அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெரிய அணை ஒன்று உடையும் நிலையில்..

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ளது ஓரோவில்லி அணை. 770 அடி ஆழம் கொண்ட இந்த அணையானது 1968-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக பெய்துள்ள மழையில், கிட்டத்தட்ட அணை முழுவதும் தண்ணீர் உள்ளது.
தற்போது, இந்த அணையின் கதவு ஷட்டரில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் வெளியேறி வருகிறது. சில மணி நேரங்களில், ஷட்டர் முழுவதுமாக உடைந்து அதிக அளவில் தண்ணீர் வெள்ளமாக பாயும் என்ற நிலை உள்ளதால், உடனடியாக அப்பகுதியில் வசிக்கும் சுமார் 1.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர்.
பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அணையைச் சுற்றியுள்ள பகுதிகள் பேரிடர் ஏற்படும் பகுதியாக அறிவிக்கப்பட்டு போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.