மத்திய கோர்ட்டின் தடை உத்தரவை எதிர்த்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வழக்கு

ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சூடான், சோமாலியா, ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளுக்கு ‘விசா’ வழங்குவதை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தார்.

அதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கூடி அதிபர் டிரம்புக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். நேற்று வாஷிங்டன், மியாமி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களான லண்டன், பாரீஸ், பெர்லின், ஸ்டாக் கோம், பார்சிலோனா உள்ளிட்ட இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் டிரம்பின் ‘விசா’ தடை உத்தரவுக்கு அமெரிக்கா முழுவதும் தற்காலிக தடை விதிக்கப்பட்டது. சியாட்டில் மத்திய கோர்ட்டு நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட் அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இது டிரம்பின் அரசு அதிகாரத்துக்கு பின்னடைவாக கருதப்பட்டது.

இதற்கிடையே, மத்திய கோர்ட்டின் தடை உத்தரவை எதிர்த்து அமெரிக்க அரசின் நீதித்துறை மேல்கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளது. மேலும் அதிபர் டொனால்டு டிரம்ப், உள்துறை ஜான் கெல்லி, வெளியுறவு துறை மந்திரி ரெஸ் டில்லர்சன் ஆகியோரும் சியாட்டில் மத்திய கோர்ட்டு தடை உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அமெரிக்காவின் பாதுகாப்புக்காகத்தான் ‘விசா’ வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அவசர வழக்காக விசாரித்து தடையை உடனே நீக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.