பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் எழு பேருக்கு எதிரான அறிவிப்பை நீக்குமாறு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கமைய அந்த அறிவிப்பை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
நீதி அமைச்சர் விஜயதாச அதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளதுடன், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள ஏழு முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு கேட்டுள்ளார். அதற்கமைய, இன்று வியாழக்கிமை விஜயதாசவுக்கு அந்தத் தகவல்களை ஹிஸ்புல்லாஹ் எழுத்து மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக செயற்பட்ட காரணத்தினால் 1804 ஜுன் மாதம் 4ஆம் திகதி தேசத்துரோகிகளாக அறிவிக்கப்பட்ட 7 முஸ்லிம்களையும், நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய முஸ்லிம் தலைவர்கள் என வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்துமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த ஜனவரி 24ஆம் திகதி ஹிஸ்புல்லாஹ் கடிதம் அனுப்பி வைத்திருந்தார்.
அக்கடிதத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மீரா ஒசன் அவ்வக்கர் (ராய்மூனை), ஒசன் லெப்பை உதுமா லெப்பை (ராய்முனை), அவ்வக்கர் ஈஸா முகாந்திரம் (சம்மாந்துறை), அனீஸ் லெப்பை (மருதமுனை) ஆகியோரும், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சேகு தீதி (தோப்பூர்), சலம்பதி உடையார் (குச்சவெளி), பீர் முகம்மது ஆகியோரும் இவ்வாறு தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.