பரிகாரம் காணுமா பேராளர் மாநாடு ?

நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒரு முக்கிய நபரது நோயை குணப்படுத்தக் கூடிய ஒரு நாட்டு வைத்தியர் அல்லது பரிகாரி எங்கோ ஒரு தூரத்து கிராமத்தில் இருப்பதாக யாராவது சொன்னால், அவரை நம்பியிருக்கின்ற அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் மீண்டும் நம்பிக்கை துளிர்விடும். எப்பாடுபட்டாவது அந்த வைத்தியரிடம் அவரை எடுத்துச் சென்று அதனை குணப்படுத்த வேண்டுமென நினைப்பார்கள்.
அதற்காக முயற்சி செய்வார்கள். நாட்டு வைத்தியத்தை அசட்டுத்தனமாக நம்புவார்கள், இறைவனிடம் பிரார்த்தனை செய்வார்கள். எப்படியும் இம்முறை இந்த நாட்பட்ட நோய் குணமடைந்து விடும் என்று அதீத எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். இதற்கு ஒப்பான ஒரு கடைசி எதிர்பார்ப்புடனேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு இன்று கொழும்பில் நடைபெறுகின்றது.

தனித்துவ முஸ்லிம் அரசியல் அடையாளத்தை தாரக மந்திரமாக கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கின்ற ஆயிரத்தெட்டு பிரச்சினைகளுக்கும் பரிகாரம் தேடும் ஒரு நிகழ்வாக மு.கா.வின் பேராளர் மாநாடு அமையுமா என்பதில்; நிச்சயமின்மைகள் ஏற்பட்டிருந்தாலும் கூட அவற்றையெல்லாம் தாண்டி அவ்வாறான தீர்வுகளையும் தீர்மானங்களையும் மேற்கொள்ளும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக இன்றைய மாநாடு அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பே முஸ்லிம் மக்கள் மத்தியில் மேலோங்கிக் காணப்படுகின்றது.

மு.கா.வின் ஸ்தாபக தலைவரின் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸில் இருந்த முன்னேற்றமும் வீச்சும் வேகமும் அவரது மரணத்திற்குப் பின்னர் இருக்கவில்லை என்பது கண்கூடு. ஒரு நல்ல குடும்பத் தலைவனின் தலைமையில் நன்றாக வாழ்ந்த குடும்பம் அவரது திடீர் மரணத்திற்குப் பின்னர் சிதறுண்டு, எப்படியாவது வாழ்ந்தால் சரி என்ற நிலைக்கு வந்தது போலாகிவிட்டது மு.கா.வின் பிற்கால அரசியல். சுருங்கக்கூறின், ஸ்தாபக தலைவரின் மரணத்திற்குப் பிற்பாடு அபிவிருத்தி அரசியலிலும் உரிமைசார்ந்த அரசியலிலும் முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டவில்லை என்றே சொல்ல வேண்டும்.

உள்ளக முரண்கள்

இவ்வாறான மனக்கவலைகள் எல்லாம் இருந்து வந்த நிலையிலேயே இப்போது உட்கட்சி முரண்பாடுகளும் வெடித்து கட்சிக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. தேசியப்பட்டியல் எம்.பி.க்கள் நியமனத்தில் ஏற்பட்ட கருத்து வேற்றுமை, செயலாளர் நாயகத்தின் அதிகாரங்கள் பிடுங்கப்பட்ட விதம், இவ்விரு விடயங்கள் மற்றும் அதற்குப் பின்னரான உட்கட்சி அமைதியீனங்களை சரிப்படுத்துவதில் காண்பிக்கப்பட்ட மெத்தனப் போக்கு, தவிசாளரின் அதிரடிகள், அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டமை என கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக மு.கா.வுக்குள் தொடர்ந்த உட்கட்சி முரண்பாடுகள், இன்று நடைபெறும் பேராளர் மாநாட்டில் வந்து நிற்கின்றன. இதற்குப் பிறகு இந்த விவகாரங்கள் எல்லாம் எந்தப் பாதையில் பயணிக்கும் என்பதை நேற்றிரவு நடைபெறவிருந்த கட்டாய உயர்பீடக் கூட்டமும் இன்றைய பேராளர் மாநாடுமே தீர்மானிக்கப் போகின்றன.

