 பேர்ச் காணியிலேயே அமைந்துள்ளதாகக் கூறி அந்தளவு காணியையே ஒதுக்குவதாகக் கூறினார்.
நேற்று முன்தினம் மதியம் பத்தரமுல்லையிலுள்ள பாரிய நகரம் மற்றும் மேற்குப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் தலைமையில் தம்புள்ளை பள்ளிவாசலுக்கு காணி ஒதுக்குவது தொடர்பாகவும் தம்புள்ளை நகர அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாக சபையின் சார்பில் அதன் தலைவர் எம்.ஐ.எம். கியாஸ், நிர்வாக சபை உறுப்பினர் ரஹ்மத்துல்லா மற்றும் தம்புள்ளை பிரிவெனாவைச் சேர்ந்த ராஹுல தேரர், நகர அபிவிருத்தி சபை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தம்புள்ளை பள்ளிவாசலுக்கு காணி ஒதுக்குவது தொடர்பில் பௌத்த தேரர் எதிர்ப்பு வெளியிட்டபோதும் பள்ளிவாசல் வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளதால் அவசியம் காணி வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் 17 பேரும் கையொப்பமிட்டு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.
தற்போது தம்புள்ளை பள்ளிவாசல் கழிவறைகள் மற்றும் கட்டிடங்கள் உட்பட 41.49 பேர்ச் காணியில் அமைந்துள்ளதாகவும் வாகனத் தரிப்பிட வசதியையும் கருத்திற்கொண்டு பள்ளிவாசலுக்கு 80 பேர்ச் காணி வழங்கப்பட வேண்டுமெனவும் தம்புள்ளை பள்ளிவாசலை சூழ குடியேறியுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கும் பள்ளிவாசலுக்கும் காணி ஒதுக்கப்பட்டுள்ள பகுதியிலேயே குடியேறுவதற்கு நிலம் வழங்கப்பட வேண்டுமெனவும் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலந்துரையாடலின்போது அமைச்சர் சம்பிக்க பள்ளிவாசலை சூழ வசிப்பவர்களுக்கு மாற்றிடம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக உறுதியளித்தார். தம்புள்ளை பள்ளிவாசல் சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் பள்ளிவாசல் நிர்வாக சபையின் ஏனைய உறுப்பினர்களிடம் கலந்துரையாடி இறுதி முடிவினைத் தெரிவிப்பதாக அமைச்சரிடம் கூறினார்கள்.
மாத்தளையை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். இப்றாஹீம் தம்புள்ளை பள்ளிவாசலுக்குப் புதிய காணி ஒதுக்கீடு தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்;
‘பள்ளிவாசல் நிர்வாக சபையினர் பள்ளிவாசலுக்கு 80 பேர்ச் காணியே வழங்கப்பட வேண்டுமென உறுதியாக இருக்கிறார்கள். இது தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாக சபையுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்தை எட்டவுள்ளோம். 2012 ஆம் ஆண்டு முதல் தீர்க்கப்படாதுள்ள தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினைக்கு இறுதித் தீர்வைப் பெற வேண்டியது அவசியமாகும் என்றார்.