உயர் பீட உறுப்பினர்களே, 12ம் திகதியின் பின் ”கிழக்கின் துரோகிகளாக” ஊர் திரும்ப வேண்டாம்

தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்களைக் களையும் வரை, ஹகீம் அவர்கள் தானாகவே முன்வந்து தமது பதவியைத் துறந்து ஒரு அழகிய முன்மாதிரியை காட்டக்கூடிய ஒரு தன்மானமுள்ள தலைவரல்ல.
கட்சிக்கும், ஹகீமை தலைவராக்கி, அமைச்சராக்கி அழகு பார்த்த போராளிகளுக்கும், முழு முஸ்லிம் சமுதாயத்திற்கும, இஸ்லாத்திற்கும்  இழுக்கு ஏற்படும் விதத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஹக்கீம் தலைமைப் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டும்.
இதுவரை காலமும் முஸ்லிம்களது எந்தப் பிரச்சினைக்கும் வாய் திறவாது மௌனியாக இருந்து சமூகத்தை அடமானம் வைத்தது, தனது சொந்தப் பாவக்கறைகளை மறைப்பதற்காக அன்றைய அரசுகளின் கால்களில் விழுந்து பேரம் பேசும் சக்தியை இழந்ததனால்தான் என்ற உண்மை காலதாமதமாக இப்போதுதான் எமக்குத் தெரிகிறது.
ஒரு தனி மனிதனின் ஆசாபாசங்களுக்காக ஒரு சமூகத்தின் அபிலாஷைகள் அடகு வைக்கப்பட்டதன் வலியைக்கூட உணர்ந்து கொள்ள முடியாத உணர்ச்சியற்ற மக்கள் கூட்டமாக  நம்மை மாற்றி வைத்ததன் பிரயோசனங்களை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துமாற் போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நபர் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட முடியும் என்று கட்சியின் யாப்பு அத்தியாயம் 8, பிரிவு 13.1, உப பிரிவு (b) சொல்கிறது.
ஹகீம் அவர்கள் தவறுகளுக்கும் பாவங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு தேவ தூதர் அல்ல. அவரிடம் உள்ள அதிகாரங்கள் அனைத்தும், நாம் அவருக்குக் கொடுத்த இரவல் அதிகாரிகள்தான். அதைக்கண்டு நீங்கள் மிரள வேண்டியதில்லை.
இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் பன்னிரெண்டாம் திகதி நடைபெற உள்ள பேராளர் மாநாட்டில், ஹகீம் அவர்களை பதவியிறக்குங்கள். பதினாறு நீண்ட நெடிய வருட காலத்தை அவர் ஆண்டு அனுபவிக்கக் கொடுத்துவிட்டோம். இக்காலத்தில் குறைந்த பட்சம் கரையோர மாவட்டத்தையேனும் பெற்றுத்தராத கையாலாகாத்தனத்தை பொறுத்தது போதும்.  இனியாவது கிழக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகள் வெல்லப்பட வேண்டும். தலைமையை தற்காலிகமாக என்றாலும் கிழக்கிற்கு கொண்டு வாருங்கள். பின்னர் மிகவும் பொருத்தமான நம்மில்  ஒருவருக்கு  வழங்குவோம்.
பன்னிரெண்டாம் திகதி மீண்டும் ஒருமுறை ஹகீமை தலைவராக தேர்ந்து, கிழக்கு முஸ்லிம்களின் முதுகில் குத்திய, ”கிழக்கின் துரோகிகளாக” ஊர் திரும்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸடீன்
செயலாளர்
கிழக்கின் எழுச்சி