முஸ்லிம் சமூகத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் செய்யப்பட வேண்டிய பிரச்சினைகள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டு கட்சிக்குள் இருக்கின்ற விவகாரங்களையாவது உடனடியாக தீர்த்து வைக்கவேண்டியிருக்கின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஐ.தே.க.வினால் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் எம்.பி.களுள் ஒன்றை இன்னும் எம்.எச்.எம்.சல்மானிடம் இருந்து பெற்று, பொருத்தமான யாராவது ஒருவருக்கு அதனை வழங்கவில்லை. செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன்அலியை சமரசப்படுத்துவதற்காக கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

பல ஊர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் அவ்விதமே ஆயிற்று. கட்சிக்குள் குழுக்களாக பிரிந்து இயங்குவதும் பட்டம், பதவிகளுக்காக பக்கச்சார்பாக செயற்படும் நிலைமைகளும் மாற்றப்படவில்லை. குறிப்பாக, கட்சியில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கான யாப்புத் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன.
இவ்வளவு பிரச்சினைகளும் ஏற்கனவே இருக்கத்தக்கதாக, கட்சி விவகாரங்கள் தொடர்பில் அண்மைக்காலத்தில் தவிசாளர் பசீர் சேகுதாவூத் மற்றும் தாறுஸ்ஸலாம் மீட்பு முன்னணி என்ற முன்னறியப்படாத அமைப்பு ஆகியவற்றினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் முறையாக எதிர்கொள்ளப்படவில்லை.

தனிப்பட்ட விடயங்களை விட்டுவிட்டாலும், கட்சியின் சொத்துக்கள் பற்றிய தெளிவை ஏற்படுத்தி, உண்மை எதுவென மக்களுக்கு சொல்லி தம்மை சுத்தவாளிகள் என்று மக்கள் மன்றத்தில் நிரூபிப்பதற்கு கட்சியின் உயர்பீடத்தால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவற்றையெல்லாம்; செய்வதற்கு வழிகோலுகின்ற ஒரு அமர்வாக இந்த கட்டாய உயர்பீட கூட்டமும் பேராளர் மாநாடும் அமைதல் அவசியம்.

அதைவிடுத்து, யாரையும் பழிதீர்க்கின்ற ஒரு அமர்வாக அமைந்துவிடக் கூடாது. அதேபோல், பசீரை தவிசாளர் பதவியில் இருந்து நீக்கியது இன்றைய தலையிடிகளை குறைக்கும் என்று யாராவது நினைத்துக் கொள்ளவும் கூடாது. எனவே, கடந்த உயர்பீட கூட்டத்தில் தாமாக மனம்விரும்பி கையை உயர்த்திய உறுப்பினர்களுடன், ‘ஏகமனதான தீர்மானம்’ ஒன்றை மேற்கொள்வதற்காக ஏனையோரும் கையுயர்த்தியது போல இந்த பேராளர் மாநாட்டிலும், கையுயர்த்திவிட்டு வருவது ஆரோக்கியமாக அமைய மாட்டாது.

மாநாட்டு ஏற்பாடு

முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கைச் சேர்ந்த அரசியல் சிந்தனையாளர்களால் கிழக்கில் இருந்து உருவாக்கப்பட்ட கட்சியாகும். கட்சியை கொள்கைக்காக, உணர்வுபூர்மவாக நேசிக்கும் போராளிகளும், பேராளர்களும் அதிகளவில் கிழக்கிலேயே இருக்கின்றனர். ஆனால் கட்சியின் முக்கிய கூட்டங்கள் மாநாடுகள் கிழக்கிற்கு வெளியில்தான் நடந்தேறுகின்றன. ஒரு குடும்பம் தனது ஊரில் சாதி, சனங்கள் எல்லாம் இருக்கத்தக்கதாக வெளியூருக்கு சென்று தமது பிள்ளையின் திருமணத்தை நடாத்துவதை, இவ்வாறான நிகழ்வுகள் ஞாபகப்படுத்துகின்றன.

