முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பான பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அதிரடியாக அவர் முதலமைச்சர் பதவிக்கு வரும் வகையில் சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவியேற்பு விழாவிற்கான நடைமுறைகள் தொடங்கி உள்ள நிலையில், ராஜினாமா செய்த முதலமைச்சர் பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.
சில எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர். சசிகலாவை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் இன்று மாலை கவர்னரை சந்திக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், திடீர் திருப்பமாக கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் இன்று மதியம், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு வந்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் ஓ.பன்னீர்செல்வத்துடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுசூதனன் கூறியதாவது:-
அ.தி.மு.க. காப்பாற்றப்பட வேண்டும். எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கத்தை காக்கவே முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளித்துள்ளேன்.
சசிகலாவை அ.தி.மு.க.வினர் நிராகரிக்க வேண்டும். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருதுகிறேன். ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர் ஓ.பன்னீர்செல்வம். யாருடைய நிர்பந்தமுமின்றி அவருக்கு ஆதரவு அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பேசிய முதலமைச்சர் பன்னீர்செல்வம், உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதும் கழகத்தை வளர்க்க அரும்பாடு பட்டவர் மதுசூதன் என பாராட்டினார்.
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசும்போது, கட்சியில் குடும்ப ஆதிக்கத்தை தடுக்க வேண்டும் என்று கூறியதுடன், எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்தவர் மதுசூதனன் என்றும் பாராட்டினார். ஓ.பன்னீர் செல்வம் மக்கள் புரட்சியை தொடங்கியிருப்பதாக பி.எச்.பாண்டியன் பேசினார்.