கிழக்கு மக்களுக்கான அஷ்ரப் அவர்களின் கனவுகளும்,கொள்கைகளும் காற்றில் விடப்படுகின்றன..

இனியும் ஹகீமுக்கு தாரைவார்க்க கிழக்கு முஸ்லிம்கள் தயாரில்லை

மு.கா கிழக்கில் இருந்து அந்நியப்படுத்தப் படுகிறது என்று நாங்கள் குற்றம் சுமத்திய போது அதன் உண்மைத்தன்மை பற்றி அறிய முற்படாது, எம்மீதே போலிக்குற்றச் சாட்டுகளை சுமத்தினீர்கள்.

தற்போது கிழக்கில் இருந்த அதிகாரம்மிக்க பதவி இல்லாமல் செய்யப்படுள்ளதையிட்டு உங்கள் மனச்சாட்சி உங்களை உறுத்தாதிருக்காது. அதைவிடவும், கரையோர மாவட்ட கோரிக்கை மு.காவினால் கைவிடப்படிருப்பது உங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

கிழக்கில் உள்ள மக்களின் பிரச்சினைகளை ஹகீம் அவர்களால் உணர்ந்து கொள்ள முடியாது என்பதை இந்த முறை நடந்த பேராளர் மாநாடு பறைசாற்றியுள்ளது.

கட்சி கிழக்கில் இருந்து அந்நியப்படுத்தப் படுவது மட்டுமல்லாது, கிழக்கு மக்களுக்கான அஷ்ரப் அவர்களின் கனவுகளும் கொள்கைகளும் காற்றில் விடப்படுவதை, அவர்மீது பேரபிமானம் கொண்ட உங்களைப் போன்றவர்கள், பதவியாசை கண்ணை மறைப்பதனால்  கண்டு கொள்ளாது இருக்கறீர்கள் என்றே கொள்ள முடியும்.

கடந்த பேராளர் மாநாடு, கிழக்கில் இனி கட்சிக்கு இறங்குமுகமாக அமையப்போவதை உணர்த்தியிருக்கும். அது எமக்கும் விருப்பமில்லாத ஒரு விடயம் என்றாலும், வேறு வழியில்லை.

உங்கள் தலைவரின் வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்துக்களையும், சட்டத்திற்கு முரணாக செய்த குற்றங்களையும், குர்ஆன் ஹதீஸின் பேரால் செய்யப்பட்ட ஹறாமான விடயங்களையும் பாதுகாப்பதற்காக, தலைமை பதவியையும், அமைச்சர் பதவியையும் அவருக்குக் கொடுத்து ஒட்டுமொத்த கிழக்கு மக்களையும் காட்டிக்கொடுக்கும் தேவை மக்களுக்கில்லை.

அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸதீன்
செயலாளர் 
கிழக்கின் எழுச்சி