இம்முறை மு.கா.வின் பேராளர் மாநாட்டை தெஹிவளையில் உள்ள ஒரு மண்டபத்தில் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்ததாகவும் பின்னர் இது பி.எம்.ஐ.சி.எச். இற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. புpரதான முஸ்லிம் கட்சி ஒன்றின் மாநாடு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறுவது மிகவும் வரவேற்கத்தக்கதும் மகிழ்ச்சியானதுமே. ஆனால், அங்கிருக்கின்ற கட்டுக்கோப்பு, இட வரையறை என்பவற்றின் காரணமாக பேராளர்களை (பிரதேச ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநாட்டு பிரதிநிதிகளை) உள்வாங்கும் அளவு மட்டுப்படுத்தப்படலாம் என்ற மு.கா.வின் கிழக்கு முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர்.

அத்துடன், இம்முறை மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தாறுஸ்ஸலாத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டதை விடவும் வேறு ஒரு இடத்தில் இருந்தே பெருமளவுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதேநேரம் அஷ்ரஃப் காலத்தில் மேற்கொள்ளப்பட்டது போன்று இரண்டு வாரங்களுக்கு முன்னரே மாநாட்டுக்கான அழைப்பிதழ்கள் பேராளர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கும் நடைமுறையும் இம்முறை முறையாக பின்பற்றப்படவில்லை என்று தெரிவித்த உயர்பீட உறுப்பினர் ஒருவர், கடந்த வியாழக்கிழமை இரவு வரை கிழக்கில் உள்ள ஒரு சிலருக்கு அழைப்பிதழ்கள் கிடைத்திருக்கவில்லை என்றும் தெரிவித்தார். அதேநேரம், கிழக்கில் இருந்து செல்பவர்களின் தொகையை காட்டிலும் கொழும்பு போன்ற இடங்களில் இருந்து அதிகளவானோர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் இன்னுமொரு தகவல் உள்ளது.

இவையெல்லாம் எந்தளவுக்கு உண்மையானவை என்பது தெரியாது. ஆனால், ஒருவேளை மேற்சொன்ன தகவல்கள் உண்மையாக இருக்குமாயின், இவ்விடத்தில் இது இன்னுமொரு கோணத்தில் சிந்தனையை தூண்டி விடுகின்றது. அதாவது, ஒரு பிரதான நகரில் ஒரு சிறப்பான முறையில் பேராளர் மாநாட்டை நடத்துவது நல்ல விடயமே ஆனால் முஸ்லிம் காங்கிஸானது 2010ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக கிழக்கிற்கு வெளியிலேயே இம்மாநாட்டை நடாத்தி வருகின்றது. ஆனால் கிழக்கிலேNயு அதிக பேராளர்களும் உண்மைப் போராளிகளும் இருக்கின்றனர்.

இவ்வாறிருக்கையில், தொடர்ச்சியாக கொழும்பில் அதுவும் ஒரு மூடிய மண்டபத்தில் பேராளர் மாநாட்டை நடாத்துவது, கிழக்கின் செல்வாக்கை குறைப்பதற்கான உள்நோக்கம் கொண்டதா என்ற கேள்வியை கட்சியின் மூத்த உறுப்பினர்களே எழுப்புகின்றனர். அதாவது, கொழும்பில் நடாத்தி, மேற்சொன்ன அடிப்படையில் அழைப்பும் விடுத்தால் மட்டுப்படுத்தபட்ட அளவிலான நபர்களே கிழக்கில் இருந்து வருவார்கள்.

