மு.காவின் யாப்பு மாற்றம் செல்லுமா? தலைவர் தனது விசேட அதிகாரத்தை பிரயோகிக்க முடியாது

 எந்த விடயமாக இருந்தாலும் ஒரு கட்சியினால்,அமைப்பினால் அதன் யாப்பிற்கு அமைவாகவே செயற்பட முடியும்,செயற்பட வேண்டும்.கடந்த பேராளார் மாநாட்டிலும் யாப்பு மாற்றம் உட்பட பல விடயங்கள் இடம்பெற்றிருந்தன.இது மு.காவின் யாப்பின் பிரகாரம் இடம்பெற்றதா என்பதை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

மு.காவின் யாப்பின் அடிப்படையில் ஒரு யாப்பு மாற்றம் இடம்பெற வேண்டுமாக இருந்தால் அதற்கு மு.கா யாப்பு கூறும் சில வழி முறைகள் உள்ளன.

7.1.e யாப்பு மாற்றங்கள் ஏதாவது புதிதாக வருடாந்த கட்டாய உயர்பீட கூட்டத்திலும் பின்னர் பேராளர் மாநாட்டிலும் அங்கீகாரத்துக்காக சமர்பிப்பதாக இருப்பின் அவை ஒரு மாத காலத்துக்கு முன்னர் நடைபெறும் சாதாரண உயர்பீட கூட்டத்தில் முன்கூட்டியே யாப்பு விவகார பணிப்பாளரிடம் சமர்பிக்கப்பட்டு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். யாப்பு விவகார பணிப்பாளர் பின்னர் முறையான கலந்துரையாடல்களின் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட மாற்றங்களை வருடாந்த கட்டாய உயர்பீட கூட்டத்திலும் பின்னர் பேராளர் மாநாட்டிலும் சமர்பிப்பார்.

இதனை வாசிக்கும் ஒருவர் யாப்பு மாற்றம் நிகழ்வதானால் ஒரு மாதத்திற்கு முன்பு இடம்பெறும் உயர்பீடக் கூட்டத்தில் அது சமர்ப்பிக்கப்பட்டு முறையான கலந்துரையாடலுக்கு பின்னர் அது கட்டாய உயர்பீடக் கூட்டத்திலும் பேராளர் மாநாட்டிலும் சமர்பிக்கப்பட வேண்டும் என்பதை சாதாரணமாகவே அறிந்து கொள்ளலாம்.

 இதன் பிரகாரம் நோக்குகின்ற போது இவ்விதத்தில் தற்போதைய மு.காவின் யாப்பு மாற்றம் நிகழவில்லை.யாப்பு மாற்றம் என்பது மூடிய அறைக்குள் சிலர் இணைந்து முடிவெடுத்து செயற்படுத்தும் காரியமல்ல.இது கட்சியின் யாப்பு மாற்ற விடயம் என்பதால் இவ் இவ்விடயத்தில் தலைவர் தனது விசேட அதிகாரத்தை பிரயோகிக்க முடியாது (மு.கா யாப்பின் 3.3.bயின் படி தான் நினைத்த முடிவுகளை எடுக்கும் அதிகாரம்).இவ் யாப்பு மாற்றத்தை தலைவர் உட்பட ஒரு சிலர் இணைந்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் மாற்றப்பட்ட யாப்பு வாசிக்கப்பட்ட போதே  உயர்பீட உறுப்பினர்கள் மாற்றங்கள் தொடர்பில் அறிந்துள்ளார்கள்.

யாப்பு மாற்ற பரிந்துரை என்பது அக் கட்சியின் தலைவரால் மாத்திரம் மேற்கொள்ளக் கூடியதல்ல..அனைவரும் பரிந்துரை செய்யலாம்.அதனை முறையான கலந்துரையாடலில் பின்னர் அங்கீகரிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.தற்போது யாப்பு மாற்றம் நடந்தது போன்று  தலைவர் அல்லாத ஒருவர் யாப்பை மாற்றியிருந்தால் இதனை யாராவது ஏற்றுக்கொள்வார்களா? இதனை வைத்து சிந்தித்தாலும் இது தவறான செயல் என்பதை மிக இலகுவாக அறிந்து கொள்ளலாம்.

அது மாத்திரமல்ல மு.காவின் எந்த செயற்பாடுகளும் மஷூரா அடிப்படையிலேயே தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.பேராளர் மாநாட்டிற்கு முந்திய நாள் யாப்பு மாற்றத்தை சமர்ப்பித்து அது தொடர்பில் கலந்துரையாடி ஒரு தகுந்த முடிவிற்கு வர முடியுமா? நான்றாக சிந்தியுங்கள்.சில வேளை அதற்கு பல நாட்கள் எடுக்கலாம்.அதனை மையமாக கொண்டே மு.காவின் யாப்பில் ஒரு மாதத்திற்கு முன்னர் யாப்பு மாற்றம் நிகழ வேண்டுமாக இருந்தால் அது உயர்பீடத்தில் யாப்பு விவகாரப் பணிப்பாளரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கூறுகிறது.வாக்களித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதாக இருந்தால் ( உதாரணமாக இலங்கை அரசியலமைப்பின் பெரும்பாலான பாகங்களை மாற்றுவதாக இருந்தால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும் பான்மையை பெற வேண்டும் ) அதற்கு ஒரு நாள் போதும்.

இது தொடர்பில் ஒரு உயர்பீட உறுப்பினரை தொடர்பு கொண்டு கேட்டேன்

“இதனை சீர் தூக்க உயர் பீடத்தில் உள்ளவர்கள் சட்ட ஞானிகளா” என என்னிடம் நக்கலாக கேட்டார்.இது ஒவ்வொரு உயர்பீட உறுப்பினர்களின் அறிவையும் தட்டிப் பார்க்கும் செயலாகும்.நான் கூறுவது சரியாக இருப்பின் அதனை உயர்பீட உறுப்பினர்கள் சிறிதும் கவனத்திற் கொள்ளாமல் இருந்தால் அவர்களை போன்ற ஏமாளிகள் யாருமில்லை.எம்மை முட்டாள் என நினைத்து செய்வதை பார்த்து நாம் சிரித்தால்…?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.