எல்லை நிர்ணய முறைப்பாட்டு விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையில் குறைபாடுகள், தவறுகள் இருக்கின்றன.
அவற்றைக் கருத்திற் கொண்டு ஒரு மாத காலத்துக்குள் எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவின் சட்டத்தரணி தெரிவித்தார்.
பெப்ரல் அமைப்பு உள்ளூராட்சித் தேர்தல் காலதாமதப்படுத்துவதற்கு எதிராகவும், விரைவில் உள்ளூராட்சி மன்றத்தேர்தலை நடாத்தும்படி உத்தரவிடுமாறும் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நேற்று இடம்பெற்றது.
இந்த விசாரணையின் போது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரொமெஷ் டி சில்வா இவ்வாறு தெரிவித்தார்.
பெப்ரல் அமைப்பு தாக்கல் செய்திருந்த வழக்கில் பிரதிவாதிகளாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, அமைச்சின் செயலாளர், எல்லை நிர்ணய முறைப்பாட்டு விசாரணைக் குழுவினர் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய காலத்தில் நடாத்தப்படாது கால தாமதப்படுத்தப்பட்டு வருவது ஜனநாகய உரிமை மீறல் என பெப்பரல் அமைப்பு தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.