மற்றையவர்கள் தூரம் கருதியும் வேறுபல காரணங்களுக்காகவும் வருவது குறைவாக இருக்கும். அந்த வெற்றிடத்திற்கு கொழும்பு, கண்டியை சேர்ந்த ஆதரவாளர்களை போட்டு நிரப்பி மாநாட்டை நடத்தலாம். அவ்வாறு ஒரு மாநாடு இடம்பெறுமாக இருந்தால், தலைமைத்துவம் நினைத்த தீர்மானங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், கிழக்கில் மாநாடு நடந்தால் அதைச் செய்ய முடியாது. இந்த மனக்கணக்கின் அடிப்படையிலேயே தொடர்ச்சியாக வெளியிடங்களில் மு.கா. தனது மாநாட்டை நடத்துகின்றதோ என்ற சந்தேகம் எழுகின்றது.
ஹக்கீம் செய்யமாட்டார்

இவ்வாறான ஒரு காரியத்தை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் செய்யமாட்டார் என்பதே பலரதும் நம்பிக்கையாகும். ஏனெனில் அக்கட்சி எங்கெங்கோவெல்லாம் கிளை பரப்பி நின்றாலும் அதன் அடிவேர்கள் கிழக்கில்தான் இருக்கின்றன என்பதை அவர் அறியாதவரல்லர். ஆனால், அதையும் மீறி, கிழக்கு மக்களின், பேராளர்களின் ஆதிக்கத்தை, செல்வாக்கை குறைப்பதற்கு இதுபோன்ற நடவடிக்கைகள் இடம்பெறுமாக இருந்தால் அது குறித்து உடனடியாக சிந்தித்து செயற்பட வேண்டிய பொறுப்பு கிழக்கின் உயர்பீட உறுப்பினர்களுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் இருக்கின்றது.

முன்னைய காலத்தில் தென்பகுதி முஸ்லிம் அரசியல்வாதிகளே கிழக்கில் உள்ள முஸ்லிம்களின் அரசியலை தலைமை தாங்கிச் சென்றனர். இதில் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை செய்து, முஸ்லிம்களின் தலைமைத்துவத்தை கிழக்குக் கரைக்கு கொண்டுவந்தது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் ஸ்தாபக தலைமைத்துவமும் ஆகும். இது தென்பகுதி முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு தாங்கொண்ணா விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.

இப்போது மு.கா. தலைமைத்துவமானது கிழக்குக் வெளியிலுள்ள ஆனால் கிழக்கு மக்களின் மதிப்பையும் மரியாதையையும் பெற்ற றவூப் ஹக்கீமிடம் உள்ளது. கிழக்கில் வேறு ஆள் கிடைக்காமல் தலைமைத்துவத்துவம் ஹக்கீமுக்கு வழங்கப்படவில்லை. தகுதி, நல்லெண்ணம், அவர் மீது அப்போதிருந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இப்பதவியை வழங்கி கிழக்கு மக்கள் அழகு பார்க்கின்றனர். அதுவேறு விடயம். அவரே அப்பதவியில் தொடர்ந்தும் இருக்கலாம். அதுவும் வேறு விடயம். ஆனால், அதற்காக மு.கா.வின் ஆதிக்கவும் அரசியல் அதிகாரமும் முற்றுமுழுதாக கிழக்கிற்கு வெளியே சென்றுவிட இடமளிக்கமுடியாது.

மு.கா.வின் உள்வீட்டுத் தகவல்களில் படி, இம்முறை நடைபெறும் பேராளர் மாநாட்டில் பாரிய யாப்புத் திருத்தங்கள் மேற்கொள்ளபடுவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவு என்று கூறப்படுகின்றது. இதுபற்றி விரிவாக விவாதிக்கப்படாமையால் சிறுசிறு மாற்றங்கள் இடம்பெறவே சாத்தியம் அதிகமுள்ளது. எனவே, உட்கட்சி ஜனநாயகமும் அதிகார பங்கீடும் எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பதில் ஐயமுள்ளது.

என்ன நடக்கும்?

இதேவேளை, பல குறைநிறைகள், விமர்சனங்கள் இருந்தாலும் மு.கா.வின் முக்கிய மூத்த உறுப்பினர்களும் கிழக்கைச் சேர்ந்தவர்களுமான செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன்அலியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இவருக்கே அதிகாரமுள்ள பதவியை வழங்க வேண்டும் என்ற அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் முழு அதிகாரமுள்ள அப்பதவி அவருக்கு வழங்கப்படுவதற்கான நிகழ்தகவுகள் குறைந்து விட்டன. அதேபோன்று, தவிசாளர் பசீரிற்கும் அப்பதவி கிடைக்கப் போவதில்லை. மாறாக, இவ்விரு பதவிகளுக்கும் பதிலாக வேறு இருவர் நியமிக்கப்படலாம்.

