சுற்றுலாப் பயணிகளுக்கு வீசா வழங்கும் போது சுகாதாரப் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக அயல்நாடுகளிலிருந்து சுற்றுலா வீசாவில் வந்து செல்வோர் காரணமாக பல்வேறு வியாதிகள் பரவும் வாய்ப்பு காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் குறித்து கடுமையான சுகாதார பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் பல் மருத்துவக் கட்டிடத்தொகுதியை திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
சுற்றுலாப்பயணிகள் என்ற போர்வையிலேயே இந்நாட்டுக்குள் போதைப் பொருட்களும் கடத்தி வரப்படுகின்றன. அத்துடன் இலங்கையில் தற்போது மலேரியா முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது.
எனினும் அண்மைக்காலத்தில் மீண்டும் மலேரியா நுளம்புகள் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மூலமாவே இவை நாட்டுக்குள் வந்திருக்கலாம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.