சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டதன் பின்னரே எதிர்வரும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
புதிய தேர்தல் முறைமை தொடர்பிலான கட்சிகளின் நிலைப்பாடு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பிலும் கருத்து தெரிவித்தார்.
பெலவத்தை மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
எதிர் வரும் செப்டெம்பர் மாதத்திற்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. அதனால் செப்டெம்பர் மாதத்திற்கு முதல் தேர்தல் நடத்தப்படுமாயின் அது சுயாதீன ஆணைக்குழு உருவாக்கப்பட்டதன் பின்பே இடம்பெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. 19 ஆவது திருத்தம் எதிர்பார்த்த பலனை தராவிடினும் சிறிது நன்மை பயக்கும் காரணிகளுடன் நிறைவேற்றப் பட்டுள்ளது.
அதனால் தேர்தல் முறையிலும் விரைவில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. தற்போதுள்ள தேர்தல் முறைமைக்கு மக்கள் விடுதலை முன்னணி ஒரு போதும் ஆதரவு வழங்காது. மாறாக புதிய முறை உருவாக்கப்படுமாயின் அதனில் ஜனநாயகம் பாதிக்காவண்ணம் உருவாக்கப்பட வேண்டும்.
புதிய முறையில் கட்சிக்கு ஒரு வாக்கு சீட்டு வேட்பாளருக்கு வாக்கு சீட்டு என்ற வகையில் இருக்குமாயின் புதிய தேர்தல் முறைமை சிறந்ததாக அமையும் என எதிர்பார்க்கிறோம்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி தலைமையில் நேற்றுமுன்தினம் தேர்தல் முறை தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதனால் தேர்தல் முறை குறித்த சரியான முடிவொன்று இது வரையில் எடுக்கப்படவில்லை என அறிய முடிகிறது.
சிறு கட்சிகளிடையேயும் தேர்தல் முறை தொடர்பிலான இறுதி முடிவொன்று எட்டப்படவில்லை. முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியமை தொடர்பில் அச்சப்படத் தேவையில்லை. முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த சொந்தங்களுக்காகவே அப்பிரதேச மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது