ஏறாவூர் இரட்டைக் கொலை – நீதிமன்றில் இரகசிய வாக்குமூலம் வழங்கிய இரண்டாவது சாட்சி

மட்டக்களப்பு ஏறாவூரில் அண்மையில் இடம்பெற்ற இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பாக இரண்டாவது சாட்சியாளரிடம் நீதிமன்றில் இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதேவேளை ஏறாவூர் இரட்டைக்கொலைச் சந்தேகநபர்கள் ஆறுபேரின் விளக்கமறியல் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சந்தேகநபர்கள் ஆறுபேரும் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டதை அடுத்து இவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி எம்.ஐ.எம் றிஸ்வி உத்தரவிட்டுள்ளார்.

ஏறாவூர் முகாந்திரம் வீதி முதலாம் ஒழுங்கையிலுள்ள வீட்டில் படுத்துறங்கிய 56 வயதான என்எம்.சித்தி உஸைரா மற்றும் அவரது திருமணமான மகளான 32 வயதுடைய ஜெனீரா பாணு மாஹிர் ஆகியோர் அண்மையில் பொல்லால் அடித்து கொடூரமாகக்கொலை செய்யப்பட்டிருந்தனர்.

இச்சம்பவம் குறித்த சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டவேளை வசம்பு என்றழைக்கப்படும் 28 வயதுடைய உசனார் முஹம்மது தில்ஷான் இரகசிய வாக்குமூலம் வழங்க அனுமதியளிக்குமாறு கேட்டுக்கொண்டதையடுத்து இவ்வழக்கு விசாரணை சில நிமிட நேரம் ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் தனியாக அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.

கடந்த தவணையின்போதும் இவர் இரகசிய வாக்குமூலம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

24 வயதுடைய முஹம்மது பாஹிர், வசம்பு என்றழைக்கப்படும் 28 வயதுடைய உசனார் முஹம்மது தில்ஷான், 23 வயதுடைய கலீலுர் ரகுமான் முஹம்மது றாசிம், 23 வயதுடைய புஹாரி முஹம்மது அஸ்ஹர், 30 வயதுடைய இஸ்மாயில் சப்ரின் மற்றும் 50 வயதுடைய அபூபக்கர் முகம்மது பிலால் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.