சுகாதார அமைச்சின் விவகாரங்களில் தலையீடு செய்யவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் சில பதவி நியமனங்களில் தலையீடு செய்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் சில பதவி நியமனங்கள் விடயத்தில் தலையீடு செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
எந்தவொரு அமைச்சின் பதவி நியமனங்களிலும் நான் தலையீடு செய்தது கிடையாது.
நியமனங்கள் தொடர்பில் எந்தவொரு அமைச்சிலும் தலையீடு செய்து தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தியதில்லை.
நான் சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் மருத்துவர்கள் மற்றும் தாதியரின் இடமாற்றங்கள் தொடர்பில் கூட பணிப்புரைகளை விடுத்தது கிடையாது.
குறித்த திணைக்களங்கள் நிறுவனங்களின் தலைவர்கள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் எனவும் அதில் நான் தலையீடு செய்வதில்லை எனவும் கூறியுள்ளேன்.
அமைச்சர்களே அமைச்சிற்கு பொறுப்பாக செயற்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.
அவ்வாறான ஓர் நிலையிலேயே அமைச்சின் பணிகள் சீரான முறையில் மேற்கொள்ளப்பட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.