உதுமான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் மூன்றாவது கலீபா ஆவார்கள். அழகு மிகு தோற்றம் கொண்டவர்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருமை மகளான ருகையா (ரலி) அவர்களை மணமுடித்து, அவர்கள் வபாத்தானதன் பின்னர் நபி (ஸல்) அவர்களின் மற்றுமொரு மகளான உம்மு குல்தூம் (ரலி) அவர்களை மணந்தவர்கள். மிகப் பெரும் செல்வச் சீமான். குர்ஆனை ஒன்று திரட்டிய கோமானான அவர்கள், தேவையுடையோர்க்கு அள்ளி வழங்கும் வள்ளலாகவும் திகழ்ந்தார்கள்.
அப்படிப்பட்ட உதுமான் (ரலி) அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இது:
தனது அடிமைகளில் ஒருவர் தவறொன்றைச் செய்து விட்டதனால் கோபம் கொண்டு, அந்த அடிமையின் காதைப் பிடித்துத் திருகி விட்டார்கள் உதுமான் (ரலி) அவர்கள். அந்த அடிமை ‘ஆ’ வென்று சத்தம் போட்டுக் கத்தி விட்டார்.
அடிமை வலியால் கத்தியதைக் கேட்டதும் உதுமான் (ரலி) அவர்களின் தேகம் நடுங்கத் தொடங்கிவிட்டது. ”கோபத்திற்கு மேலான மருந்து கோபம் வரும் போது பேசாமல் இருந்து விடுவது” என்று சொல்லியும், எந்த விடயத்திற்கும் கோபப்படாமல் சாந்தமாகவே வாழ்ந்தும் வந்த அவர்கள், இன்று தானே கோபப்பட்டு அடிமையின் காதை முறுக்கி விட்டதை எண்ணி மிக வருந்தினார்கள். பின்னர் அந்த அடிமையிடம் சொன்னார்கள்.
”இங்கே வா…நான் உன் காதை முறுக்கியது போல நீயும் என் காதை முறுக்கி விடு!”
அந்த அடிமையோ அதனை மறுத்தார்.
”எனது சொல்லைக் கேட்பது உனது கடமை!” என்று வற்புறுத்தினார்கள் உதுமான் (ரலி) அவர்கள். ஆதலால், மிக்க மனத் துயரத்துடன் அந்த அடிமையும் உதுமான் (ரலி) அவர்களின் காதைப் பிடித்து முறுக்கினார். ”இன்னும் பலமாக முறுக்கு.” என்றார்கள். அந்த அடிமையும் அவ்வாறே செய்ய, ”இன்னுமின்னும் பலமாக முறுக்கு. என் செயலுக்கு இந்த உலகத்திலேயே பகரம் கிடைத்து விடுவது எவ்வளவு நல்லது. மறுமையில் இறைவனின் பிடி இருக்காதல்லவா?” என்று சொன்னார்கள் உதுமான் (ரலி) அவர்கள். ”இதற்கு மேல், நீங்கள் முறுக்கியதை விட அதிகமாக முறுக்குவதற்கு நானும் பயப்படுகிறேன்.” என்று அந்த அடிமை சொல்ல, உதுமான் (ரலி) அழுது விட்டார்கள். அந்த அடிமையையும் விடுதலை செய்து விட்டார்கள்.
ஓர் அடிமையென்றாலும் கூடத் தான் செய்த தப்புக்கு, அதே பாணியில் தண்டனை பெறுவதற்குச் சித்தமாயிருந்த தலைமைத்துவங்கள்தான் நமது தலைமைத்துவங்கள்!
அல்லாஹ் நம் எல்லோருக்கும் நேர்வழி காட்டுவானாக!