அமெரிக்க ஜனாதிபதியாக சமீபத்தில் பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக உள்நாட்டுப்போரில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவுக்கு வர காலவரையற்ற தடை விதித்தார்.
மேலும், ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து டிரம்ப் உத்தரவிட்டார். அதிபர் டிரம்ப்பின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டிரம்ப் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றங்கள், டிரம்பின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளன.
இந்நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ”எனது அறிவிப்பை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராக நான் எந்த தடையும் விதிக்கவில்லை. பல்வேறு நாடுகளில் இருந்து குடியேறியவர்கள் என்ற பெருமையை பெற்றது அமெரிக்கா. இந்நிலையில் அகதிகளுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கப்படும். உலகில் மொத்தம் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் முஸ்லீம்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு இந்த உத்தரவால் எந்த பாதிப்பும் இல்லை.
நாங்கள் சில பாதுகாப்பு தன்மைகளை உறுதிபடுத்திய பின்னர் அனுமதி அளிக்கப்படும். இந்த முடிவு மதம் சம்பந்தப்பட்டது அல்ல. பயங்கரவாதம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. கடந்த 2011ஆம் ஆண்டிலும் ஒபாமா ஈராக் அகதிகள் மீது ஆறு மாதங்களுக்கு தடை விதித்து இருந்தார். அதே போன்ற நடவடிக்கை தான் இப்போதும் எடுக்கப்பட்டுள்ளது. இது எல்லா ஊடகங்களுக்கும் தெரியும். ஆனாலும் மறுத்து செய்தி வெளியிடுகின்றன” என தெரிவித்துள்ளார்.