ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் அசையும் அசையா சொத்து விபரங்களை கோரியுள்ள ஒபேசேகர

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் அசையும் அசையா சொத்து விபரங்களை கோரியுள்ளதாக ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசேகா ஒபேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த கோரிக்கைக்கு அமைய தகவல் தரப்படுமா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் 17 ஆம் திகதிக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் தமது சொத்து விபரங்கள் குறித்து அறிவிக்க ஜனாதிபதியும் பிரதமரும் 14 நாட்கள் காலஅவகாசத்தை எடுத்துக்கொள்ள முடியும்.

இந்த காலஅவகாசத்திற்குள் தகவல்களை தரவில்லை என்றால் தகவல் அறியும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்படும் எனவும் ஒபேசேகர குறிப்பிட்டுள்ளார்.

அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பு 50 வீதத்திற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்கள் அடங்கிய ஆவணங்களை பெற்றுக்கொண்டுள்ளது.