இங்குதான் கவனிக்க வேண்டும்! கட்சிக்குள் ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்கும் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்குமான திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு உறுப்பினர்களும் பேராளர்களும் முழுமுயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக, கிழக்கிற்கான அதிகாரம், மு.கா.வில் கிழக்கு மக்களுக்கு இருக்கின்ற உரிமை எல்லாவற்றையும் முறையாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கொழும்பில் இந்த மாநாட்டை நடாத்தி, கிழக்கிற்கு வெளியில் இருந்து வரும் ஆட்களின் பிரச்சன்னத்துடன் ஹசன்அலி, பசீர் போல கிழக்கைச் சேர்ந்தவர்களை கட்சியை விட்டு தூரமாக்கி தமக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்ள யாராவது நினைக்கின்றார்களா என்பதை நன்றாக சிந்தித்து செயற்பட வேண்டும்.

அந்தவகையில், கிழக்கிற்கு தலையீடற்ற சம அதிகாரம் கிடைப்பதை தலைவரும் உயர்பீட உறுப்பினர்களும் மாநாட்டு பிரதிநிதிகளும் உறுதிப்படுத்த வேண்டும். இந்த இடத்தில் இணைத் தலைமை அல்லது இரட்டைத் தலைமைத்துவங்களை உருவாக்கி அதில் ஒன்றை கிழக்கிற்கு வழங்குவதை பற்றி சிந்திக்கலாம். மு.கா. தலைவர் மீது தேவையற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதை இது தவிர்ப்பதுடன், அவரது சுமையையும் குறைக்கும்;.

ஒருவேளை அது சாத்தியமில்லை என்றால், குறைந்தபட்சமாக – 2015ஆம் ஆண்டு யாப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை மாற்றியமைத்து, அதிகாரமுள்ள செயலாளர் பதவியும் மற்றும் தவிசாளர் பதவியும் உருவாக்கப்படுவதுடன் அவை கிழக்கைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். அவர்கள் கட்சியில் சிரேஷ்டமானவர்களாக, மக்களுக்கு விசுவாசமானவர்களாக, துணிச்சலுள்ளவர்களாக இருக்க வேண்டும். அதைவிடுத்து, ஆமா போடுபவர்கள் அப்பதவிகளுக்கு வருவதற்கு பேராளர்கள் யாரும் ‘நாரே தக்பீர்’ சொல்லி சம்மதம் தெரிவித்துவிட வேண்டாம்.

அதேநேரம், முஸ்லிம்களின் தாய்க்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் இருக்கின்ற மேற்சொன்ன எல்லாப் பிரச்சினைகள் பரிகாரம் காண்பதற்கும், கட்சிக்குள் நடந்ததாக சொல்லப்படுகின்ற மோசடிகளின் உண்மை கண்டறிவதற்கும் ஆவன செய்கின்ற ஒரு நிகழ்வாக இது அமைய வேண்டும்.

மிக முக்கியமாக, இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம், அரசியலமைப்பு மறுசீரமைப்பு, அரசியல் தீர்வில் அவர்களுக்குரிய பங்கு, வடக்கு – கிழக்கு இணைப்பு விவகாரம் போன்ற ஏனைய தேசிய அளவிலான மக்கள்சார் பிரச்சினைகள் குறித்து, ‘நிறைவேற்றும் நோக்கிலான தீர்மானமெடுக்கும்’ சந்தர்ப்பமாக இன்றைய மாநாடு அமைவதை கட்சியின் உறுப்பினர்களும் பேராளர்களும் போராளிகளும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பி.எம்.ஐ.சி.எச்.இற்கு கண்காட்சி பார்க்கப் போனது போல் ஆகிவிடக் கூடாது!

– ஏ.எல்.நிப்றாஸ்
(வீரகேசாி 12.02.2017)